24.04.15- திருப்பழுகாமம் சிவலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம்..

posted by Web Team   [ updated ]

திருப்பழுகாமம், வள்ளுவர்மேடு ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்-2015 இன்றைய தினம் (24.04.2015) ஆரம்பமாகியது. இது எதிர்வரும் 03.05.2015 அன்று தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுறவுள்ளது.
24.04.15- சிறைச்சாலைகளில் திடீர் சோதனை நடத்தியதில்73 கையடக்கத்தொலைபேசிகள் மீட்பு..

posted by Pathmaras Kathir


சிறைச்சாலைகளில் திடீர் சோதனை நடத்தியதில் இதுவரை 73 கையடக்க தொலைபேசிகளும் 54 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
 
நீதிமன்ற அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அனைத்து சிறைச்சாலைகளிலும் இத்திடீர் சுற்றிவளைப்பு சேதனை நடத்தப்பட்டது.
 
ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரை நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 73 கையடக்கத் தொலைபேசிகள்- 54 சிம் அட்டைகள் மற்றும் 7 ஹெரோயின் பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையம் மேலும் தெரிவித்துள்ளது

24.04.15- கிழக்கு கல்வியமைச்சில் அன்றாட கருமங்கள் ஆரம்பமாகமுன்பு தேசியகீதம் தமிழில் இருக்கவேண்டும்!

posted by Pathmaras Kathir

கிழக்குமாகாண கல்வியமைச்சில் தினமும்  அன்றாட கருமங்கள் ஆரம்பமாகமுன்பு காலை 8.45மணியளவில் இசைக்கப்படும் தேசியகீதம் தமிழிலும் பாடப்படவேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாண கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணியிடம்  இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா இது தொடர்பாக தெரிவிக்கையில்;:

இசுருபாய மத்திய கல்வியமைச்சில் காலையில் அன்றாட கருமங்கள் ஆரம்பமாகமுன்பு சிங்களத்தில் தேசியகீதம் இசைப்பது வழமை.அதுபோல் திருகோணமலையிலுள்ள கல்வியமைச்சிலும் கடந்த 2010ஆம் ஆண்டுமுதல்  சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் இசைக்கப்பட்டுவருகிறது. அந்நடைமுறை கடந்த ஆட்சியிலும் கடந்த ஆளுநர் காலத்திலும் திணிக்கப்பட்டதொன்றாகும்.

ஆனால் இன்று ஆட்சிமாற்றத்தின் பின்னரான நல்லாட்சி நிலவுகின்ற நிலையில் அதுவும் தமிழ்பேசும் ஒருவர் கல்வியமைச்சராக இருக்கின்ற நிலையில் இன்னமும் சிங்களத்தில் மட்டும் தேசியகீதம் இசைக்கப்படுவதை ஏற்கமுடியாது. எனவே  தமிழ்மொழியிலும் இசைக்கப்படவேண்டும். அது உரிமையும்கூட.
கிழக்கின் நிருவாகமொழி தமிழ்!
கிழக்கின் அதிகூடுதலாகப்பயன்படுத்தப்படுகின்ற மொழி தமிழ்மொழியாகும். கிழக்குமாகாண நிருவாக மொழியும் தமிழ்மொழியாகும். இலங்கையின் அரசகரும மொழிகளாக சிங்களமும் தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.அரசியலமைப்பிலும் இது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.எனவே இது சட்டரீதியானது.
அதைவிட கிழக்குமாகாண கல்விப்புலத்தில் 3லட்சத்து 8ஆயிரத்து  203 தமிழ்மொழிமூல மாணவர்களும் 16ஆயிரத்து 183 தமிழ்மொழிமூல ஆசிரியர்களும் உள்ளனர். அதேவேளை 77ஆயிரத்து  57 சிங்களமொழிமூல மாணவர்களும் 4ஆயிரத்து 457 சிங்களமொழிமூல ஆசிரியர்களும் உள்ளனர். அதாவது சிங்களமொழிமூல ஆளணியைவிட 04 மடங்கு அதிகமாக தமிழ்மொழிமூல ஆளணி உள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களுள் 12தமிழ்மொழிமூல கல்விவலயங்களாகும். மீதி 05 வலயங்களே சிங்கள மொழிமூல வலயங்களாகும். 
ஆகவே கிழக்குமாகாண கல்விப்புலத்தில் தமிழ்மொழிமூல வீதம் எத்துணை அதிகமென்பதை தெளிவாக அறியலாம்.எனவே கிழக்கு கல்வியமைச்சில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்படுவதுதான் நியாயமும் சமத்துவமுமமாகும். 

