06.06.18- மரணத்திலிருந்து என்னை மீட்டது தெய்வசங்கல்பமே! தமிழின்னிய உபகரணங்கள் வழங்குவிழாவில் முன்னாள் மா.ச.உறுப்பினர் இராஜேஸ்வரன்!

posted Jun 5, 2018, 6:47 PM by Habithas Nadaraja
கடந்தகாலங்களில் நான்செய்த மக்கள் சேவைகள்தான்  என்னை மரணத்தின் பிடியிலிருந்து என்னை மீட்டது. அது தெய்வசங்கல்பத்தால் நடந்தது என்று நினைக்கிறேன். எனவே எனது உடலிலிருந்து உயிர் பிரியும்வரை தமிழ்மக்களுக்கான சேவை தொடரும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரிக்கு தமது நிதியொதுக்கீட்டில் கொள்வனவுசெய்யப்பட்ட தமிழின்னிய இசைக்கருவிகளை வழங்கிவைத்துரையாற்றுகையில் அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு  நேற்று (05.06.2018)  கல்லூரி அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் பாடசாலை அபிவிருத்திச்சங்க முன்னாள் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சிறப்பதிதிகளாகக்கலந்துகொண்டனர்.

திரு.மு.இராஜேஸ்வரன் மேலும் பேசுகையில்:

நான் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசமெங்கும் என்னால் முடிந்த உதவியை சேவையைச்செய்து வந்துள்ளேன். அதன் ஓரங்கமே இப்பாடசாலைக்கான இவ்வுதவி.

கடந்தவருடம் இங்குவந்தபோது பா.அ.சங்கச்செயலாளராகவிருந்த எனது நண்பர் சகா விடுத்து வேண்டுகோளையேற்றே 75ஆயிரம் ருபாவை ஒதுக்கி இந்த தமிழின்னியத்தை உங்களுக்கு வழங்கமுடிந்துள்ளது.

தவிசாளர் ஜெயசிறில் நண்பர் சகா விடுத்த சகல வேண்டுகோள்களையும் இந்தக்கிராமத்திற்காக நிறைவேற்றிவந்துள்ளேன். மேலும் தெரிவாகும்சந்தர்ப்பத்தில் முடிந்த உதவிகளைச்செய்வேன். என்றார்.

தவிசாளர் கி.ஜெயசிறில் உரை நிகழ்த்துகையில்:

கல்விக்கு நான் உச்சக்கட்ட உதவிகளை வழங்க சித்தமாயுள்ளேன். இங்கு முன்முகப்புபற்றிக்கூறப்பட்டது. ஏலவே வாக்குறுதியளித்தவர் செய்யாவிட்டால் நான் அதனைச்செய்துதருவேன்.

நண்பர் இராஜேஸ்வரன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். பாராட்டுக்கள். நானும் சொல்வதைச்செய்வேன். செய்யமுடியாத வாக்குறுதியை வழங்கத்தயாரில்லை. 

காரைதீவின் உயர்நிலைப்பாடசாலையான இப்பாடசாலை சகலதுறைகளிலும் உயர்ந்து மிளிரவேண்டும். அருகிலுள்ள மைதானத்தையும் கவனிக்கவேண்டுமென பா.அ.சங்க முக்கியஸ்தர் சகா கேட்டுக்கொண்டார். நான் அங்கு மின்விளக்குகளைப் பொருத்த ஏலவே நடவடிக்கைஎடுத்துள்ளேன். மேலும் பல வேலைத்திட்டங்களை செய்யவும் தயாராகவுள்ளேன். என்றார்.

இறுதியில் தமிழின்னிய இசைக்கருவிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.பிரதிஅதிபர் பா.சந்திரேஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்தளிக்க ஆசிரியர் கே.ஜெயமோகன் நன்றியுரையாற்றினார்.

(காரைதீவு  நிருபர்)

Comments