13.12.16- மலையக மக்கள் தொடர்பில் அனுரகுமாரவை பாராட்டுவோம்; வரலாற்றையும் மறக்காதிருப்போம் - கூட்டணி தலைவர் மனோ கணேசன்

posted Dec 12, 2016, 5:27 PM by Habithas Nadaraja   [ updated Dec 13, 2016, 10:06 AM by Web Team ]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப்போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென ஜேவீபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு  என்பவை மலையக தமிழரின் இருப்பையே இந்நாட்டில் அசைத்து விட்டன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே ஐதேக மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென நண்பர் அனுர கூறியிருப்பது நியாயமானதுதான்.

இந்த வரலாற்று தவறுகளுக்காகவும், இன்னும் பல இனவாத நடவடிக்கைகளுக்காகவும், இன்னமும் பல்வேறு சிங்கள, தமிழ் முஸ்லிம் கட்சிகள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டிய சூழல் மெதுவாக உருவாகி வருகிறது. இந்த வரலாற்று தவறுகள் மன்னிப்பு பட்டியலில் ஜேவிபிக்கும் காத்திரமான இடமிருக்கிறது என்பதை நண்பர்  அனுர புரிந்துக்கொள்ள வேண்டும்.
 
எனவே மலையக மக்கள் சார்பில் தோழர் அனுரகுமாரவை இன்று பாராட்டி இனிதே வரவேற்போம். அதேவேளை வரலாற்றையும் மறக்காதிருப்போம் என என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
மலையக மக்கள் குறிப்பாக தோட்டத்தொழிலாளர் இந்நாட்டில் "தமிழர்" என்ற இன அடையாளம் காரணமாகவே பிரதானமாக ஒடுக்கப்படுகிறார்கள். இந்நாட்டில் ஈழத்தமிழர், மலையகத்தமிழர் மற்றும் முஸ்லிம் மக்கள் என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களே ஒடுக்கப்படுவதற்கான பேரினவாத சூழலை ஏற்படுத்துவதில் எல்லா பிரதான பெரும்பான்மை இன கட்சிகளும் வரலாறு முழுக்க பங்களித்துள்ளன. இதில் ஐதேக, ஸ்ரீலசுக ஆகியவற்றுடன் ஜேவிபிக்கும் பாரிய பங்கு இருக்கின்றது. எனவே தமிழரிடம் "மன்னிப்பு" கேட்க வேண்டுமென்றால் இந்த மூன்று கட்சிகளுமே கேட்க வேண்டும்.

குறிப்பாக "தொழிலாளர் ஆட்சியை அமைப்போம்" என்று அறைகூவல் விடுத்த, "புரட்சிக்கர" ஜேவிபியின் உருவாக்கத்தின் போது நடந்து என்ன? உழைக்கும் மலையக பாட்டாளி மக்களை, "இந்திய ஏகாதிபத்திய விஸ்த்தரிப்புவாத முகவர்கள்" என அடையாளமிட்டு, கட்சி அங்கத்தவர்களுக்கு அரசியல் வகுப்பே நடத்தி சிங்கள இளைஞர் மத்தியில் மலையக மக்களுக்கு எதிராக இனவாத நஞ்சு தூவப்பட்டு, இனவாத அடிப்படை ஏற்பட காரணமாக அமைந்த கட்சிதான், ஜேவிபி. இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல.

தோழர் ரோஹன விஜேவீரவின் இந்த வழிகாட்டலில் உருவாகிய, அன்றைய ஜேவிபி "இளைஞர்கள்" தான் இன்று, நண்பர் விமல் வீரவன்ச உட்பட, பல்வேறு கட்சிகளில் இருந்துக்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை முன்வைக்கின்றார்கள். ஹெல உறுமய செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அத்தகைய ஒரு முன்னாள் ஜேவிபியாளர்தான். இவர்கள் இன்று இலங்கை அரசியல் பரப்பில் ஆற்றிவரும் அரசியல் பங்களிப்புகளை நாம் சரியாக அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்.

எனவே இன்றைய ஜேவிபி தலைவரின் நிலைப்பாடுகளை வாழ்த்தி வரவேற்கும் அதேவேளை வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது. வரலாற்றை ஆய்ந்தறிந்து பாடங்களை கற்க மறந்த முட்டாள்களாகி விடக்கூடாது. எம்மினத்தை வாழ்முழுக்க அடித்து படுகாயப்படுத்தி, குற்றம் புரிந்துவிட்டு, கடைசியில் அதே குற்றவாளி எம்மை பார்த்து சும்மா சுகம் விசாரிப்பதை கண்டு,  உணர்சிவசப்பட்டு, புளங்காகிதமடைந்து, மயிர்கூச்செறிந்து, தடுமாறும் "பாமர" அரசியலில் நாம் மறந்தும் மூழ்கி காணாமல் போய்விட முடியாது. நாங்கள் சிரித்து பேசுகிறோம் என்பதற்காக அவர்களும் அவர்களது அடிப்படை விடயங்களில் நிலைத்தடுமாறுவது இல்லையே. எனவே நாங்கள் மட்டும் அவசரப்பட தேவையில்லை. ஆகவே தோழர் அனுரகுமாரவை இன்று பாராட்டி இனிதே வரவேற்போம். வரலாற்றையும் மறக்காதிருப்போம்.


Comments