30.03.20- அனுமதிக்கப்பட்ட வியாபாரிகள் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபடலாம்..

posted Mar 29, 2020, 4:39 PM by Habithas Nadaraja
அனுமதிக்கப்பட்ட வியாபாரிகள் மட்டுமே வியாபாரத்தில் ஈடுபடலாம்.திருமணத்திற்கு 6பேர் திருமண மரணவீட்டு உணவுகளுக்கு  தடை காரைதீவு பிரதேச கொரோனா செயலணிக்குழுக்கூட்டத்தில் தீர்மானம்..

காரைதீவு பிரதேசத்தில் ஏலவே பதிவுசெய்யப்பட்டு செயலணியினால் அனுமதிவழங்கப்படும்  வியாபாரிகள் மாத்திரமே  காரைதீவுப்பிரதேசத்தில் இனிமேல் வியாபாரத்தில் ஈடுபடலாம். அனுமதியின்றி வியாபாரத்திலீடுபட்டால் கைதுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என  காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அறிவித்துள்ளார்.

'கொரோனா அற்ற காரைதீவு' விசேட திட்டத்தின் ஓரங்கமாக நேற்று-28-மாலை பிரதேசசபையில் தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற காரைதீவுப்பிரதேச கொரோனா விசேட செயலணிக்குழுக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் காரைதீவுபிரதேச  சுகாதார வைத்தியஅதிகாரி டாக்டர் றிஸ்னிமுத் சம்மாந்துறை  பொலிஸ் நிலைய பிரதி பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர் இராணுவ பொறுப்பதிகாரி நவரத்ன கடற்படை பொறுப்பதிகாரி ஜயந்த மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஜீவா சிவசுப்பிரமணியம் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆலோசனை சபைஉறுப்பினர்கள் ஆகியோருடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும்  முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இக்கூட்டத்தின்போது கொரோனா வைரஸ் பரவலை முற்றாக தடுக்கும் நோக்கில் பொது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் பொருட்டு அங்கு ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வர்த்தகர்களினதும் பொது மக்களினதும் கவனத்திற்கு இத்தால் அறியத்தரப்படுகிறது.

வாஞ்சையுடன் வாசலில்..

இன்றைய  கொரோனா நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் 'வாஞ்சையுடன் வாசலில்' எனும் விசேட திட்டத்தை காரைதீவுபிரதேசசபை முன்னெடுத்துள்ளது.

அவற்றுள் ஒன்று ஊரடங்குவேளைகளில் வட்டாரம் வட்டாரமாக நடமாடும் மரக்கறி பேக்கரிப்பொருட்கள் மற்றும் மீன்களை விற்பனைசெய்வதற்காகவும் ஊரடங்கு நீக்கப்படும்வேளைகளில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விபுலாநந்தா விளையாட்டு மைதானம் ஆஸ்பத்திரி வளவு மாவடிப்பள்ளி மாளிகைக்காடு உள்ளிட்ட 4 இடங்களில் பொருட்களை விற்பனை  செய்வதற்காகவும் வியாபாரிகளை பதிவுசெய்து லைசன்ஸ் வழங்கப்படும். அவர்களே வியாபாரத்திலீடுபடமுடியும்.

பிரதேசசபையின் அனுமதியில்லாமல் காரைதீவுப்பிரதேசத்துள் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் மீறும்பட்சத்தில் முப்படையினரிரால் கைதுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்பதை கவலையுடன் அறிவிப்பதாக தவிசாளர் தெரிவித்தார்.

மூடப்பட்டுள்ள காரைதீவு ச.தொ.ச. விற்பனை நிலையத்தை  திறந்து மக்களின் பாவனைக்குவிடவேண்டும் என சபையில் கோரப்பட்டதனால் அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தல்.

திருமணத்திற்கு 6பேர் மட்டுமே..


