12.08.19- சாய்ந்தமருது உள்ளுராட்சிசபையை ஏற்படுத்தக்கோரும் பிரேரணைக்கு காரைதீவு பிரதேசசபை பரிபூரண ஆதரவு..

posted Aug 12, 2019, 3:18 AM by Habithas Nadaraja
சாய்ந்தமருது உள்ளுராட்சிசபையை ஏற்படுத்தக்கோரும்  பிரேரணைக்கு 
காரைதீவு பிரதேசசபை பரிபூரண ஆதரவு !
இன்றைய 18வதுஅமர்வில் ஏகமனதாகபிரேரணை நிறைவேற்றம்.
பிரேரணை கொணர்ந்த உறுப்பினர் பஸ்மீர் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.


சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவரும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சிசபையை ஏற்படுத்தக்கோரும் பிரேரணைக்கு காரைதீவு பிரதேசசபை ஏகோபித்தஆதரவைத் தெரிவித்து பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.

காரைதீவு பிரதேசசபையின் 18வது மாதாந்த  அமர்வு (08.08.2019) சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்நடைபெற்றபோது மேற்படி தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

பிரஸ்தாபதீர்மானத்தை மாளிகைக்காடு சுயேச்சைஅணியின் உறுப்பினர் அ.மு.பஸ்மீர் சபைக்கு விசேடபிரேரணையாக சமர்ப்பித்திருந்தார்.
அது தொடர்பாக உறுப்பினர்களின்கருத்துக்களுக்கு தவிசாளர் கோரியபோது தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் சாதிஇனமதபேதம் பாராது ஒருமனதாக ஏகோபித்தமுறையில் ஆதரவளித்து ஏகோபித்தமுறையில் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அப்போது உறுப்பினர் பஸ்மீர்  ஆனந்தகண்ணீர்சொரிந்து நாத்தழுதழுக்க அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
முன்பதாக உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உறுப்பினர்களான மு.காண்டீபன் எம்.றனீஸ்மற்றும் எ.ஜலீல் ஆகிய 4உறுப்பினர்கள் சபையில்அனுமதிபெற்று தவிசாளரின் அனுமதியோடு  வெளியே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தவிசாளர் ஜெயசிறில் அங்கு அக்கருத்துக்கணிப்பை நிறைவுசெய்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை நிச்சயம் அந்தமக்களுக்கு கிடைக்கவேண்டும். எமக்கருகிலுள்ளஅந்த முஸ்லிம்சகோதரர்களின் கோரிக்கை நியாயமானது.

இதேபோன்று கல்முனை வடக்கு பிரதேசசெயலகதரமுயர்த்தும்பிரேரணையை உறுப்பினர் ஜெயராணி இச்சபையில் முன்வைத்தபோது முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் பஸ்மீரைத்தவிர எதிர்த்துவாக்களித்தனர். பஸ்மீர்நடுநிலையாக வாக்களித்தார்.
அதற்கு பிரதியுபகாரமாக இன்று தமிழ்உறுப்பினர்கள்அனைவரும் ஒன்றுசேர்ந்து அவர்கொணர்ந்த சாய்ந்தமருதுபிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

பஸ்மீர் சபையில் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். அது எமது அனைவரது கண்களையும் நனையவைத்தது. இதுதான் தேவை ஒரு இனத்தின் உணர்வுகளை மற்றைய இனம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தஉறவுதான் தேவை. என்றார்.

காரைதீவு பிரதேசசபைக்கு எல்லையுண்டு!

தவிசாளர் கி.ஜெயசிறில் மேலும் உரையாற்றுகையில்:

எமது காரைதீவு பிரதேசசபைக்கான அலுவலகம் கல்முனைமாநகரசபையின் எல்லையுள்தானிருக்கிறது என கடந்த அமர்வில் உறுப்பினர் நேசராசா கூறியமை பிழையானகருத்து.

அந்தக்கருத்தைவைத்து முஸ்லிம்அன்பர்கள் சிலர்முகநூலில் தலைப்புச்செய்தியாகப்போட்டுள்ளனர். அந்தமடையர்களுக்கு நான்ஒன்றைக்கூறிவைக்கவிருக்கிறேன்.

