12.01.18- ஊர்த்தீர்மானத்தை ஏற்று தமிழரசுக் கட்சிபிரதிநிதிகளும்  புளொட் பிரதிநிதிகளும் ஒதுங்கியிருப்பது வரவேற்புக்குரியது..

posted Jan 11, 2018, 5:14 PM by Habithas Nadaraja   [ updated Jan 11, 2018, 5:15 PM ]
ஊர்த்தீர்மானத்தை ஏற்று தமிழரசுக்கட்சிபிரதிநிதிகளும்  புளொட் பிரதிநிதிகளும் ஒதுங்கியிருப்பது வரவேற்புக்குரியது!
சுயேச்சைக்குழுத்தலைவர் சி.நந்தகுமார் தெரிவிப்பு..

காரைதீவு ஊர்த்தீர்மானத்தை ஏற்று பழம்பெரும்கட்சியான தமிழரசுக்கட்சியின் பல பிரதிநிதிகளும் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு அணிசேர்த்த புளொட்  பிரதிநிதிகளும் கூடவே தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிப்பிரதிநிதிகளும் ஈபிடிபி கட்சிப்பிரதிநிதிகளும் தேர்தலிலிருந்து ஒதுங்கியிருப்பது வரவேற்புக்குரியது.

இவ்வாறு எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் காரைதீவு பிரதேசசபைக்காக போட்டியிடும் சுயேச்சைக்குழு-1 இன் தலைமை வேட்பாளரும்  பிரபல சமூகசெயற்பாட்டாளருமான சந்திரசேகரம் நந்தகுமார்  தெரிவித்தார். 

காரைதீவு 7ஆம் வட்டாரத்தில் தேர்தல் பரப்புரையின்போது பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.அவருடன் சக வேட்பாளர் இராசையா மோகனும் சமுகமளித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

இலங்கைத்தமிழரசுக்கட்சியைச்சேர்ந்த காரைதீவு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் வை.கோபிகாந் உபதவிசாளர் கே.தட்சணாமூர்த்தி மற்றும் உறுப்பினர் கே.பாஸ்கரன் ஆகியோரும் அவர்களது ஆதவாளர்களும் ஒதுங்கியுள்ளனர்.

அவர்கள் ஊர்ப்பிறந்தவர்கள். ஊரிலே வாழ்ந்தவர்கள். மண்பற்று உள்ளவர்கள். அதனால் அவர்கள் ஊர் ஒற்றுமை கருதி ஒதுங்கியுள்ளனர். அவர்களை இவ்விடத்தில் நன்றிகூர்வது எமது கடமை.

காரைதீவின் இருப்பிற்காக ஊர்மக்களின் வழிநடாத்தும் சக்தியாக உருவாக்கப்பட்டது காரைதீவு மகாசபை. அந்தசபையின் ஒரு நோக்கமான சுயேச்சைக்குழுவின் உருவாக்கத்தின்பிறகு அது ஒதுங்கிநிற்கிறது.தேர்தல் முடிந்தகையோடு அந்த மகாசபை மீண்டும் இயங்கத்தொடங்கும். 

எமது சுயேச்சைஅணி சுதந்திரமாக மகாசபையின் எவ்வித தலையீடின்றி காரைதீவு மண்ணில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றது. நாம் அரசியலுக்கு புதியவர்களாகவிருந்தாலும் சமுகசேவையில் தடம் பதித்தவர்கள்.

சின்னச்சின்ன உதவிகளை புலம்பெயர் மக்களின் உதவியோடு செய்துவிட்டு முகநூலிலும் ஊடகங்களிலும் வெளியிட்டு தாம் சமுகசேவையாளர்கள் எனக் காட்டிக்கொடுப்பது ஒன்றும் பெரியவிடயமல்ல. நாம் கல்விக்கு என இதுவரை கோடிக்கணக்கில் செய்துஇருக்கின்றோம். ஆனால் முகநூலிலோ ஊடகங்களிலோ போடவில்லை. தேவையானால் அதனை வெளியிடத்தயங்கோம். வலதுகையால் கொடுப்பது இடது கரத்திற்கு தெரியக்கூடாதென்று சொல்வார்கள்.

ஊரார் நிதியில் சேவைசெய்து   விளம்பரம் தேடும் பிரகிருதிகள் நாமல்ல.மண்குதிரை என்பாருக்கு சவால் விடுக்கின்றேன். முடியுமானால் எம்மிடம் வந்து விவாதம் செய்யுங்கள் பார்க்கலாம் என்றார்.

(காரைதீவு நிருபர்)
Comments