ஒருதடவை கிழக்குமாகாண தமிழ்மொழித்தின விழா களுதாவளையில் நடைபெற்றபோது அங்கு ஆரம்பத்தில் சிங்களத்தில் தேசியகீதம் பாடுமாறு திணிக்கப்பட்ட வரலாற்றையும் இவ்வண் குறிப்பிடுதல் பொருத்தமாகும். இவ்வகையான அடக்குமுறை திணிப்பு இனங்களிடையே உண்மையான நல்லுறவையும் புரிந்துணர்வையும் நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துமா? இன்றுஅவ்வாட்சி இல்லை.
இன்றைய ஆட்சியில் ஜனாதிபதி முதல் அமைச்சர் ராஜித சேனாரத்ன வரை அனைவரும் தேசியகீதம் தமிழிலும் பாடப்படவேண்டும் என தெளிவாகச்சொல்லியிருக்கின்றனர்.
முதலமைச்சருக்கு பாராட்டுகள்!
இவ்வாரம் கிழக்குமாகாண சபையில் தமிழ்மொழியில் தேசியகீதம் முதன்முதல் பாடப்பட்ட வரலாறுள்ளது.  அதற்காக முதலமைச்சரை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றோம். அதுமட்டுமல்லாமல் தமிழிலும் சுற்றறிக்கை வெளியிடப்படவேண்டும் என்ற எமது கோரிக்கையை அடியொற்றியதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் சகல அமைச்சுகளுக்கும் அவ்வாறான உத்தரவை உடனடியாக வெளியிட்டமைக்காக மீண்டும் ஒருதடவை பாராட்டுகின்றோம். 
முதலமைச்சரின் இத்தகைய செயற்பாட்டினால் கிழக்கின் சுயகௌரவம் சுயமரியாதை காப்பாற்றப்பட்டிருக்கிறது. இத்தகைய துணிந்த செயற்றிறனுள்ள இனப்பாகுபாடற்ற முதலமைச்சரையே நாம் விரும்புகின்றோம். முதலமைச்சரின் இவுத்தரவு தமிழ்மொழிபேசுவோர் மத்தியில் புத்துணர்ச்சி ஏற்படவைத்துள்ளது. நம்பிக்கையுடன் கல்வி அபிவிருத்தியையும் முன்னெடுத்துச்செல்லமுடியும்.
முதலமைச்சரின் இம் முன்மாதிரியாகப் பின்பற்றி கிழக்கில் அதிகூடிய ஆளணியைக்கொண்டிருக்கின்ற கல்வியமைச்சில் பாடப்படும் தேசியகீதத்தை தமிழிலும் பாடுவதை கிழக்கு கல்வியமைச்சர் திரு.தண்டாயுதபாணி உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.
எனவே தமிழ்பேசும் மக்கள் அதிகமாகவுள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சில் காலையில் இசைக்கப்படும் தேசியகீதம் சுந்தரத்தமிழில் இசைக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கல்வியமைச்சர் திரு.தண்டாயுதபாணியிடம் அன்புடன் வேண்டுகின்றோம். 
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கிழக்குமாகாண கல்வி நிருவாகசேவை அதிகாரிகளின் சங்கமும் மேற்போன்றதொரு கோரிக்கையை கிழக்கு கல்வியமைச்சரிடம் விடுத்துள்ளது. சங்கச் செயலாளர் எ.எல்.எம்.முக்தார் அதனை அனுப்பிவைத்துள்ளார்.
தகவல்:காரைதீவு நிருபர் 

24.04.15- நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மாலையில் இடியுடன் கூடிய மழை..

posted by Liroshkanth Thiru

நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இன்று (24)  மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புத்தளத்திலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக கொழும்பு, காலி வரையான பகுதிகளிலும் , வடக்கு மற்றும் கிழக்கு  கடலோரங்களில் காலையில்  மழைக்கான சாத்தியம் நிலவும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்கும் படி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.23.04.15- மட்டக்களப்பில் டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து..

