06.04.19- கதிர்காம ஆடிவேல்திருவிழா உற்சவகாலம் தொடர்பில் குழப்பமா..

posted Apr 5, 2019, 5:45 PM by Habithas Nadaraja   [ updated Apr 5, 2019, 6:00 PM ]
கதிர்காம ஆடிவேல்திருவிழா உற்சவகாலம் தொடர்பில் குழப்பமா?
கதிர்காம பாதயாத்திரீகர்சங்கம் மொனராகலை அரசஅதிபரிடம் மனு!

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமம் ஆடிவேல்திருவிழா நடைபெறும் உற்சவகாலம் தொடர்பாக வேறுபட்டதினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதனையடுத்து அதனை தீர்த்துவைத்து உரிய சரியான காலத்தை அறிவிக்குமாறு கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் மொனராகலை அரசாங்க அதிபரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இருமாதகாலத்திற்கு முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்து பாதயாத்திரையை மேற்கொள்ளும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைச் சங்கத்தினர் இவ்வேண்டுகோளை எழுத்துமூலம் விடுத்துள்ளனர்.

சங்கத்தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் மொனராகலை அரச அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது நாம் வருடாந்தம் யாழ். செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்வதை தாங்கள் அறிவீர்கள்.

இந்தவருடம் அஸ்ட்டலக்ஷமி தமிழ்கலண்டரில் கதிர்காமக் கொடியேற்றம் 02.07.2019இல் நடைபெறுமென்றும் தீர்த்தோற்சவம் 18.07.2019இல் நடைபெறுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஆங்கில கலண்டரில் கதிர்காம எசலபெரஹரா 16.07.2019இல் நடைபெறுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கதிர்காமம்.கொம் இணையத்தளத்தில் கதிர்காமக் கொடியேற்றம் 31.07.2019இல் நடைபெறுமென்றும் தீர்த்தோற்சவம் 15.08.2019இல் நடைபெறுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எங்களைப்பொறுத்தவரை குழப்பமாகவுள்ளது. எனவே நாங்கள் முறைப்படி பாதயாத்திரையை உரியதினத்தில் ஆரம்பிப்பதற்கு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக கதிர்காம உற்சவ காலத்தை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றோம். 

கடந்த காலத்தில் இப்படியானதொரு சர்ச்சை நிலவியபோது அந்த வருடம் தாம் ஒருமாதகாலம் சொல்லொணாக் கஸ்ட்டப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் இடைநடுவில் தாமதிக்கவேண்டி ஏற்பட்ட அவலநிலையை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்படி இந்தவருடம் இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே உரியதினத்தில் பாதயாத்திரையை ஆரம்பிப்பதற்கு வசதியாக கதிர்காம உற்சவகாலத்தை முன்கூட்டியேகோரி நிற்கின்றோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

(காரைதீவு  நிருபர் )
Comments