24.01.19- ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இந்த மண்ணினதும் சபையினதும் உயர் கௌரவம் பேணப்படவேண்டும்..

posted Jan 23, 2019, 6:02 PM by Habithas Nadaraja   [ updated Jan 23, 2019, 7:20 PM ]
ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும்போது இந்த மண்ணினதும் சபையினதும்
உயர்கௌரவம் பேணப்படவேண்டும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் சபையில் வேண்டுகோள்..


அரசியலுக்காகவும் சுயஇலாபங்களுக்காகவும் ஊடகங்களுக்கு சிலர் கருத்துத் தெரிவிப்பதையிட்டு நான் அஞ்சவில்லை. ஆனால் அவை வித்தகன் விபுலாநந்தன் பிறந்த இந்த மண்ணினதும் இவ்வுயர் சபையினதும் கௌரவம் பேணப்படும்வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் மாதாந்த அமர்வில் பேசுகையில் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்தார்.

11வது மாதாந்த அமர்வு கடந்த வியாழனன்று பிற்பகல் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு அவர் மேலும் பேசுகையில்:
உண்மைகள் ஓங்கி ஒலிக்கப்படவேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை. பட்ஜெட்டில் அல்லது செயற்பாடுகளில் தெளிவின்மை இருக்குமானால் அதனைத்தாராளமாகக்கேட்டு தெளிந்து கொள்ளலாம்.

தவிசாளர் உபதவிசாளர் உறுப்பினர்களுக்கான கௌரவம் எப்போதும் வழங்கப்படவேண்டும். செயலாளர் சரியாகச்செயற்படவேண்டும். கணக்கறிக்கை மாற்றப்படாதமைகுறித்து அப்பொறுப்பை செயலாளர் ஏற்கவேண்டும். சட்டம் எதைச்சொல்கிறதோ அதைச் செய்யுங்கள். பதவிக்குஅப்பால் பொறுமை காத்திருக்கிறேன்.தவிசாளர் என்ற அதிகாரத்தை நான் முழுமையாகபாவிக்கநேரிடும்.

உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் உரையாற்றுகையில்:

இதுவரைகாலமும் சிலதவறுகள் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் களவு இல்லை. மோசடி இல்லை. சிறுசிறு சொற்பிரயோக தவறுகள் இடம்பெற்றுள்ளன. சபையில் எடுக்கின்ற முடிவுகளை நிருவாகம் நிறைவேற்றவேண்டும். அதனை நிருவாகம் மாற்றமுடியாது. கணக்குவழக்குகளை தவிசாளருக்கு இதுவரை காட்டவில்லை என்று அறியப்படுகின்றது. எனவே இனியாவது தவிசாளருக்கு
காட்டப்படுவது போன்று சபைக்கும் காட்டவேண்டும். என்றார்.

சென்ற மாத கணக்கறிக்கையில் உபகுழுக்கூட்டத்தில் எடுத்த திருத்தங்கள் சொல்லப்பட்டும் மாற்றப்படாதமைகுறித்து உறுப்பினர்கள் பலவாறு கருத்துத்தெரிவித்தனர்.

ஆதலால் அடுத்தகூட்டத்தில் திருத்திய கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறுகூறி சபையை தவிசாளர் ஒத்திவைத்தார்.
அடுத்தகூட்டம் 26ஆம் திகதி நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டது
Comments