22.06.22- மக்கள் ஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலை..

posted Jun 21, 2022, 6:10 PM by Habithas Nadaraja   [ updated Jun 21, 2022, 6:33 PM ]
மக்கள்  ஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும்  நிலை. இன்றைய சீரழிவு நிலை இந்த காலத்தில் முடியாது
காரைதீவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உரை..

மக்கள் ஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும் துர்ப்பாக்கிய சீரழிவு நிலை  தோன்றியுள்ளது..இன்று நாட்டில் தோன்றியுள்ள துர்ப்பாக்கிய சீரழிவுகள் இந்த காலத்தில் முடிவுக்கு வரப் போவதில்லை. இது தீர்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்.இதற்கு தமிழ் மக்கள் பழக்கப் பட்டவர்கள். வருவதை நம்பிக்கையோடு எதிர் கொள்ளுங்கள்.

இவ்வாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் காரைதீவில் தெரிவித்தார்.

 தமிழீழ விடுதலைக் கழகத்தின் அம்பாரை மாவட்ட முன்னாள் தளபதி அமரர் மகாதேவன் சிவனேசன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இந்த நிகழ்வு காரைதீவு விபுலானந்த மைதானத்தில் 18.06.2022 மாலை கழகத்தின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளர் பி .ரவிச்சந்திரன் சங்கரி தலைமையில் நடைபெற்றது.

முதலாவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி போட்டியில் காரைதீவு ஜோலி கிங்ஸ் அணியினரை எதிர்த்து போட்டியிட்ட வீரமுனை விஷ்ணு அணியினர் வெற்றி வாகை சூடி இருந்தனர்.

 பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் உரையாற்றுகையில்..

இன்று நாட்டில் மிகவும் மோசமான பொருளாதார சீரழிவு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.அனைத்து மக்களும் பல சிக்கல்களையும் சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.ஒருவேளை உணவுக்கும் கையேந்தி நிற்கும் துரதிஸ்டவசமாக நிலைமை
தோன்றி இருக்கின்றது.

 இது இன்று நாளை முடிவடையப் போவதில்லை.

 இதேவேளை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கிறோம். மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாது விட்ட காரணத்தினால் நாடே சீரழிந்து கொண்டிருக்கிறது

 தமிழ் மக்களது பிரச்சினைகள் நிச்சயமாக தீர்க்கப்படவேண்டும். எமது காலத்திலே தீர்க்கப்படாவிட்டால் அடுத்த சந்ததிக்கு இது எத்திவைக்கப்பட வேண்டும் என்பதற்காக இத்தகைய நிகழ்ச்சிகளையும் ஏனைய நிகழ்ச்சிகளையும் அவ்வப்பொழுது செய்து வருகின்றோம்.

 தமிழ்மக்களது கனவு நிறைவேற வேண்டும். தமிழ் மக்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து நல்லதொரு தீர்வு காணப்பட வேண்டுமானால் அடுத்த சந்ததிக்கு இந்த விடயம் ஏற்றி வைக்க படவேண்டும்.

 இப்படியான நிகழ்வுகள் தொடராக நடக்க வேண்டும்.

 எண்பதுகளில் எமது கட்சியின் முக்கிய தளபதிகளில் ஒருவராக செயல்பட்டவர் இந்த மண்ணை சேர்ந்த பக்தன் எனும் சிவனேசன் அவர்கள். அவர் சிறப்பாக செயல்பட்டார். இளைஞர்களிடையே மிகுந்த துணிவை ஏற்படுத்தியவர் தளபதி பக்தன் .அவரது ஞாபகார்த்தமாக இங்கே தற்போதைய அமைப்பாளர் சங்கரி ஏற்பாடு செய்த இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

 இதேவேளை இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ( ஜனா) ,வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் க. சிவனேசன், முன்னாள்  வட மாகாண சபை உறுப்பினர் த.கஜதீபன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் ,உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினார்.

 மேலும் பல அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள். திருமதி சிவனேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 (வி.ரி.சகாதேவராஜா)


Comments