05.03.17- கறிவேப்பிலை..

posted Mar 4, 2017, 7:06 PM by Habithas Nadaraja
மூலிகை மந்திரம்

நம் வீட்டில் உள்ள பொருட்கள், வீட்டுத் தோட்டத்திலும் சாலை ஓரங்களிலும் கிடைக்கும் செடிகள், கடையில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள் என எளிமையான, பாதுகாப்பான, குறைந்த செலவிலான மருத்துவத்தைப் பற்றியே இந்த தொடரில் பார்த்துவருகிறோம்.
அந்த வரிசையில் இந்திய உணவில் முக்கிய அங்கம் வகிக்கும் கறிவேப்பிலை பற்றி தெரிந்து கொள்வோம்.இந்தியா மற்றும் அந்தமான் தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டது கறிவேப்பிலை. இது பெருவாரியாக தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரா மற்றும் சில வட மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. மலைகள், காடுகள், வீட்டுத்தோட்டங்கள் என்று எங்கும் இது பயிரிடப்படக் கூடியதாகும். அடர்ந்த பசுமையான இலைகளையும், நறுமணத்தையும் கொண்டுள்ளதால் இதை வீட்டுத்தோட்டங்களில் அழகுக்காகவும் வளர்ப்பதுண்டு.

கறி வகைகளிலும் குழம்பு, ரசம், நீர்மோர் ஆகிய உணவு வகைகளிலும் இதைத் தவறாமல் தாளிதமாகச் சேர்ப்பர். எனவே, இதற்கு ‘தாளிப்பின் ராணி’ என்று செல்லப்பெயர் உண்டு. மேலும், உணவாக கீரை வகைகளில் ஒன்றாகவும் உபயோகப்படுகிறது. கீரைகளில் முக்கிய இடம் வகிப்பதால் கறிவேப்பிலையைக் ‘கீரைகளின் தாய்’ என்று கூட அழைப்பர்.Murraya Koenigii என்பது கறிவேப்பிலையின் தாவரப்பெயர் ஆகும். Curry leaves என்பது ஆங்கிலப்பெயர் ஆகும். ‘சுரபி நிம்பா’, ‘கலசகா’, ‘மகாநிம்பா’ என்றெல்லாம் வடமொழியில் குறிப்பர். ‘கறிவேம்பு’ என்றும் தமிழில் அழைப்பதுண்டு.கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்:உண்ணும்போது தேவையில்லாதது என்று தூக்கி ஓரமாக வைக்கும் கறிவேப்பிலைக்கு இத்தனை சக்தி உண்டா என்று தெரிந்தால் ஆச்சரியம் மிகும்!

கறிவேப்பிலை மரத்தின் அத்தனை பாகங்களும் மருத்துவப் பயனும், மணமும் வாய்ந்தவை ஆகும். இதன் பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருவதாக அமைந்துள்ளன. இதன் இலை வயிற்றுக் கோளாறுகளுக்கு கை கண்ட மருந்தாகிறது. புரோட்டோசோவா என்னும் கிருமிகளைக் கொல்வதில்(Antiprotozoal) முதலிடம் வகிக்கிறது.இக்கிருமிகள் வயிற்றுப்போக்குக்குக் காரணமாகும் நுண்கிருமிகள் ஆகும். மேலும், வயிற்றுக்கடுப்பை போக்கக்கூடிய மருந்தாகவும் கறிவேப்பிலை பயன்படுகிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் பசியைத் தூண்டுவதோடு சீரான செரிமானத்துக்கும் துணையாகிறது. நோய்க்கிருமிகள் எதுவாய் இருப்பினும் கறிவேப்பிலை எதிர்த்து நிற்கவல்லது.

சீதபேதியைக் குணப்படுத்துவதில் சிறந்தது. கறிவேப்பிலை மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது வேர்க்குரு, கொப்புளங்கள் போன்ற பல சரும நோய்களையும் போக்கும் திறன் வாய்ந்தது. மலத்தை இளக்கக்கூடியது, குளுமைத்தன்மை வாய்ந்தது, வலிைம ஊட்டக்கூடியது, பித்தம், கபம், வீக்கம் இவற்றைப் போக்கக்கூடியது. மூளைக்கு பலத்தைத் தருவதோடு ஞாபக சக்தியையும் வளர்க்கும் குணமுடையது. 

