08.10.19- காரைதீவில் புலமைப்பரிசில் மாணவர் சித்தி இரட்டிப்பு..

posted Oct 7, 2019, 6:26 PM by Habithas Nadaraja
காரைதீவில் புலமைப்பரிசில் மாணவர் சித்தி இரட்டிப்பு.
வரலாற்றுச்சாதனை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் வாழ்த்து..


கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவுக் கோட்டத்தில் இம்முறை புலமைப்பரிசில்பரீட்சையில் அதிகூடிய 58மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்திபெற்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளமை பெரும் மகிழ்ச்சிதருகிறது. அதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.

என காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

ஈழத்தின் கல்விக்கு முத்தாய்ப்பு வைத்தவர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளார். அந்த உலகின் முதல்தமிழ்ப்பேராசிரியர் அவதரித்த காரேறுமூதூராம் காரைதீவில் இம்முறை எமது மாணவச்செல்வங்கள் இரட்டிப்பு பெறுபேறுகளைப்பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த செய்திகேட்டு புளகாங்கிதமடைந்தேன்.

கடந்தவருடம் 26மாணவர்கள் சித்திபெற்றிருக்கஇம்முறை 58மாணவர்கள் சித்திபெற்றிருப்பது இரட்டிப்புமகிழ்ச்சியைத்தருகிறது.

கல்வி ஒன்றுதான் எமது மூலதனம். அந்தக்கல்வியின் ஆரம்ப்பிரிவை மதிப்பீடுசெய்கின்ற புலமைப்பரிசில்பரீட்சையில் இச்சின்னஞ்சிறியகோட்டம் இத்துணை சாதனைபடைத்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது.

முதலில் அதற்காக இரவுபகல் பாராமல் அதீதமுயற்சியுடன் படித்துச்சித்திபெற்ற மாணவச்செல்வங்களை முதலில் பாராட்டுகிறேன். உண்மையில் அவர்கள்தான் பாராட்டுக்குரியவர்கள். அடுத்து கற்பித்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் அதற்கு துணைபுரிந்த அதிபர்கள் கல்விஅதிகாரிகள் நலன்விரும்பிகள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

(காரைதீவு  நிருபர்)


Comments