12.12.16- மீலா – துன் - நபி விழாவை முன்னிட்டு கௌரவ எதிர்க்கட்சி தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி.

posted Dec 11, 2016, 6:08 PM by Habithas Nadaraja
.முஸ்லிம்களின் முக்கிய தினங்களில் ஒன்றான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூறும் மீலா – துன் - நபி விழாவை முன்னிட்டு இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம்களின் நாட்காட்டியில் மீலா – துன் - நபி தினமானது மிக முக்கிய இடம் வகிக்கின்றது. இன்றைய தினத்தில் அமைந்துள்ள உத்தம நபிகள் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை உலகவாழ் முஸ்லிம்கள் வெகு விமரிசையாக நினைவுகூர்ந்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்போதனைகளில் அனைத்தின மக்களிடையேயும் சாந்தியும் சமாதானமும் ஏற்படுவதன் முக்கியத்துவம் பற்றியவை மிக முக்கியமானவையாகும். அன்னாரது வாழ்க்கை முறையானது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டதுடன், கருணை, இரக்கம், பொறுமை மற்றும் சமத்துவம் என்பவற்றின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், தாம் போதித்த எளிமையான வாழ்க்கை முறை பற்றிய எண்ணக்கருவை தமது செயல்முறை வாழ்விலும் செய்து காட்டினார். ஒரு சமூகத்தில் காணப்பட வேண்டிய உண்மைத் தன்மை மற்றும் நியாயத் தன்மை என்பவற்றின் பெறுமதி பற்றி வலியறுத்தி, ஒழுக்கமிக்க சமூகமொன்றினைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் பற்றி புனித நபிகளாரின் போதனைகள் அமைந்துள்ளன. 

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். எனவே இலங்கைவாழ் மக்களாகிய நாம் அனைவரும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு அழகான தேசத்தைக் கட்டியெழுப்பும் இம்முயற்சியில் அன்னாரது போதனைகளை எமது வாழ்க்கையிலும்; எடுத்து நடப்பதற்கு வாய்ப்புக்கிட்ட வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன். 

மீலா – துன் - நபி விழாவை கொண்டாடும் எமது சகோதர முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


இரா. சம்பந்தன்
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்       


    
 

Comments