posted Apr 23, 2015, 2:35 AM by Pathmaras Kathir

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக்கொண்டதில் முச்சக்கர வண்டியில் வந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 8.00மணியளவில் மட்டக்களப்பு திருமலை வீதியில் சத்துக்கொண்டான் பொலிஸ் காவலரணுக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த பெண் ஆகியோர் காயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியை மோதிய டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றுவிட்டதாகவும் இது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.22.04.15- நாளையுடன் 100 நாள் முடிவடைகின்றது:ஜனாதிபதி விசேட உரை..

posted Apr 22, 2015, 9:12 AM by Pathmaras Kathir


அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் நாளையுடன் முடிவடைவதோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளார். இத்தகவலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின்   100 நாள் வேலைத் திட்டம் நாளையுடன் முடிவடைகின்றபோதும் வேலைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில திட்டங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

22.04.15- வாகரைப் பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் மீட்பு

posted Apr 22, 2015, 9:05 AM by Liroshkanth Thiru

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியிலிருந்து காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் நேற்று செவ்வாய் கிழமை (21/04/2015) மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராஜா சுரேஸ்குமார் தெரிவித்தார்.

காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக தமக்குக் கிடைத்த தகவலையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்து சென்று  இறந்த நிலையில் கிடந்த காட்டு யானையின் உடலை தாம் மீட்டுள்ளதாகவும், இன்று(22/04/2015) புதன் கிழமை யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் இது தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகாவும் மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராஜா சுரேஸ்குமார் மேலும் தெரிவித்தார்.
22.04.15- எதிர்வரும் 3 , 4 ஆம் திகதிகளில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு..

posted Apr 21, 2015, 7:43 PM by Pathmaras Kathir


நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களும் எதிர்வரும் மே மாதம் 3 , 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வெசாக் போய தினங்களை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

21.04.15- "பின்னவல" திறந்த மிருககாட்சி சாலையிற்கான அனுமதி இலவசம்..

posted Apr 21, 2015, 11:29 AM by Web Team

கடந்த காலங்களில் யானைகள் சரணாலயமாக பிரசித்தி பெற்றிருந்த "பின்னவல" சரணாலயமானது தற்போது திறந்தவெளி மிருகக்காட்சி சாலையாக சுமார் 47 ஏக்கர் விஸ்தீரணமுள்ள நிலப்பரப்பில் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த 18.04.2016 அன்னு திறந்து வைக்கப்பட்டது. மேலும் இதற்கான கட்டண அனுமதியானது எதிர்வரும் ஏப்பிரல்-31 ஆம் திகதிவரை முற்றிலும் இலவசம் எனும் நடைமுறையில் காணப்படும் எனவும் கூறப்படுகின்றது,
21.04.15- அரச சேவை தொழிற்சங்க சம்மேளனம் கிழக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பு

posted Apr 21, 2015, 10:16 AM by Habithas Nadaraja   [ updated Apr 21, 2015, 10:17 AM ]

