08.08.18-இரண்டாவது நாளாக பிரதேசசபை முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

posted Aug 7, 2018, 6:09 PM by Habithas Nadaraja
இரண்டாவது நாளாக பிரதேசசபை முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தீர்வுகாணாவிடின் பிரதேசம் நாறும் என்கிறார் தவிசாளர் ஜெயசிறில்..

காரைதீவு பிரதேசசபையில் பணியாற்றிவரும் அமைய ஊழியர்கள் அனைவரும் (07.08.2018) இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.

காரைதீவு பிரதேசசபையில் 12 ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் அரசியல் ரீதியாக புதிதாக ஒருவருக்கு   நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதை ஆட்சேபித்து நேற்று  (06.08.2018)  காலை ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது தெரிந்ததே.

சபை நுழைவாயிலை மூடி வெளியாரை உள்ளேசெல்லவிடாமல்  கோசமெழுப்பியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல சுலோகங்களடங்கிய பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.இதனால் கடந்த இருதினங்களாக  குப்பை அள்ளும் பணிகள் தடைபட்டிருந்தன. ஏனைய சில நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

அம்பாறை மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் மற்றும் சில பிரமுகர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடி தீர்வுபெற்றுத்தருவதாக்கூறிச்சென்றுள்ளனர்.

அங்கு சமுகமளித்த பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கருத்துரைக்கையில்:

இது எமது 12 அமைய ஊழியர்க்கும் அழைக்கப்பட்ட அநீதி. இவர்களுக்கு நிரந்தரநியமனத்தை வழங்கிவிட்டு தேவையானால் முறைப்படி புதியவர்களை நியமியுங்கள். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. நான் நேற்று ஆளுநரை திருமலைசென்றுசந்திக்கச்சென்றேன். அவர் மட்டக்களப்பிற்கு வந்துவிட்டதாகச்சொன்னார்கள். நான் மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்து அவரைச்சந்தித்து முறைப்பாட்டைக்கையளித்து பேசினேன். தான் கவனிப்பதாகச்சொன்னார். மொத்தத்தில் குப்பை அகற்றுவது தொடக்கம் அத்தனை சபைச்செயற்பாடுகள் முடங்கியுள்ளன. அதற்காக இன்று விசேட சபை அமர்வொன்றைக்கூட்டியுள்ளேன். உடனடியாகதீர்வு காணாவிடின் பிரதேசம் நாறும். மக்கள் கொந்தளிப்பார்கள். என்றார்.

சபைச்செயலாளர் அ.சுந்தரகுமார் கூறுகையில்: எமது சபையில் 12 அமைய ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்குமாறு பலதடவைகள் எழுத்துமூலம் அறிவித்துள்ளோம். ஆனால் இன்று அதற்கு அவர்கள் போராடவேண்டியதுர்ப்பாக்கியநிலை. இதனால் எமது சபை செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.எனவே உடனடிதீர்வு தேவை.என்றார்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக  அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் காரைதீவு பிரதேசபை உறுப்பினர் சின்னையா ஜெயராணி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காரைதீவு  நிருபர் 


Comments