13.05.19- இன்று காரைதீவு கண்ணகை அம்பாள் வைகாசிச்சடங்கு ஆரம்பம்..

posted May 12, 2019, 6:45 PM by Habithas Nadaraja
 இன்று காரைதீவு கண்ணகை அம்பாள் வைகாசிச்சடங்கு ஆரம்பம்
சடங்குப்பூஜைகள் மாலை 5மணிக்கு:திருக்குளிர்த்தி அதிகாலை5மணிக்கு..


வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்திச்சடங்கு (13.05.2019)  கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடுதலுடன் ஆரம்பமாகி 21ஆம் திகதி திருக்குளிர்த்திபாடுதலுடன் நிறைவடையவிருக்கிறது.

நாட்டின் அசாதாரணசூழ்நிலை காரணமாக சில இறுக்கமான தீர்மானங்களை ஆலய நிருவாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
வழமைக்கு மாறாக நாளை பிற்பகல் 5மணிக்கு கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடும் வைபவம் இடம்பெறும்.15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை மதியப்பூஜை பகல் 12மணிக்கும் மாலை 5மணிக்கு சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடுதல் நிகழ்வும் இடம்பெறும்.

20ஆம் திகதி திங்களன்று பிற்பகல் 3மணிக்கு பொங்கலுக்கு நெல் குற்றும் வைபவம் இடம்பெறும். 21ஆம் திகதி அதிகாலை 5மணிக்கு திருக்குளிர்த்பாடலுடன் நிறைவடையும்.எட்டாம்சடங்குப்பூஜை 27ஆம் திகதி திங்களன்று மாலை 5மணிக்கு இடம்பnறும்.அதற்கு முன்னதாக 4மணிக்கு பொங்கல் பானைகள் ஒப்படைக்கப்படவேண்டும் என ஆலயநிருவாகம் கேட்டுள்ளது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக மேற்படி  சிலஇறுக்கமான நடைமுறைத்தீர்மானங்களை பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் முன்னிலையில் கடந்த 5ஆம் திகதி ஆலயவளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.வழமையாக வைகாசிச்சடங்கில் நிறுவப்படும் கடைத்தெருக்களை இம்முறை நிறுவஇடமளிப்பதில்லை.வாகனங்களை நிறுத்த பிரதேசசபையினர் விசேட ஏற்பாடுகளைச்செய்துள்ளனர். அங்குதான் வாகனங்கள் நிறுத்தப்படவேண்டும்.

ஆலயத்தினுள் ஆண்பக்தர்கள் மேலங்கி இல்லாமல் வேட்டிமட்டும் அணிந்து வருதல் வேண்டும். வேட்டி அணிந்துவராத பக்தர்களை அனுமதிப்பதில்லை.மேலும் சடங்குகாலத்தில் எத்தகைய கலைநிகழ்ச்சிகளோ களியாட்டநிகழ்ச்சிகளோ நடாத்துவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழிபாடுகள் மட்டுமே நடைபெறும். இளைஞர்களின் பாதுகாப்பும் மேற்கொள்ளப்படும்.

காரைதீவு நிருபர்Comments