30.12.18- காரைதீவில் களைகட்டிய ஸ்கந்தலய பண்ணிசை கலை விழா..

posted Dec 29, 2018, 5:35 PM by Habithas Nadaraja
முத்தமிழ் வித்தகன் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணில் காரைதீவு ஸ்கந்தலய பண்ணிசை மன்றத்தின் கலைவிழா களைகட்டியிருந்தது.

4மணிநேரம் மேடையேறிய 23 இந்து பாரம்பரிய பண்பாட்டு கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்தது. நீண்டகாலத்திற்குப்பிறகு அருமையான இந்து நிகழ்வைக் கண்டுகளித்த திருப்தி அனைவரிலும் நிலவியது அவர்களுக்குக்கிடைத்த வெற்றியெனலாம்.

ஆம். காரைதீவு ஸ்கந்தலய பண்ணிசை மன்றத்தின் கலைவிழா மன்றத்தலைவர் கா.ஷனுஜன் தலைமையில் அண்மையில் விபுலாநந்த கலாசார மண்டபத்தில்  வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் காரைதீவு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பிரதேசசபை உறுப்பினர்களான த.மோகனதாஸ் மு.காண்டீபன் ச.நேசராசா திருமதி எஸ்.ஜெயராணி பிரதேசசபச்செயலாளர் அ.சுந்தரகுமார் கலாசார உத்தியோகத்தர் வி.விக்னேஸ்வரன் இந்தசமய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கே.சுஜித்ரா மற்றும் இளங்கவிஞர் காரையன்கதன் ஆகியோர் அதிதிகளாகக்கலந்துகொண்டனர்.

பண்ணிசைமன்ற சிறார்களின் கண்கவர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் 4மணிநேரம் தொடர்hச்சியாக நடைபெற்றன.
இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ் நிகழ்ச்சிகளும் மேடையேறின. கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதிகேட்ட படலம் ஒரு 10நிமிட நாடகமொன்றின்மூலம் அரங்கேறியது. இந்நாடகம் பலரையும் கவர்ந்திழுத்தது.

காரைதீவின் இளங் கவிஞர் காரையன் கதன் விருது வழங்கிப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

மன்றத்தின் இலச்சினை தலைவர் ஷனுஜனால்  உத்தியோகபூர்வமாக கலாசார உத்தியோகத்தர் விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.
பிரதம அதிதியான தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்:இந்துக்களின் பண்பாடுபாரம்பரியம் பல்லாயிரம் ஆண்டுகாலம் பழைமையானவை. 2500ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்ணிசை இன்றும் தேவார திருமுறைகளால் போற்றப்பட்டுவருகிறது என்றால் அது காலத்தால் அழியாது.

முத்தமிழழுக்குப்பேர்போன காரைதீவு மண்ணில் தமிழர்பண்பாடு இந்துப்பாரம்பரியம் மேலும் உயிர்வாழும் என்ற நம்பிக்கை ஸ்கந்தலய பண்ணிசை மாணவனின் கலை நிகழ்ச்சிகளைப்பார்க்கின்றபோது என்னுள் எழுகிறது. அத்தனை நிகழ்ச்சிகளும் அற்புதமானவை. பாராட்டுக்கள் என்று அவர் மேலும் புகழாரம் சூட்டினார்.

தமிழர்கள் இந்தநாட்டில் எதையும் போராடித்தான் பெறவேண்டிய துரதிஸ்டநிலை. தமிழர்களது பண்பாட்டு கலாசார பாரம்பரிய அமிசங்கள் கடந்தகாலத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.எனினும் விழவிழ எழுவோம் என்பதற்கமைய எமது மக்கள் மீண்டும் மீண்டும் எழுந்துவருவது அவர்களது தனித்துவ குணம்.இந்த மண்ணிலும் இந்துசமய பாராம்பரியங்கள் தொடர்ந்து உயிர்வாழும் என்பதற்கு இந்த இளம்சந்ததியினர் தலைப்பட்டிருப்பதுகண்டு மிகவும் சந்தோசமடைகின்றேன் என்றார்.

காரைதீவு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோரும் உரையாற்றினார்கள். மன்றத்தின் ஆசிரியை செல்வி சி.இந்துமதி நன்றியுரையாற்றினார்.திருவாதிரை தினமாகவிருந்தும் மண்டபம் நிறைந்த மக்கள்கூட்டம் கூடியிருந்தமை நிகழ்ச்சியின் வெற்றியை வெளிக்காட்டுகின்றது.


வி.ரி.சகாதேவராஜா 
Comments