12.12.16- யாழ். நல்லூரில் இடம்பெற்ற பாரதி விழா..

posted Dec 11, 2016, 6:54 PM by Unknown user
யாழ். இந்தியத் துணைத்தூதரகம் அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த பாரதிவிழா பாரதியரின் பிறந்ததினமாகிய 11.12.2016 மாலை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்ற அமைப்பாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி ஆற்றினார். 

தமிழகத்தின் முன்னணிப் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் சிறப்புரையாற்றினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் சிறப்புரையாளருக்கான அறிமுகவுரையை ஆற்றினார்.  அமுதசுரபிக் கலாமன்ற உறுப்பினரும் வங்கி உத்தியோகத்தருமாகிய சி.சசீவன் நன்றியுரை ஆற்றினார்.

யாழ் முன்னணி இசைக்கலைஞர்கள் இணைந்து வழங்கிய  பாரதி பாடல்கள் இசைவிருந்தும் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த இசைநிகழ்ச்சியில் சிவஸ்ரீ. விஸ்வ பிரசன்னா குருக்கள் (நல்லூர்), சிவஸ்ரீ. கு.விஸ்வசுந்தர், ஈழத்து இளைய சௌந்தரராஜன் இ.அருள்ஜோதி, ஸ்ரீ.சுலக்ஷன், ம.தயாபரன், தி.மேரி நவரத்தினம், நாதன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாரதி; பாடல்களை இசைத்தனர். ஆசிரியர் ஜேம்ஸ் அன்ரன் கீபோர்ட் இசையையும் ந.பிரேமானந்த் ஒக்ரோ பாட் இசையையும் கபிலன் தபேலா இசையையும் இ.இராஜேஸ்வரன் பேஸ்கிற்றார் இசையையும் வழங்கினர். 

ஒரு மணி நேரம் இடம்பெறவேண்டிய  சிறப்புரை நிகழ்வு ஒன்றேகால் மணிநேரத்தையும் கடந்து சென்றபோது தூதரக உத்தியோகத்தர் பேச்சாளருக்கு அருகில் சென்று நேரத்தைச் சுட்டிக் காட்டினார். இதனால் அசௌகரியமுற்ற பேச்சாளர் சடுதியாக நன்றி வணக்கம் எனக்கூறிப் பேச்சை முடித்துக் கொண்டார். பேச்சாளர்கள் சபை அறிந்து பேசவேண்டுமென சபையில் உள்ள பெரியவர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. 

இசைநிகழ்வில் பங்கேற்ற கலைஞர்கள் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றும் பொன்னாடை மற்றும் பொன்முடிப்பு வழங்கப்பட்டுக் கௌரவப்படுத்தப்பட்டனர். 

நிகழ்வின் தொடக்கமாக பிற்பகல் 3.30 மணிக்கு நல்லூரில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 
யாழ். நல்லூரில் இடம்பெற்ற பாரதி விழா..


மேலதிக படங்களுக்கு

Comments