பொலிசாரின் அறிவுறுத்தலின்பேரில் திருமணமொன்று மாப்பிள்ளை தரப்பில் 3பேரும் பெண்தரப்பில் 3பேரும் அனுமதிக்கப்படும். ஆனால் உற்றார்சுற்றாhருக்கான  திருமணச்சாப்பாடு என்பது தடைசெய்யப்பட்டுள்ளது.மேலும் மரணவீடாயின் எட்டுச்செலவு ஜந்தாம்செலவு 31அமுது போன்றவை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. வீட்டிலுள்ளோர் அதற்கான கருமங்களைச்செய்யலாம்.

ஊரடங்குவேளையில் பொது மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தமது வீடுகளுக்கு முன்னால் வருகின்ற நடமாடும் விற்பனை வியாபாரிகளிடம் கொள்வனவு செய்தல் வேண்டும்.

 தமது வீதிகளுக்கு நடமாடும் விற்பனை வியாபாரிகள் வராத பட்சத்தில் அது குறித்து பிரதேச செயலகம் அல்லது கிராம சேவகருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினால் உரிய ஏற்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வுத்தரவை மீறும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இத்தால் அறியத் தரப்படுகிறது.

அவ்வாறே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றபோது அவசிய தேவையின்றி பொது மக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி வீதிகளில் நடமாட வேண்டாம்.

 ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது எக்காரணம் கொண்டும் எவரும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம் என இத்தால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

 ஊரடங்கு உத்தரவை உதாசீனம் செய்து வீதிகளில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களை கைது செய்து தடுத்து வைப்பதற்கும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

 சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவ்வாறு தண்டிக்கப்படுவோரை விடுவிப்பதற்கு எம்மால் எவ்வித மனிதாபிமான உதவியும் வழங்கப்பட மாட்டாது.

அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படுகின்ற வேளையில் பொதுச் சந்தைகள் வர்த்தக நிலையங்கள் கடைகள் திறக்கப்பட்டு விற்பனைஇடம்பெறலாம்.இக்காலப்பகுதியில் மரண சம்பவங்கள் நிகழ்ந்தால் மரண வீட்டிற்கு செல்வோர் அங்கு தரித்திருக்காமல் உடனடியாக தமது வீடுகளுக்கு திரும்பி விட வேண்டும் என்பதுடன் பூதவுடல் நல்லடக்கத்தில் உறவினர்கள் உள்ளிட்ட 10  பேர் மாத்திரமே பங்குபற்ற வேண்டும்.

  மறு அறிவித்தல் வரை விழாக்களோ ஆலயதிருவிழாக்களோ  எந்த வைபவமும் நடத்தப்படக் கூடாது.

அசாதார சூழ்நிலை காரணமாக வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்படுகின்ற நிவாரணங்களை தனி நபர்கள் அல்லது பள்ளிவாசல்கள், கோவில்கள், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக விநியோகம் செய்ய முடியாது என அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதனால் அந்நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள பயனாளிகளின் பட்டியலை பொலிஸ் நிலையத்திடம் கையளித்து அதற்கான பாஸ் அனுமதியை பெற்று பொலிஸ் மற்றும் முப்படையினருடன் இணைந்தே பிரதேசசபை ஏற்பாட்டில் அவை விநியோகம் செய்யப்பட வேண்டும்.

சமீப காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்போர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் அவ்வாறானோர் வெளியில் நடமாடினால் அவர்கள் குறித்து கிராம சேவகர் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு இத்தால் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

 நடமாடும் வியாபாரிகளுக்கு 'பாஸ்' எனும் தற்காலிக அனுமதிப் பாத்திரம் பிரதேச சபைதத்விசாளர்  சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து பரிசீலனை செய்து, பொருத்தமானவர்களுக்கு மாத்திரம் அத்தகைய பாஸ் வழங்கப்படும்.

மேற்படி அறிவுறுத்தல்களை பொது மக்கள் முழுமையாக பின்பற்றுவதன் மூலம் எமது பகுதியில் கொடிய ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை முற்றாக தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.

காரைதீவு   நிருபர்


Comments