11.03.18- அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி தேர்தல் பற்றிய ஆராய்வும் கருத்துக்கணிப்பும்..

posted Mar 10, 2018, 6:09 PM by Habithas Nadaraja
இலங்கைத்தமிழரசுக்கட்சியின்   அம்பாறை மாவட்ட சமகால களநிலைவரம் தேர்தலின்போதான சாதகபாதக நிலைமைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய யோசனைகள் ஆலோசனைகள்  தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்டறியும் அமர்வு நேற்று(10)சனிக்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்திற்கான இந்தக் கருத்தறியும் அமர்வு காரைதீவு விபுலாநந்த மணிமண்டபத்தில் நேற்று( 10மணிமுதல் நடைபெற்றது.

இலங்கைத்தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் கருத்தறியும் குழுவின் தலைவர் கனடா கே.குகதாசன் மட்டு.மாவட்ட முன்னாள் எம்.பி. பா.அரியநேத்திரன் ஆகியோர் கருத்தறியும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் பொதுமக்கள் இக்கருத்துக்களை முன்வைக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
எனினும் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து வந்த தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களே அங்கு சமுமளித்திருந்தனர்.

ஒவ்வொருவராக தனி அறைக்குள் அழைக்கப்பட்டு கருத்தறியப்பட்டது. முதலில் காரைதீவு பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் கே.தட்சணாமூர்த்தி சாட்சியமளித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் த.கலையரசன் மூத்த உறுப்பினர் கு.ஏகாம்பரம் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினரான எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட பல பிரமுகர்கள் வெளியில் காத்திருந்தனர்.

பொதுமக்களுக்கான கருத்தறியும் அமர்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டுளளதென பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்தார்.

எனினும் அதனை ஏற்பாடு செய்தவர்கள் முறைப்படி பொதுமக்களுக்கு அறிவிப்புச்செய்யவில்லையென்று மக்கள் கருத்துரைத்தனர். கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு அழைப்புவிடுக்கப்படாதது குறித்தும் அங்கு கருத்துவேறுபாடு நிலவியதைக்காணக்கூடியதாயிருந்தது.


காரைதீவு  நிருபர் 
Comments