12.01.18- மக்கள் நிராகரித்தால் நாம் இனிமேல் அரசியலில் இறங்கமாட்டோம்..

posted Jan 11, 2018, 5:11 PM by Habithas Nadaraja
மக்கள் நிராகரித்தால் நாம் இனிமேல் அரசியலில் இறங்கமாட்டோம்:மாறாக நீங்கள் நிராகரிக்கப்பட்டால் அவ்வாறு ஒதுங்குவீர்களா?சவால் விடுக்கிறார் மீன்சின்ன வேட்பாளர் நந்தேஸ்வரன்!

இந்தத் தேர்தலில் காரைதீவு மக்கள் எங்களை நிராகரித்தால் நாம் இனிமேல் அரசியலில் இறங்கமாட்டோம். மாறாக நீங்கள் நிராகரிக்கப்பட்டால் அவ்வாறு ஓதுங்குவீர்களா? 

இவ்வாறு ஏனைய கட்சிகளுக்குச் சவால் விடுக்கிறார் மீன்சின்ன வேட்பாளர் சின்னத்துரை நந்தேஸ்வரன்.

காரைதீவு பிரதேசசபைக்கு சுயேச்சை அணியில் மீன்சின்னத்தில் 3ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் நந்தேஸ்வரன் நேற்று இரவு வட்டாரத்தில் நடைபெற்ற சிறுகூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.
கூட்டத்தில் ஏனைய வேட்பாளர்களான  ச.சசிகுமார் சி.தேவப்பிரியன் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:

காரைதீவு ஊர்த்தீர்மானத்திற்கமைவாக களமிறக்கப்பட்டவர்கள் நாங்கள். சிலர் அந்தத்தெரிவிற்குள் தெரிவாகாத காரணத்தைக்கூறாமல் வேற்றுக்கட்சிகளில் இணைந்து எங்கள் மீது வசைபாடுகின்றனர். இவர்களது பசப்புவார்த்தைகளை படித்த காரைதீவார் ஒருபோதும் நம்பப்போவதில்லை.

விபுலாநந்தர் சிலை வைத்தது யார்?

ஊருக்குள்ளும் வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கில் நிதி அறவிட்டு என்போன்ற சமுக ஆர்வலர்கள் பொதுமக்கள் சகலரதும் பங்களிப்புடனும் ஆரம்பவேலையைச்செய்துவிட்டு; விபுலானந்த சிலை அமைப்புவேலையை இடைநடுவில் கைவிட்டார்கள். சிலகாலம் அது அவமானச்சின்னமாக இருந்தது.

இறுதியில் இந்துசமயவிருத்திச்சங்கம் தலையிட்டு  மக்களின் கடைசிக்கட்டப்பங்களிப்புடன் லட்சக்கணக்கில் செலவிட்டு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்னிலையில் சிலை திறந்தவிடயம் அகிலஉலகத்திற்கே தெரியும். 
 
அதைவிடுத்து நான்தான் உலகத்திலில்லாத சிலையைவைத்தேன் என்று மார்தட்டிஉரிமை கோர முன்வருவதும் பெருமை கொள்ள எண்ணுவதும்  மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடாகும். அவர் சேகரித்த பணத்திற்கு இன்னும் கணக்குக்காட்டவில்லை.இதனை காரைதீவார்கள் நன்கு அறிவார்கள்.

அப்படி செய்ததெல்லாம் அராஜகமும் கொள்ளையும்தானே தவிர சேவையல்ல. 

தமிழரசுக்கட்சி ஏன் தூக்கியெறிந்தது?

அந்த இருவருடங்கள் பொற்காலமென்றால் ஏன் பழம்பெரும் கட்சியான தமிழரசுக்கட்சி குறித்த நபரை பாதியிலேயே தூக்கியெறிந்தது? இது உலகத்திற்கே காரைதீவு பற்றிய ஒரு நல்லபிமானத்திற்கு கறைபடிந்த செயலாகும்.இவ்வாறு காரைதீவுக்கு அவப்பெயரைப் பெற்றுத்தந்தவர்கள் இவர்கள்.