கறிவேப்பிலை விஷக்கடிகளுக்கும் மருந்தாகும் என்பதால் வண்டுக் கடி, தேள் கடி, பாம்புக் கடி மற்றும் விலங்குகள் கடித்ததால் வந்த விஷத்துக்கு இதை மேற்பூச்சாகவும் உள்ளுக்கும் பயன்படுத்தலாம். இலையை உள்ளுக்கு சாப்பிட வாந்தியை நிறுத்தும். கறிவேப்பிலை யின் பட்டையும், வேர்ப்பகுதியும் உடலின் உள்ளுறுப்புகளைத் தூண்டும்படியாக மருத்துவர்கள் பயன்படுத்துவர்.கறிவேம்பின் குச்சிகள் ஆலங்குச்சி, கருவேலங்குச்சி போல பல் துலக்கப் பயன்படுகிறது. சோர்வு, திசுக்களின் அழிவு இவற்றைப் போக்குவதில் கறிவேம்பின் அனைத்து பாகங்களும் சிறந்து விளங்குகின்றன.

குறிப்பாக, திசுக்களின் மாற்றம், சர்க்கரை நோய், ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் போன்ற நோய்களால் ஏற்படும் தீங்கு களை எதிர்த்து நிற்கக்கூடியது. இதிலுள்ள ‘முராயாசினின்’ என்னும் வேதிப்பொருள் நோய் நீக்கும் மருந்தாகவும், கிருமி நாசினியாகவும், பூஞ்சைக்காளான் கொல்லியாகவும் பயன்படுகிறது.கறிவேம்பின் இலைகளில் மிகுதியாக ‘கார்பஸோல் ஆல்கலாய்ட்ஸ்’ உள்ளது. மேலும், ‘கௌமாரின் குளூகோசைட்ஸ்’, ‘ஸ்கோப்போலின்’ ஆகிய மருத்துவப் பொருட்களும் அடங்கியுள்ளன. இலையில் ‘பீட்டா கரோட்டின்’ எனும் சத்துப்பொருள் மிகுந்துள்ளது.கறிவேப்பிலையை வேக வைக்காமலோ, பொரிக்காமலோ சாப்பிடும்போது நமக்கு ‘பீட்டா கரோட்டின்’ சத்து முழுமையாகக் கிடைக்கிறது. பீட்டா கரோட்டின்தான் வைட்டமின் ‘ஏ’ சத்து உருவாகக் காரணமாகிறது. வைட்டமின் ‘ஏ’ சத்து கண்கள், பற்கள், எலும்புகள், தோல் ஆகியவற்றுக்கு ஊட்டச்சத்தாக அமைகிறது.கறிவேம்பின் பட்டையினின்று எடுக்கப்படும் சத்தானது வீக்கத்தைக் கரைக்கும் தன்மை உடையது. கறிவேம்பின் பழங்கள் உணவாக உண்ணக் கூடியவை. சுவையுள்ளவையும் கூட. பழங்களும் வைட்டமின் ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களை உள்ளடக்கியது.பழங்களின் சதைப்பகுதி 64.9% ஈரப்பதம் உடையது. 9.76% சர்க்கரை சத்து உள்ளடக்கியது. 13.35 மி.லி. அளவு வைட்டமின் ‘சி’ சத்தைப் பெற்றுள்ளது. 100 கிராம் பழச்சதையில் 1.97 கிராம் புரதமும், 0.82 கிராம் பாஸ்பரஸும், 0.811 கிராம் பொட்டாசியமும், 0.166 கிராம் கால்சியமும், 0.216 கிராம் மெக்னீசியமும், 0.007 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளன.

கறிவேப்பிலையின் மருத்துவப் பயன்கள்:
‘வாயினருசி வயிற்றுளைச்ச வீடுசுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற்
கருவேப் பிலையருந்திக் காண்.’

அகத்தியர் குணபாடம்

மேற்கூறிய பாடலில் இருந்து கறிவேப்பிலையை உண்பதால் வாய் ருசியின்மை, வயிற்று உபாதைகள், நீண்ட நாட்களாக விடாது வாட்டுகிற காய்ச்சல், பித்த மயக்கம் ஆகியன குணமாகும் என்று தெரிய வருகிறது.

*கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி அத்துடன் போதிய மிளகு, உப்பு, சீரகம், சுக்கு போன்றவற்றையும் சேர்த்துப் பொடித்து வைத்துக் கொண்டு குழம்பு, ரசம் ஆகியவற்றுக்கு முன்பாக சுடுசோற்றோடு சேர்த்து சிறிது நல்லெண்ணெயோ, நெய்யோ கலந்து உண்ண வயிற்று மந்தம், மந்தபேதி, மலக்கட்டு, நீரிழிவு ஆகியன விலகும்.20 கிராம் கறிவேப்பிலையுடன், 3 கிராம் சீரகம், 2 கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ேமாரில் கலந்து சில நாட்கள் குடித்து வர உஷ்ண பித்தம், கருப்பைச் சூடு குணமாகும். கறிவேம்பிலுள்ள ‘கார்பஸோல் ஆல்கலாய்டுகள்’ கருமுட்டை உற்பத்தியைத் தூண்டி பிள்ளைப்பேற்றுக்கும் துணை நிற்கின்றன.