இது எமது எல்லையுள்தானிருக்கிறது. அது வர்த்தமானிப்பிரகடனம்செய்யப்பட்டு அதன்பிரதியுமுள்ளது. எனவே யாரும் அஞ்சத்தேவையில்வை. எமது பிரதேசத்தை அல்லது எல்லையை சூறையாடவோ அபகரிக்கவோ நாம் யாருக்கும் இடமளிக்கப்போவதில்வை அதற்கு சற்றும்இடமளிக்கமாட்டோம்.

உலகின்முதல்தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் விபுலாநந்த அடிகளார் பிறந்த இந்தமண்ணில் தமிழ்ர்கள் 62வீதமும் முஸ்லிம்கள்38வீதமும் நல்லிணக்கத்துடன் சந்தோசமாக வாழ்ந்துவருகின்றனர்.அவர்களைப்பிரித்துகூறுபோட யாருக்கும் அனுமதியில்லை. உண்மைதெரியாமல் பேசுவதும் பதிவிடுவதும்தவிர்க்கப்படல்வேண்டும் என்றார்.

மாளிகைக்காடு முஸ்லிம்காங்கிரஸ் உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் பேசுகையில்:
காரைதீவு எல்லைகள் சரியாகத்தான் உள்ளது. எனவே யாரும் பிழையாகப்பேசி சமுகத்தை குழப்பமுனையக்கூடாது. தவிசாளர் கூறியதுபோல மிகஒற்றுமையாக புரிந்துணர்வோடு வாழும் எமது பிரதேசம் எதிர்காலத்தில் நகரசபையாக தரமயர்த்தப்படவேண்டும் என்றார்.

சுயேச்சை உறுப்பினர்பஸ்மீர் கூறுகையில்:
முழு இலங்கையிலும் இனமதபேதம் பார்க்காத மிகஆளுமையுள்ள தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் மிக நேர்த்தியாக சுமுகமாக இயங்கும் சபையென்றால் அது காரைதீவு பிரதேசசபையாகத்ததான் இருக்கும். அச்சபையில் உறுப்பினராக இருப்பதில் பெருமையடைகின்றேன்.

த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் த.மோகனதாஸ் பேசுகையில்:
இராணுவமுகாம் குடிகொண்டிருக்கும் காரைதீவுப்பிரதேச சபைக்குச்சொந்தமான நூலகக்கட்டடத்தை நாம் யாருக்கும் ஒப்படைக்கமுடியாது. அதில் சபைக்கு வருமானத்தை ஏற்படுத்தும் சந்தையை அமைக்கவேண்டும் என்றார்.

குறித்த நூலகக்கட்டடத்தை இராணுவத்திடம் ஒப்படைக்கக்கோரும் பிரேரணைக்கு தமிழ்முஸ்லிம் சகலரும் எதிர்ப்புத்தெரிவித்தனர். ஆனால் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் ச.நேசராசா மட்டும்  நடுநிலையாக வாக்களித்தார். இத்தீர்மானத்தை கிழக்குமாகாணஆளுநர் மற்றும் பாதுகாப்புஅமைச்சுக்கும் அனுப்பவேண்டும் என்று செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.

சுயேச்சைஉறுப்பினர் இ.மோகன் கூறுகையில்:
எமதுசபைக்கு வரவேண்டிய திண்மக்கழிவுக்கான நிலுவை 30லட்சருபாவை கல்முனை மாநகரசபை கடந்த 16மாதங்களாக இழுத்தடித்துவருவது நல்லதல்ல. சட்டத்தரணிப்புத்தியை மேயர் எம்மிடம்காட்டக்கூடாது. அந்தக்கணக்குவிபரம் சபையில் இல்லையென்று கூறுவது அவரது நிருவாகத்திறனின்மையைக்காட்டுகிறது. நாம் மீண்டுமொருமறை எமதுசபையில் பிரேரணையை நிறைவேற்றி அவருக்கு அனுப்பவேண்டும் என்றார்.
Comments