28.01.19- இஸ்லாத்தை ஏனைய சகோதரர் முன்னிலையில் கொச்சைப் படுத்துகிறீர்கள்..

posted Jan 27, 2019, 4:45 PM by Habithas Nadaraja   [ updated Jan 27, 2019, 4:47 PM ]
இஸ்லாத்தை ஏனையசகோதரர் முன்னிலையில் கொச்சைப்படுத்துகிறீர்கள் மடுவம் அமைப்பதில் சபையில் மோதிக்கொண்டமுஸ்லிம் உறுப்பினர்கள் அனல்பறக்கும் வாதங்கள்: தனியாருக்குவழங்குவதில் 6பேர் எதிர்ப்பு..


காரைதீவு பிரதேச சபைக்கென தனியான மாடறுக்கும் மடுவம் அமைப்பது தொடர்பில் அங்குள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தமக்கிடையே சூடான வாதப்பிரதிவாதங்களை நடாத்தினர்.

இந்த அனல்பறக்கும் விவாதம் வியாழக்கிழமை காரைதீவுப்பிரதேசசபையின் 11வது அமர்வு தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றபோதே இடம்பெற்றது.

குறித்த அமர்வில் மாடறுக்கும் மடுவத்தை அமைப்பதற்கு தனிநபரிடம் ஒப்படைக்கும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டபோதே மேற்படி விவாதம் தலைதூக்கியது. சுமார் 2மணிநேரம் இவ்விவாதம் சூடாக இடம்பெற்றது.

காரைதீவு பிரதேசசபையில் உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் மற்றும் எம்.எச்.எம்.இஸ்மாயில் முஸ்தபா ஜலீல் எ.ஆர்.எம்.பஸ்மீர் என்.எம்.றணீஸ் ஆகியோர் உறுப்பினர்களாகவுள்ளனர். முஸ்தபா ஜலீல்; என்.எம்.றணீஸ் ஆகியோர் மாவடிப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். ஏனைய மூவரும் மாளிகைக்காட்டைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களிடையே சூடான விவாதம் இடம்பெற்றவேளை தமிழ் உறுப்பினர்களான ச.நேசராசா த.மோகனதாஸ் ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் எஸ்.ஜெயராணி மு.காண்டீபன் ஆகியோர் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்ததைக்காணமுடிந்தது.

உறுப்பினர் எ.ஆர்.எம்.பஸ்மீர் கூறுகையில்:

காரைதீவில் மாடறுக்கும் மடுவம் இல்லாத காரணத்தினால் மாடறுக்கும்வியாபாரிகள் வேறிடத்திற்குக்கொண்டு அறுத்துக்கொண்டு வருவதில் பாரியசிரமமும் பணவிரயமும் ஏற்படுகிறது.இங்கு அரசகாணியுமில்லை. எனவே இதற்கென தனியாரொருவர் முன்வந்துள்ளார். அவருக்குக் கொடுத்து ஒப்பந்தம்செய்து விலையை நிர்ணயிக்கலாம் என்றார்.

உறுப்பினர் என்.எம்.றணீஸ் கூறுகையில்: 

தனியாரிடம் ஒப்படைப்பதில் சிக்கல்உள்ளது. எப்படியாவது காணியைப்பெற்று சபைதான் மடுவம் அமைக்கவேண்டும் என்றார்.

உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் கூறுகையில்:

இப்படித்தான் கல்முனை மாநகரசபையில் மடுவமொன்றை தனியாரிடம் வழங்கினர். அங்கு வயதுகுறைந்த மாடும் அறுக்கப்படுகிறது. கன்றுத்தாச்சி மாடும் நோய்வாய்ப்பட்ட மாடும் அறுபடுகிறது. கன்றுக்குட்டியைக்கொத்தி அதற்குள் கலக்கிறார்கள். பிஎச்ஜ மாரின் சீல் அவர்களின் பாக்கட்டுக்குள் உள்ளது. நள்ளிரவில் அறுபடுவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.இப்படி மோசடிகள் இடம்பெறுகின்றன.. இதனை கல்முனை மாநகரசபையாலும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலாலும் ஒன்று செய்யமுடியாதுள்ளது.  எனவே இங்கும் தனியாருக்குக்
கொடுத்துவிட்டு கஸ்ட்டப்படமுடியாது. என்றார்.

உறுப்பினர் முஸ்தபா ஜலீல் பேசுகையில்: இந்தப்பேச்சு முழுமுஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்துகிறது. இது கௌரவமான உயரிய சபை. தமிழ்ச்சகோதரர்கள் இருக்கிறார்கள். அப்படி வயதுக்கீழுள்ள மாடுகள் நோய்வாய்ப்பட்ட கன்றுத்தாச்சிமாடுகள் அறுக்கப்படுவதில்லை. அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. என்றார்.

 உபதவிசாளர் ஜாகீர் 'ஏன் நாயைக்கூட அறுத்து இறைச்சியுடன் கலந்து விற்பனைசெய்ததை முகநூலாக அறியவில்லையா? 'என்றார்.