*ஐந்தாறு கறிவேப்பிலை இலையோடு வயதுக்குத் தக்கபடி 1 முதல் 3 மிளகு வரை சேர்த்து அரைத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து குழந்தைகளை நீராட்டிய பின் உள்ளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு மந்தம் நீங்கி பசியுண்டாகும்.

*கறிவேப்பிலை ஈர்க்கோடு சிறிது முலைப்பால் சேர்த்து நசுக்கிப் பிழிந்து, சிறிது இலவங்கமும் திப்பிலியும் சேர்த்துக் கொடுக்க வாந்தி நிற்கும். பசி உண்டாகும்.

*கறிவேப்பிலையோடு தேங்காய், உப்பு, புளி, பருப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவோடு சேர்த்து உண்ண வயிற்றிலுள்ள வாயு வெளியேறும். பித்தம் போகும். பசி மிகும்.

*கறிவேப்பிலையோடு நீர் சேர்த்து சங்கு கொண்டு இழைத்து முகப்பருக்கள் மீது பூசி வர பருக்கள் நாளடைவில் மறையும். இதையே சிறிது மோரில் கலந்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாவதுடன் சீதபேதியும் குணமாகும்.

*ஒரு பங்கு கறிவேப்பிலையுடன் கால்பங்கு அரிசித் திப்பிலி சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு இரண்டு வெருகடி அளவு(சுமார் 5 கிராம்) என சாப்பிட்டு வர சர்க்கரைநோய் குணமாகும். சர்க்கரை நோய்க்கு இது ஒரு துணை மருந்தாக அமையும்.

*சிறிதளவு கறிவேப்பிலையுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், கசகசா, லவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்த்து மைய அரைத்து அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளின் மீதும், பிரசவித்த பின் ஏற்பட்ட வரிவடிவ தழும்புகளின் மீதும் பூசி வர நாளடைவில் அவை மறையும்.

*நல்ல சாறுடன் கூடிய புதிதான கறிவேப்பிலை இலை ஒரு பிடி எடுத்து அரைத்து அத்துடன் சுமார் 20 கிராம் அளவுக்கு ஆலம் விழுதும், 20 கிராம் அளவுக்கு வெந்தயமும் சேர்த்து, 500 மி.லி. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவி வர தலைமுடி கருமை பெறும். செழுமையுடன் நீண்டு வளரும்.

*கறிவேப்பிலையைத் துவையலாகவோ சோற்றிலிடும் பொடியாகவோ அன்றாடம் சாப்பிட்டு வர ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டிக்கும் ஆற்றல் உடையது. ேமலும், இதய நோய்களைத் தடுப்பதாகவும் அமைகிறது.

*நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் 10 இலைகளும், மாலையில் 10 இலைகளும் மென்று தின்பதால் ரத்தத்தில் உள்ள
சர்க்கரை அளவு மட்டுப்படும். சளியும் குறையும். குரல் மென்மையடையும்.

*கறிவேப்பிலையுடன் துவரம்பருப்பு, இஞ்சி, சீரகம், பெருங்காயம் கலந்து பொடித்து சாப்பிட்டு வர வாய்வு, சீதளம், காரணமாக உண்டான இடுப்புப் பிடிப்பு, கை, கால்கள், தொடைப் பகுதியில் ஏற்பட்டு பிடிப்பு கள், வலி ஆகியன குணமாகும்.

*கறிவேப்பிலையை எலுமிச்சை சாறு விட்டு அரைத்து விழுதாக்கி தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வர பொடுகு, பேன் தொல்லைகள் போகும். தலைமுடி வளம் பெறும்.

*கறிவேப்பிலையோடு மஞ்சளும், சீரகமும் சேர்த்து அரைத்து உள்ளுக்கு மோரில் கலந்து கெடுக்க சித்தப்பிரமை குணமாகும்.

*மூளைத் திசுக்கள் செயல்குன்றாமல் இருக்க மூளையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்கள் அன்றாடம் கறிவேப்பிலையை உணவுடன் சேர்க்க வேண்டும்.Comments