10.05.19- மூன்றாவது தடவையாகவும் ஆலயத்தில் ஆயுதம் மீட்பு..

posted May 9, 2019, 6:24 PM by Habithas Nadaraja
மூன்றாவது தடவையாகவும் ஆலயத்தில் ஆயுதம் மீட்பு
திட்டமிட்ட சதியா கேள்வியெழுப்புகிறர் தவிசாளர் ஜெயசிறில்..


வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து மூன்றாவது தடவையாக கைக்குண்டு ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.ஆலய வளாகத்தில் உள்ள மலசலகூடத்திற்கு பின்புறம் இனம் தெரியாத நபர்களினால் கைக்குண்டு ஒன்று கைவிட்டு சென்றுள்ள நிலையில் காணப்பட்டுள்ளது.

இதன் போது ஆலய பராமரிப்பாளர் மாணிக்கம் முருகுப்பிள்ளை ஆலய பரிபாலனசபைத் தலைவர் வி.சுப்பிரமணியம் செயலாளர் எஸ்.நிரோசன் ஆகியோரிடம்  கூறினார்.ஆலய பரிபாலனத்தலைவர் சம்மாந்துறை பொலிசாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.

சம்மாந்துறையில் பல சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்று வருவதனைத் தொடர்ந்து யாராவது இக் குண்டை கோயில் வளாகத்தில் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஒருவாரகாலத்துள் அங்கிருந்து மீட்கப்பட்ட மூன்றாவது தொகுதி ஆயுதம் இதுவாகுமென ஆலயத்தலைவர் வி.சுப்பிரமணியம் தெரிவிக்கிறார்.

யாரோ நபர்கள் ஆலயத்தினுள் இவற்றை வீசி வருகிறார்கள். இவ்வாறு நடக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் பொலிசாருக்கு தகவல் கொடுக்கின்றபோது அவர்களும் அவற்றை மீட்டுச்செல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஸ்தலத்திற்குவிரைந்த  காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கூறுகையில்:

இவ்வாறு இவ்வாலய வளாகத்தில் ஆயுதம் மீட்கப்படுவதென்பது முதற்றடவையல்ல. எனவே இதனை ஒரு சதித்திட்டமாகக் கருதவேண்டியுள்ளது. கடந்தகாலங்களில் சிலையுடைப்புச்சம்பவமும் இங்கு இடம்பெற்றிருக்கிறது.சுற்றவர இஸ்லாமிய சகோதரர்களினால் சூழப்பட்ட இவ்வாலயம் எதுவித பிரச்சினையுமின்றி இயங்கிவந்த நிலையில் இவ்வாறு இத்துர்ப்பாக்கியநிலை இன்று எழுந்திருப்பதையிட்டு வேதனையடையவேண்டியுள்ளது. எனவே சகலரும் இணைந்து யார் இதனைச்செய்கிறார்கள் என்பதையறிந்து அவர்களை இனங்காட்டி ஒற்றுமைகாக்கவேண்டும் என்றார்.

காரைதீவு  நிருபர்

Comments