06.12.17- இன்று அம்பாறையில் கட்டுப்பணம் செலுத்திய காரைதீவு சுயேச்சைக்குழு..

posted Dec 6, 2017, 8:51 AM by Habithas Nadaraja   [ updated Dec 6, 2017, 9:02 AM ]
அம்பாறை மாவட்டத்தில் காரைதீவுப் பிரதேச சபையில் போட்டியிட சுயேச்சைக்குழு இன்று (06.12.2017)  புதன்கிழமை கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரத்ன முன்னிலையில் 70ஆயிரம் ருபா கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

சுயேச்சைக்குழுத்தலைவர் ச.நந்தகுமார் இக்கட்டுப்பணத்தைக்கையளித்தார். அவருடன் மற்றுமொரு வேட்பாளர் ந. ஜெயகாந்தன் ஆதரவாளர்களான மு.ரமணீதரன் வெ.வேற்குமரன் எஸ்..புவனேந்திரராஜா ஆகியோர் சென்றிருந்தனர்.

இன்று  புதன்கிழமை சரியாக 12.30மணியளவில் சுபநேரத்தில் காரைதீவுப்பிரதேசபைக்கான முதலாவது அணி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்ட உதவிதேர்தல் ஆணையாளர்திலின விக்ரமரத்ன அவர்களுக்கு வாழ்த்துக்கூறி தேவயான ஆவணங்களை கையளித்து பூரண தெளிவு விளக்கத்தையும் வழங்கியுள்ளார். எதிர்வரும் 14ஆம் திகதி 12 மணிக்கு இங்கு வருகை தரவேண்டும் அதன்பிறது தங்களுக்கான சின்னம் வழங்கப்படுமெனவும் கூறியிருக்கிறார்.

கட்டுப்பணம் செலுத்தியபின்பு காரைதீவுக்கான சுயேச்சைக்குழுத்தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் தெரிவிக்கையில்:

காரைதீவு ஊர்ப்பொதுமக்களின் தீர்மானத்திற்கமைவாக தெரிவான மகாசபையின் ஏகோபித்த முடிவுக்கமைவாக காரைதீவில் தமது இருப்பைத்தக்கவைப்பதற்காக கட்சிபேதமின்றி  சுயேச்சைஅணியிலேயே இம்முறை போட்டியிடுவது என்ற ஊர்மக்களின் ஆணைக்கமைவாக இன்று நாம் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளோம்.

மிகவும் பலம் வாய்ந்த வேட்பாளர் குழுவைக்கொண்ட இச் சுயேச்சை அணி இம்முறை காரைதீவு பிரதேசசபையைக் கைப்பற்றும் என்பதில் பூரண நம்பிக்கை உள்ளது. 

வீரமும் கல்வியும் நிறைந்த முத்தமிழ்வித்தகன் பிறந்த காரைதீவு மண் வடக்கு கிழக்கில் ஊர்மக்களின் ஏகோபித்த ஒற்றுமையின்கீழ் வரலாறு படைக்கவிருக்கிறது. 

காரைதீவில் வேறெந்த கட்சியோ சுயேச்சையோ களமிறங்காது என்பது ஊர்மக்களின் கட்டுப்பாடு. மேலும் ஊர்மக்களின் ஆணையாக சுயேச்சை அணி இருப்பதால் எமக்கு எவ்வித சவாலும் இருக்கப்போவதில்லைஎன்றார்.

(காரைதீவு  நிருபர் )


Comments