07.08.19- சித்தர் வாழ்வில் இடம்பெற்ற ஒரு சம்பவம்..

posted Aug 6, 2019, 5:58 PM by Habithas Nadaraja
சித்தர் வாழ்வில் இடம்பெற்ற ஒரு சம்பவம்!

இன்று(07.08.2019)  ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 68ஆவது குருபூஜை. அதனையொட்டி இக்கட்டுரை வெளிவருகிறது.

இன்றுடன் சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகள் காரைதீவு மண்ணில் சமாதி அடைந்து 68 வருடமாகிறது.தென்னிந்தியாவிலே இராமநாதபுரத்தில்பெருநாளி என்பது சிற்றரசர் ஒருவருடைய இராசதானி.அந் நாட்டு சிற்றரசருக்கு ஒரே ஒரு மகன் அவருடைய பெயர் கோவிந்தசாமி.

கோவிந்தசாமி அரச குடும்பத்திலே பிறந்து வாழ்ந்தும் அவருக்கு அரச போகங்களில் நாட்டம் ஏற்படவில்லை.கோவிந்தசாமியின் உள்ளம் துறவை நாடியது.

இந்த கோவிந்தசாமியே இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காரைதீவில் 1951இல் சமாதியடைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சித்தர் ஆவார். அவரது வாழ்வில் எத்தனையோ உண்ணிலடங்கா சித்துக்கள் புதுமைகள் இடம்பெற்றிருந்தன. சுழாவை அறியக்கிடைத்தன. இன்னும் பல அறியப்படவில்லைஇந்நிலையில் அவரது வாழ்வில் இடம்பெற்ற மற்றுமொரு மாபெரும் துறவியுடன் இடம்பெற்ற சம்பவத்தை தொகுத்துத்தருகிறோம்.

நாய் கட்டாதவன் சாமியாவதெப்படி?

கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்றொரு ஊர் இருக்கிறது என்பதை உலகறிய செய்த பெருமை சுவாமி விபுலானந்த அடிகளாருக்குரியதாகும்.சாதுக்கள் உலகத்தில் காரைதீவை உதயசூரியனாக்கிய பெருமை ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளை சேர்ந்ததாகும்.

ஒருநாள் நண்பகல் நேரம் சித்தானைக்குட்டி சுவாமிகள் கல்முனை இராமக்கிருஷ்ணமிஷன் பாடசாலை ஒழுங்கையால் சென்று கொண்டு இருந்தார்.பாடசாலை வாயிலை அடைந்ததும் பாடசாலைக்குள் புகுந்தார்.'சாமியாரே. நாய் கட்டியிருக்கா???' என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றார்கள் சித்தானைக்குட்டி சுவாமிகள்.

அங்கு சுவாமி விபுலானந்தருடன் நொத்தாரிஸ் இராஜேஸ்வர முதலியார் பேசிக்கொண்டு இருந்தார்.இருவரில் எவராவது சுவாமிகள் வாருங்கள் என்றோ. அன்றி எழுந்தோ ஆசனம் கொடுத்தோ உபசரிக்கவில்லை.
 சுவாமிகள் தாமாகவே சென்று சுவாமி விபுலானந்தர் இருந்த நாற்காலியின் வலது பக்கத்துச் சட்டத்தில் உட்காந்தார்கள்.

சுவாமிகள் விபுலானந்த அடிகளார்களை பார்த்து .....
'நீ சாமி விதானையாரின் மகனல்லவா? உன் பெயர் மயில்வாகனம் அல்லவா? விபுலானந்த சுவாமி என்ற பெயர் எப்படி வந்தது? நீ சுவாமியா? 'என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி போட்டுக்கொண்டே இருந்தார்.

கதிரைக் கையிலிருந்து இடையிடையே உன்னி உன்னி எழும்ப கதிரைக்கை ஒடிந்து விழும்போல இருந்தது.அந்த நேரம் நொத்தாரிசார் எழும்பி 'சுவாமி இந்த நாற்காலியில் உட்காருங்கள் சாய்மனை கதிரை கை ஒடியும் போல இருக்கிறதே' என்றார்.சித்தானை சினந்து 'டேய் உன் வேலையை நீ பார் என் வேலையை நான் பார்ப்பேன்' என்றார்.

பின்னர் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் படத்தைப்பார்த்து 'இவன் என்ன பெரிய சாமியா?' என்று தொடங்கினார்.

இவ்வளவு நேரமும் சித்தானையின் திருவிளையாடலை அமைதியாகப் பொறுத்துக் கொண்டிருந்த அடிகளார் கோபாவேசத்தாரானார்.
இவ்வளவு நேரமும் என்னைப் பற்றி சொன்னதையெல்லாம் பொறுத்துக்கொண்டேன் என் குருநாதரை பற்றி இகழ்ந்து சொல்வீர்களாயின் எனது பொறுமையை இழக்க நேரிடும் அதனால் சங்கடமும் வரும் 'என்றார்.

சித்தானை சிரித்துக்கொண்டு அமைதியாக எழுந்து 'நாய் கட்டாதவன் சாமியாவதெப்படி?
என்று கூறிக்கொண்டு விபுலானந்தரின் வலது பாதத்தில் உமிழ்ந்து விட்டு உடனே வெளியேறினார் சித்தானை.

அந்த கணமே நொத்தாரிசு ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்து அடிகளாரின் பாதங்களை கழுவினார்.

'நாய் கட்டாதவன் 'என்று சித்தானை குறிப்பிட்டது 'ஆணவத்தை அடக்காதவன்' என்ற பொருளையும் சுவாமிகள் தனது வலது பாதத்தில் உமிழ்ந்து ஆசிர்வதித்ததையும் காலப்போக்கில் விபுலானந்த அடிகளார் உணர்ந்தார்.

விபுலானந்த அடிகளாருக்கும் சித்தானை காட்டிய சித்து.

ஓம் ஸ்ரீ சித்தானைக்குட்டி குருவே நமக.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாComments