13.01.18- காரைதீவு பிரதேச சபையைக் கைப்பற்றுவோம்..

posted Jan 13, 2018, 4:03 AM by Habithas Nadaraja
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை முதல் தடவையாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றும் 7 வட்டாரத்தையும் வெற்றி கொள்வோம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரைதீவு பிரதேச செயலக முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளரும்,காரைதீவு பிரதேச சபையின் மாளிகைக்காடு கிழக்கு 1ம் வட்டார வேட்பாளருமான ஏ.எம்.ஜாஹீர் தெரிவித்தார்.

 மாளிகைக்காடு கிழக்கில் அவரது மக்கள் பணிமனையில்  நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்,

 காரைதீவு பிரதேச சபையில் மாவடிப்பள்ளியில் 1வட்டாரமும், மாளிகைக்காட்டில் 2 வட்டாரங்களும் உள்ளடங்கலாக முஸ்லிம் பிரதேசங்களுக்கு மூன்று வட்டாரங்கள் உள்ளன.மூன்று வட்டாரங்களிலும் எமது வேட்பாளர்கள் அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.அதேபோல் காரைதீவு பிரதேசத்தில் உள்ள 4 வட்டாரங்களையும் வெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டங்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளரும் தற்போதைய காரைதீவு 6ம் வட்டாரத்தின் வேட்பாளருமான பொறியியலாளர் வீ.கிருஷ்ணமூர்த்தி தனது நீண்டகால அனுபவத்தின் ஊடாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் இதன் மூலம் காரைதீவு பிரதேச சபையில் உள்ள 7 வட்டாரங்களையும் எமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்.

 காரைதீவு பிரதேச சபையில் உள்ள 7 வட்டாரங்களையும் நாங்கள் வெற்றி பெறுவோம் எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டில் சிறந்த அனுபவமுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட ஆற்றல்மிக்க வேட்பாளர்கள் இங்கு களம் நிறுத்தப்பட்டுள்ளனர் காரைதீவு பிரதேச சபையினை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டு எமது தேர்தல் பணிகளை மேற்கொள்கின்றோம்.

 சாய்ந்தமருது பிரதேச மக்களின் தனியான பிரதேச சபைக்கான கோரிக்கையானது எமக்கு சிறியளவிலான தாக்கத்தை செலுத்தினாலும் அது பெரியளவிலான தாக்கத்தை செலுத்தாது ஏனெனில் நாங்கள் காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் குதித்துள்ளோம் ஆனால் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் நாங்கள் கேட்கவில்லை எமது பிரதேசம் தொகுதி ரீதியிலும் பிரதேச செயலக ரீதியிலும் கோட்டக் கல்விக் காரியலாய ரீதியிலும் வேறுபட்டுள்ளோம் ஆகவே இது சாயந்தமருது மக்களுடைய பிரச்சினையாகும் இவ்விடயங்கள் தொடர்பாக எங்களது மக்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தி வருகின்றோம்.

 மாளிகைக்காடு மக்கள் எங்களுடன் உள்ளனர் இத்தேர்தலில் களம் இறங்கியுள்ள மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் எங்களுக்கு சவாலாக இருந்தாலும் தடைகளை முறியடித்து நாங்கள் வெற்றி கொள்வோம் இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

 முன்னர் எங்களால் மாளிகைக்காடு பிரதேசத்தில் கல்வி பாதைகள் விளையாட்டு வாழ்வாதார திட்டங்கள் மீனவர்அபிவிருத்தி நீர் இணைப்பு மற்றும் சமூக அபிவிருத்திட்டங்கள் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளளோம் இன்னும் பல திட்டங்களை நாங்கள் எமது கட்சியின் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக செயற்படுத்தவுள்ளோம்.

 காரைதீவு பிரதேச சபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயேச்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக பல கட்சிகள் தேர்தலில் குதித்துள்ளன. எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே காரைதீவு பிரதேச சபையில் உள்ள 7 வட்டாரங்களிலும் தேர்தல் கேட்பதற்காக வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளமையைக் குறிப்பிட்டலாம்.நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கைச்சின்னத்தில் போட்டியிடும் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளிகளாக நீங்களும் இணநை்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் மாளிகைக்காடு மேற்கு வட்டார வேட்பாளர் எஸ்.எஸ்.எம்.ஹக்கீம் காரைதீவு பிரதேச சபைத் தேர்தலில் பெயர் குறிக்கப்பட்ட பட்டியல் வேட்பாளர்களான ஐ.ஏ.ஹமீட்(றியாஸ்),எஸ்.எம்.பஸ்லுான் கலந்து கொண்டனர்.

(றியாஸ் இஸ்மாயில்)Comments