பொய்யும் புரட்டும். நேரத்திற்கு ஒரு கட்சி. தருணத்திற்கு ஒரு சின்னம். இவ்வாறு பச்சோந்தி வாழ்க்கைவாழ்ந்து வரும் அவரைப்போன்றவர்களை மக்கள் ஓரங்கட்டும் நாள் வெகுதொலைவிலில்லை.அதன்பிறகாவது அரசியலிலிருந்து ஒதுங்கட்டும்.

இன்று அவர்கள் கூட்டியும் காட்டியும் கொடுக்கத் தலைப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தேவை பணம். அதற்காக எதனையும் இழப்பார்கள்.மண்ணையும் விற்பார்கள்.

எல்லைகளைப்பாதுகாக்க கண்ணகை அம்மன் ஆலயத்தினர் செய்த பங்களிப்பை ஊரார் அறிவர். இதற்குப்பிறகும் தாமே எல்லைகளைப்பாதுகாக்கிறோம் என்றால் இதனை நம்ப காரைதீவார் மடையர்களல்ல.

கறைபடியாதகரங்கள் என்கிறார்கள். அப்படியெனின் கரத்தில் கிளவுஸ் போட்டுக்கொண்டா குப்பைஅள்ளுவோரிடம் லஞ்சம் பெற்றார்கள்? இன்னும் எத்தனையோ உள்ளன. தேவையெனின்  அவ்வப்போது ஆதாரபூர்வமாக வெளியிடப்படும்.

அமைப்பாளர்கள் செய்தது என்ன?

தேசியகட்சி அமைப்பாளர்கள் என்றால் அருகிலுள்ள நிந்தவூருக்குச்சென்று பாருங்கள். என்ன செய்திருக்கிறார்கள் என்று. இறுதி 3மாதங்களுள் இதுவரை 30க்கும் மேற்பட்ட வீதிகளை போட்டிருக்கிறார்கள்.  இங்குள்ளவர்களால் ஒரு வீதியையாவது போட முடிந்ததா? இதுவரை இவர்கள் செய்த அபிவிருத்தி என்ன?இவர்களை நம்பி ஒரு கூட்டம்.வாக்குகளைப்பிரித்து தாரை வார்க்கப்போகிறார்கள். 
எமது உரிமையைப்பற்றிப்பேசுவது இனவாதமா? வடக்குகிழக்கு இணைக்கப்பட்டால் இரத்தஆறு ஓடும் என்று இனவாதம் பேசிய பிரதியமைச்சருக்கு இவர் என்ன சொல்லப்போகிறார்? வெட்கமில்லாமல் மாற்றானிடம் இதனைச்சொல்லி அனுதாபம் பெறுவதிலிருந்து அவர்களது வங்குரோத்துத்தனம் தெரிகிறது. 

காரைதீவில் பிறக்காதவர்களையும் காரைதீவார் என்ற உயரியபண்புடன் ஏற்று வாக்களித்து அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தவர்கள் காரைதீவார் என்பதை மறந்துவிடக்கூடாது.அப்படி இன்னும் எத்தனைபேரை இந்தமண் கௌரவித்திருக்கிறது.
முதலில் வீட்டில் வந்தார்கள் பின்பு யானையில் வந்தார்கள் பின்ப வெற்றிலையில் வந்தார்கள் இப்போ கையில் வருகிறார்கள். இனி வருவதானால் சைக்கிளில்தான்வரவேண்டும்.

எனவே தேவையற்ற வாய்ச்சவடால்களை விடுத்து வாக்குகள் கேட்பதென்றால் கேட்கவும். மக்களுக்கு எல்லோரையும் விளங்கும். தமது வாக்குகளை மாற்றானுக்கு வழங்க காரைதீவார் ஒருத்தரும் மடையர்களல்ல. இங்குள்ளவர்கள்  எமது இரத்த உறவுகள்.

எனவே காரைதீவு மக்கள் தெளிவானவர்கள். இம்முறை மாற்றத்திற்காக வாக்களித்து புரட்சியை ஏற்படுத்துவார்கள். அப்போது புரியும் காரைதீவார் யார் என்று என்றார்.

காரைதீவு  நிருபர் Comments