07.08.18-  பிரதேசசபை முன் ஊழியர்கள் நிரந்தர நியமனம்கோரி ஆர்ப்பாட்டம்..

posted Aug 6, 2018, 6:00 PM by Habithas Nadaraja
காரைதீவு பிரதேசசயையில் 12 ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் அரசியல் ரீதியாக புதிதாக ஒருவருக்கு   நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்து நேற்று (06.08.2018) காலை  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேசசபை பிரதான நுழைவாயல் முன்றலில் கூடாரமிட்டு அங்கு  பணியாற்றிவரும் அமைய சக ஊழியர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலையில் சிலமணிநேரம் வாயிலைப்பூட்டிவைத்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். அப்போது யாருமே உள்ளேசெல்லமுடியவில்லை.

எனினும் சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் ஊழியர்களுடன் கலந்துரையாடி அலுவலககடமைகளை செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அலுவலக நிரந்தரஊழியர்கள் உள்ளே கடமைக்குச்சென்றனர்.

அலுவலக பணிகள் தங்குதடையின்றி நடைபெற்றபோதிலும் பொதுமக்கள் உள்செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதற்கேற்றவாறு பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்தனர்.தவிசாளர் கி.ஜெயசிறில் திருமலைக்குச்சென்றதாகக்கூறப்பட்டது. ஆதலால் அவர் அங்கில்லை.

ஏனைய அமையஊழியர்கள் பிரதானவாயிலுக்கு முமுன்பாக இருந்து பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். 

சபை நுழைவாயிலை மூடி வெளியாரை உள்ளேசெல்லவிடாமல்  கோசமெழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல சுலோகங்களடங்கிய பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.
இதனால் நேற்று குப்பை அள்ளும் பணிகள் தடைபட்டிருந்தன. ஏனைய சில நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமமடைந்திருந்தன.

திருமலையில் நிற்கும் காரைதீவுபிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது:

'எமது ஊழியர்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வுகாணுமுகமாகவே நான் இன்று அதிகாலையில் எழுந்து திருமலைக்கு வந்துள்ளேன். கிழக்குமாகாண ஆளுநருடன் பேசி அவர்களுக்கு நிரந்தரநியமனம் எடுத்துக்கொடுக்க நடவடிக்கைஎடுப்பேன் 'என்றார்.


ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சார்பில் சி.காங்கேயன்  அ.நிசானி   ஆகியோர் கருத்து தெரிவிக்கையில்:

காரைதீவு பிரதேச சபையில் சுகாதாரம் மற்றும் வேலைப் பிரிவுகளில் 12 பேர் நீண்ட காலமாக அமைய ஒப்பந்த மாற்று நிலை நிமிர்த்த அடிப்படை என்று தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருகின்நோம்.. இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் எம்மில் சிலர் தமது வயது எல்லையை தாண்டிச் செல்கின்றனர். பின்பு வயது போய்விட்டதே என்று எம்மை புறந்தள்ளுவார்கள்.

எவ்வாறாயினும் என்றோ ஒரு நாள் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும்நாம்  கடமையாற்றி வருகின்ற நிலையில் அரசியல் ரீதியாக கிழக்கு மாகாண ஆளுநரினால் புதிதாக சிலருக்கு கல்முனை மாநகர சபைக்கு வழங்கியயது போல் காரைதீவு பிரதேசசபைக்கும்  நிரந்தர தொழில் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.. இது போன்று ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் முறைகேடான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தர நியமனம் வழங்குவதாயின் பகிரங்கமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் அல்லது செயலாளரின் பரிந்துரையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதி முறைகளை மீறி அரசியல்சக்திகளின் துணையுடன் ஆளுநர் தன்னிச்சையாகவே இந்நியமனங்களை வழங்கியிருக்கிறார்.

இது உண்மையில் கடந்த பல வருடங்களாக குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்ற எம்போன்ற ஊழியர்களுக்கான நிரந்தர நியமனத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் தொழிலை இழக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் ரீதியான நியமன நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆகையினால் புதிய நபர்களுக்கான நியமனத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு வேண்டுகின்றோம். இவ்விடயத்தில் தவிசாளரின்  ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் ஆளுநரையும் நேரடியாக சந்தித்து எமது கோரிக்கையை வலியுறுத்தவுள்ளோம். எமது கோரிக்கைக்கு செவிசாய்த்து உரிய தீர்வைத்தராவிட்டால் அனைவரும் தொடர்ந்து பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்வோம்.

எதிர்க்கட்சித்தலைவர் பிரதமர் ஜனாதிபதி ஆகியோர் தலையிட்டு எமக்கு நிரந்தரநியமனம் தரநடவnக்கைஎடுக்கவேண்டும். இன்றேல் எமது போராட்டம் உண்ணாவிரதப்போராட்டமாக மாறும்.' என்றார்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக  பிரதேசசபைக்கு போட்டியிட்ட சுயேச்சை பிரதிநிதி கி.குமாரசிறி கருத்துரைத்தார்.Comments