25.10.19- படாரென்று பாரியசத்தம் கேட்டுமறுகணம் அனைத்தும் நொருங்கிவந்தன..

posted Oct 24, 2019, 6:40 PM by Habithas Nadaraja
படாரென்று பாரியசத்தம் கேட்டுமறுகணம் அனைத்தும் நொருங்கிவந்தன
மின்னேரிய கோரவிபத்தில் சிக்கி மீண்ட பயணி சுந்தரகுமார் விபரிப்பு..


அனைவரும் நித்திரைமயக்கத்திலிருந்தவேளை 'படார்' என்று பாரியசத்தம்கேட்டது. அதேகணம் கண்ணாடிகள் நொருங்குவதும் கம்பிகள் நொருங்குவதும் உடைவதுமாக  அனைத்தும் நொருங்கி எம்மைநோக்கி நெருங்கிவந்தன. பயணிகள் ஓவென்று அலறத்தொடங்கிவிட்டனர். சிலநிமிடங்கள் செய்வதறியாது தலைவிறைத்தது.

இவ்வாறு விபரிக்கிறார் மின்னேரிய பஸ் விபத்தில் சிக்கி சிறுகாயங்களுடன் மீண்ட காரைதீவு பிரதேசசபை செயலாளர்  அருணாசலம் சுந்தரகுமார்.

சம்பவம் பற்றி அவர் மேலும் விபரிக்கையில்:

நானும் எனது மனைவியும் கொழும்பு மட்டு. ரயில் இல்லாதகாரணத்தினால் கொழும்பிலிருந்து கல்முனை பஸ்டிப்போவுக்குச் சொந்தமான கல்முனை பஸ்ஸில் பயணித்தோம்.

மாலை 4.30மணிக்கு செல்லும் அக்கரைப்பற்று பஸ்ஸில் சீற் இல்லாதகாரணத்தினால் 6மணிக்கு புறப்பட்ட கல்முனை பஸ்ஸில் பயணித்தோம். நாங்கள் நேரத்தோடு சீற்புக் பண்ணாத காரணத்தினால் பின்னாலிருக்கநேரிட்டது.

சாரதிக்கு பின்hலிருக்கும் முன்சீற்றில் எமதூரைச்சேர்ந்த மருத்துவமாதுக்கள் பயணித்ததைக்கண்டேன். அவர்கள் நேரத்தோடு சீற்புக் பண்ணியிருக்கக்கூடும்.. பஸ் நிறைய பயணிகள்.

இடையிடையே சிறுமழை. பஸ் வந்துகொண்டிருந்தது. நேரம் ஆகஆக நித்திரை வந்தது. பலரும் தூக்கத்திலிருந்தோம்.
திடிரென 'படார்' என்ற பாரிய சத்தம்கேட்டது.அதேகணம் கண்ணாடிகள் மளமளவென நொருங்கின. கம்பிகள் தகரங்கள் உடையும் சத்தம் கேட்டன. எம்மைநோக்கி ஏதோ வருவதுபோன்று தெரிந்தது.

மறுகணம் எனது மூக்கினால் இரத்தம்வழிந்துகொண்டிருந்தது. பஸ் மோதியதில் அனைத்து பயணிகளும் அவர்களுக்கு முன்னாலுள்ள சீற்றுகளில் முட்டி காயங்கள் ஏற்பட்டன. முன்னாலிருந்தவர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருந்தன. பஸ்ஸெல்லாம் இரத்தமயம்.

சாரதி அந்த இடத்திலே மரணித்திருந்தார். பாரிய விபத்து அது. இலேசாக மழைதுமித்துக்கொண்டிருந்தது.
நாம் இறங்கக்கூடியவர்கள் படபடவென இறங்கினோம். சற்றுநேரத்தில் அம்புலன்ஸ் வந்தது. பலத்தகாயங்களுக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டுபோனார்கள். நான் ஊருக்கு போன்பண்ணி முன்னாலிருந்தவர்களின் உறவினர்களுக்குதகவல் கொடுத்தேன்.

எனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு விபத்தைச்சந்தித்தது இதுவேமுதற்றடவை. இன்னமும் அந்த பிரேமை நீங்கவில்லை. அனைவரும் குணம்பெற்று மீளவேண்டும் என இறைவனைப்பிரார்த்திக்கிறேன் என்றார்.

(காரைதீவு  நிருபர்)

Comments