ஸ்ரீ லங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனம் கிழக்கு மாகாண ஆளுநருடன் தொழிற்சங்க சந்திப்பொன்றை நடத்தியுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவுடனான இச்சந்திப்பில் மேற்படி தொழிற்சங்க சம்மேளனத்தலவரும் தொழிற்சங்கவாதியுமான எஸ்.லோகநாதன் மற்றும் சம்மேளன நிறைவேற்றக்குழு உறுப்பினர் என்.சத்தியமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இத் தொழிற்சங்க சந்திப்பின் போது சம்மேளனம் சார்பில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக சம்மேளனத்தலைவர் லோகநாதன் தெரிவித்தார்.கோரிக்கைகள் உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் அட்டவணைப்படுததப்படாத ஊழியர்களுக்கென இடமாற்ற சபை ஏற்படுத்தப்படவேண்டும்.கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களிலும் மற்றும் திணைக்களங்களிலும் அட்டவணைப் படுத்தப்படாத பதவிப் பெயர்களில் (UNSCHEDULED POSS) கடமை புரியும் சிற்றூழியர்களுக்கு 25/2014 அரச நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதியுடன் உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அட்டவணைப்படுத்தப்படாத பதவிகளில் வகுப்பு  3 நிலைமையில் நீண்டகாலமாகக் கடமைபுரியும் ஊழியர்கள் எவ்வித பதவி உயர்வுமின்றி கடமை புரிகின்றனர். இவர்களுக்கு குறித்த சேவைப்பிரமாணம் EP/14/ES/MIN.GRADE/SOR- –2013.05.29 இற்கு அமைவாக உடன் பதவி உயர்வு வழங்கப்படல் வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தை (கிழக்கு) வதிவிடமாகக் கொண்ட அரச ஊழியர்கள் பலர் அவர்களது சுயவிருப்மின்றி துண்டுக் குலுக்கல் மூலமாக வடமாகாணத்தின் அரச அலுவலகங்களுக்கு இணைக்கப்பட்டு பல்வேறு பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் கடமைபுரிந்து வருகின்றனர் இவர்களுள் முகாமைத்துவ உதவியாளர் அலுவலகப்பணியாளர்களமுள்ளனர். இவர்களில் பலர் கிழக்கு மாகணத்தில் பணியாற்றும் பொருட்டு திணைக்களத்தலைவர்கள் மூலமாக விண்ணப்பத்திருந்தும் நீண்ட காலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது இழுத்தடிக்கப்படுவதால் கிழக்கு ஆளுநர் இவர்களது விடயத்தில் ஆவன செய்து உதவ வேண்டும்.கிழக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபை, நகரபை ,பிரதேச சபைகளில் கடமைபுரியும் சுகாதார தொழிலாளர்கள், அலுவலக தொழிலாளர்கள், சாரதிகள் வேலை தொழிலாளர்கள், நூலக தொழிலாளர்கள் (அட்டவணைப்படுத்தப்படாத வரை விட்ட பதவிப்பெயர்களில்) மற்றும் தொழிலாளர் தரங்களில் கடமைபுரியும் ஊழியர்களுக்கு சீருடைக்கொடுப்பனவு 4000 ரூபா வழங்கப்படாமல் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் அரச நிர்வாக சுற்றறிக்கை 05/2013 இற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் கடமை புரியும் அலுவலகப் பணியாளர்கள், பாடசாலைப் பணியாளர்கள் மற்றும் ஆசிரிஉதவியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட சேவைகளிலுள்ளவர்களில், கிழக்கு மாகாணசபையின் கீழ் உள்வாங்கப்பட்டவர்களுக்கு இடர்கடன், சம்பள நிலுவை, உழைத்தகாலப் பகுதிக்குரிய கொடுப்பனவு நிலுவை என்பன நீண்ட காலமாக வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வண்ணம் தேவையான நிதியை மாகாண திறைசேரியிடமிருந்து வழங்குவதற்கு ஆளுநர் உதவ வேண்டும்.இணைந்த சேவை இடமாற்ற சபையின் மூலமாக எடுக்கப்படும் முடிவுகள் மேன்முறையீட்டு சபை அரசியல் அழுத்தம் போன்றவற்றின்மூலமாக மாற்றப்படுவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது. இதனால் இடமாற்ற சபை அமர்வு தேவையில்லையென்ற நிலைமை தோன்றுவதற்கு அமைவாக செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.எனவே நியாயங்களுக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறாமலிருப்பதற்கு மேன்முறையீட்டு சபையிலும் தொழிற்சங்கப்பிரதிநிதிகள் இடம்பெற்று இறுதி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.பாடசாலைப்பணியாளருக்கான இடமாற்ற சபை அமைக்கப்படுவதுடன் அலுவலகப் பணியாளர்கள் அதிவிசேட தரப்பதவி உயர்வையும் அமுல்படுத்த வேண்டும்.

சம்மேளனம் முன்வைத்த மேற்படி கோரிக்கைகள் தொடர்பிலான நியாயங்களை இச்சந்திப்பின் போது ஆளுநர் ஆழமாகக் கேட்டறிந்து கொண்டதாகவும் சில மாதங்களுக்குள் படிப்படியாக கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதாகவும் ஆளுநர் உறு தியளித்ததாக சம்மேளனத்தலைவர் எஸ்.லோக நாதன் தெரிவித்தார்.இதேவேளை தமது தொழிற்சங்க சந்திப்பில் முன்வைத்த கோரிக்கைகளையிட்டு சம்பந்தப்பட்ட மாகாண அமைச்சுகளின் கவனத்திற்கும் ஆளுநர் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                                                                                                                      நன்றி - கஜன்

1-10 of 1962