உறுப்பினர் பஸ்மீர் மீண்டும் பேசுகையில்;

தக்பீர் சொல்லாமல் இங்கு யாரும் மாடறுப்பதில்லை. கல்முனை மாநகரசபையில் நடப்பதை இங்கு ஏன் சொல்லவேண்டும்? அங்கு முறையிட்டு தீர்வைப்பெறுங்கள். அதைவிடுத்து  இங்கு முஸ்லிம்சமுகத்தை ஏனைய சகோதரர்கள் முன்னிலையில் இவ்வளவு கேவலமாக கீழ்த்தரமாகப்பேசியதை எண்ணி வேதனையடைகின்றேன். கன்றுக்குட்டியை அறுப்பதற்கு ஈமானில் இடமில்லை. ஹலால் ஹறாம் பற்றிப்பேசுகிறோம். இதனை அறியாத தமிழ்சகோதரர்களும் மாட்டிறைச்சியை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

உபதவிசாளர் சொன்ன கதையைக்கேட்டால் இனிமேல் யாருமே மாட்டிறைச்சியை சாப்பிடமாட்டார்கள். நள்ளிரவில் யாரும் மடுவம் பக்கம் போவதில்லை. மடுவம் கிட்டத்தட்ட சவக்காலை போன்றது.யாரிடமிருந்தாவது 3பேர்ச் காணியைப்பெற்றுத்தாருங்கள். மடுவம்கட்ட 5லட்சருபா பணம் நான்தருகிறேன் என்றார் ஆவேசமாக.

உபதவிசாளர் ஜாகீர் கூறுகையில்:

நான் யாரையும் குற்றம்சுமத்த வரவில்லை. பொதுவாக நடப்பதைத்தான் சொன்னேன். கல்முனைபொலிஸ்நிலையத்தில் நிற்கும்போது புதியகாரில் கள்ளமாடுகொண்டுவந்த சம்பவத்தை நேரில்கண்டேன்.உலகில் தவறுவிடாத மனிதரே இல்லை. எமது சபைக்கு மடுவம் தேவை. அதற்கான காணியைப்பெற ஒருகுழுவை நியமியுங்கள்.

உறுப்பினர் ஜலீல் மீண்டும் கூறுகையில்:
இங்கு பேசப்பட்டவை ஆவணமாகத் தரப்படவேண்டும் தவிசாளர் அவர்களே. நோய்பிடித்த மாடுகளையும் குட்டித்தாய்ச்சி மாடுகளையும் தக்பீர் சொல்லாமல் அறுப்பதாக நாக்கூசாமல் சொல்கிறார்கள். இது அபாண்டம். எமது சமுகத்திற்கு பாரிய அவமானம். இது தொடர்பில் மீடியாவிற்கு சொல்லவேண்டும்.

உபதவிசாளர் ஜாகீர் மீண்டும் கூறுகையில்: 

எனக்கு மீடியாவிற்கும் பயமில்லை.எதற்கும் பயமில்லை. அல்லாஹ் ஒருவனுக்குத்தான் பயம். முகநூலிலும் சமுகவலைத்தளங்களிலும் வருவதைத்தான சொன்னேன். என்றார். .

உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் கூறுகையில்; இது உயர்சபை.

இங்குமுன்வைத்த பிரேரணை தனியாருக்கு கொடுப்பதா? இல்லயா? என்பது. நிந்தவூர் சம்மாந்துறை சபைபோன்று இங்கு இடமில்லை. எனவே அதனைத்தீர்மானியுங்கள். என்றார்.

இறுதியாக தவிசாளர் கி.ஜெயசிறில் பேசுகையில்;:

மடுவம் அமைப்பது தொடர்பாக சுமார் 2மணிநேரம் வாதப்பிரதிவாதம் சூடாகவிருந்தது. முகநூலிலும் வலைப்பின்னல்களிலும் பலதும் பத்தும் வரும். அதனை எடுத்துக்கொண்டு சபையில் பேசி காலத்தைக்கடத்தக்கூடாது. நாம் இந்துசமயமுறைப்படி மாட்டை வணங்குகிறோம். அதற்காக தமிழர்கள் மாடு சாப்பிடவில்லைஎனக்கூறவில்லை. நான்யாருக்கும் ஆதரவு தெரிவிக்கமுடியாது.
மக்களுக்கு சுத்தமான இறைச்சிவேண்டும். மடுவம் ஒன்று சபைக்கு அவசியம். ஆனால் காணிப்பிரச்சினையுண்டு. எனவே அதற்கான குழுவை நியமிக்கிறேன். மேலும் இங்கு பிரச்சினை இருப்பதால் தனியாருக்குவழங்குவதா இல்லையா? என்பது தொடர்பில் வாக்கெடுப்பிற்கு விடுகின்றேன் என்றார்.

வாக்கெடுப்பில் 'தனியாருக்கு வழங்கக்கூடாதென்று'  உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் எம்.எச்.எம்.இஸ்மாயில் என்.எம்.றணீஸ் ச.நேசராசா
ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் ஆகியோர்  ஆகிய ஆறு உறுப்பினர்களும் 'வழங்கலாம்' என்று உறுப்பினர்களான பஸ்மீர் ஜலீல் மற்றும் த.மோகனதாஸ் ஆகியோரும் 'நடுநிலையாக' தவிசாளர் ஜெயசிறில் பெண்ணுறுப்பினர் எஸ்.ஜெயராணி ஆகியோரும் வாக்களித்தனர்.

எனினும் தவிசாளரிள் அதிகாரத்திற்கமைவாக இப்பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் காணியைப்பெறுவதற்கான குழு தனது முடிவைஅறிவிக்கும்வரை அமுலுக்குவராது என்றார்.

(காரைதீவு  சகா)


Comments