14.01.22- தரணியில் தமிழர் வாழ்வில் பொங்குமா பொங்கல்..

posted Jan 13, 2022, 4:12 PM by Habithas Nadaraja
பொங்கல் என்பது தமிழர்களால் பாரம்பரியமாக சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. இப்பொங்கலாவது தரணியில் தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்துமா?

இவ்வாறு, தனது பொங்கல் வாழ்த்துச்செய்தியில் த.தே.கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளரும், அம்பாறை மாவட்ட சமுகசெயற்பாட்டாளராக விளங்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

நாட்டில் கொரோனா தீநுண்மியின் தாக்கம், வரலாற்றில்இல்லாத படுமோசமான விலையேற்றம் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை சற்றுக் களையிழக்கலாம். 

எனினும் பாரம்பரியமாக தமிழ்மக்கள் பண்டுதொட்டு கைக்கொண்டுவருகின்ற நடைமுறைகள் அனைத்தும் இலகுவில் பின்பற்றக்கூடியவை. எனவே பாரம்பரியத்தில் குறைவில்லாமல் அதேவேளை குதூகலமாக அனைவரும் இணைந்து சேர்ந்து கொண்டாடஇயலாத சூழலில்  கொண்டாடநேரிட்டுள்ளது.

கடந்த பல தசாப்தகாலமாக  தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுக்குத் தீர்வு காணும் வருடமாக இவ்வருடம் அமைய வேண்டும் என்பதுடன் பிறந்திருக்கும் தைத்திருநாளில் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம்.

உங்களுக்கு 12 மாதங்கள் வெற்றி, 52 வாரங்கள் சிரிப்பு, 365 நாட்கள் வேடிக்கை ,8760 மணிநேர மகிழ்ச்சி ,52,5600 நிமிடங்கள் நல்ல அதிர்ஷ்டம், மற்றும் 31,536,000 வினாடிகள் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.

மக்கள் வாழ்வில் ஒளி பொங்க, அல்லல் நீங்க, இத்தைத்திருநாளில் இறைவனை வேண்டுவோம்.

(காரைதீவு  சகா)


Comments