07.04.20- 5ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக சூரியன்..

posted Apr 6, 2020, 6:19 PM by Habithas Nadaraja

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

 (7ஆம் திகதி) வத்தளை, ஹுனுப்பிட்டிய, புட்டுபாகல, கினிகத்தேனை, ரம்புக்பொத்த, மெதவெல, கிரிவெல்கொட, நெவுகல மற்றும் கோமாரி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது வளிமண்டலவில் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இதுதொடர்பாக இவ்வாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.06.04.20- அன்னை சிவகாமி அறக்கட்டளை' அமைப்பின் உலருணவுப்பொதிகள்..

posted Apr 6, 2020, 9:38 AM by Habithas Nadaraja   [ updated Apr 6, 2020, 9:39 AM ]

பிரித்தானியா ' அன்னை சிவகாமி அறக்கட்டளை' அமைப்பின்உலருணவுப்பொதிகள்
அட்டப்பள்ளத்தில் விநியோகம்..

பிரித்தானியா   'அன்னை சிவகாமி அறக்கட்டளை'  அமைப்பின் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் இன்று 06.04.2020- அட்டப்பள்ளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஸ்குமாரின் ஏற்பாட்டில் இன்று.06.04.2020அட்டப்பள்ளம் கிராம மக்களுக்கு 200உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

தனது அன்னையின் பேரால் கடந்த 10வருடங்களாக சமுகசேவயாற்றிவரும் மகாதேவன் சத்தியருபன் (லண்டன்) என்பவரின்நிதியொதுக்கீட்டிலேயே இவ்வுதவி அட்டப்பள்ள தமிழ்முஸ்லிம் மக்களுக்கு கிடைத்துள்ளது.

அட்டப்பள்ளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேடபூஜையின்பின்னர் ஆலயத்தலைவர் த.கோபாலன் எஸ்.மோகன் மற்றும்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் சோ.  தினேஸ்குமார் கிராமசேவையாளர் தொழினுட்பஉத்தியோகத்தர். உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தனர்.

காரைதீவு  நிருபர்


06.04.20- கல்முனைமாநகரசபை உறுப்பினர் ராஜனின் உலருணவுநிவாரணம்..

posted Apr 6, 2020, 9:32 AM by Habithas Nadaraja

த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சமுகசேவையாளருமான சந்திரசேகரம் ராஜன் தனது சொந்த நிதியில் கல்முனை 1ஆம்  பிரிவு மக்களுக்கும் ஏனைய பகுதிமக்களுக்கும்  உலருணவு நிவாரணப்பொதிகளை வழங்கிவைத்தார்.

தேர்தல்காலமாகையால் அவர் நேரடியாக இறங்காமல் கல்முனை சைனிங் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடாக அவற்றை வழங்கிவைத்தார்.

மாநகரசபை உறுப்பினர் ராஜன் இன்று.-6- நடைபெற்ற எளிமையானநிகழ்வில் நிவாரணப்பொதிகளை சைனிங் விளையாட்டுக்கழக தலைவர் எஸ்.ஜெயந்தன் செயலாளர் எஸ்.கிஷோர் மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கிவைத்தார்.

அவர்கள் அவற்றை நேற்றே உரிய மக்களிடம் வழங்கிவைத்தனர்.

இவ்வுதவிக்கு 20வீதமான பங்களிப்பை கல்முனை ஆதாரவைத்தியசாலை பிரதிவைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் சிறப்புவைத்தியநிபுணர் டாக்டர் எஸ்.இதயகுமார் மகப்பேற்று நிபுணர் டாக்டர் றசீன்மொகமட் ஆகியோர்  வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

காரைதீவு  நிருபர்06.04.20- தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, பாராளுமன்றத்தை கூட்டுங்கள்..

posted Apr 6, 2020, 9:25 AM by Habithas Nadaraja

தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, பாராளுமன்றத்தை கூட்டுங்கள்
எம்பீக்களுக்கு சம்பளம் தேவையில்லை - மனோ கணேசன்


 (அ)நாட்டில் நாளுக்கு நாள், பரிசோதிக்க பரிசோதிக்க, புதிது புதிதாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயவும்;

(ஆ)ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் நிவாரணங்கள், பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் கிடைக்காததால், நெருக்கடியாகியுள்ள திக்கற்ற மக்களின் வாழ்வாதாரம் பற்றி ஆராயவும்;

(இ)நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால், கொரோனாவுக்கு அப்பால் ஏனைய நோய்களாலும் மக்கள் உயிரிழக்க கூடிய அபாயம் பற்றி ஆராயவும்;

(ஈ)ஜூன் 2க்கு முன் தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகிற அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெறுங்கள் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கூறி விட்டதை ஆராயவும்;

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச உடனடியாக பாராளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

 இதுபற்றி தனது சமூக ஊடக தளங்களில்  கருத்து கூறியுள்ள மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

அமைச்சர் விமல் வீரவன்ச இன்னமும் சிறுபிள்ளைதனமாக பேசுகிறார். பாராளுமன்றம் கூட்டப்பட கூடாது என்பதற்கு அவர் சொல்லும் ஒரு காரணம், “எம்பிகளுக்கு சம்பளம் வழங்க வேண்டிவருமாம்”. எம்பீக்களுக்கு சம்பளம் தேவையில்லை என நான் சொகிறேன். அதை எதிரணியின் அனைத்து எம்பீக்களும் ஏற்பார்கள் என நான் நம்புகிறேன். உண்மையில் இது ஒரு பிரச்சினை இல்லை. இதையெலாம் ஒரு பிரச்சினையாக கூறும் விமல் போன்றர்களின் சிந்தனைதான் பிரச்சினை.  இவரது மூளையை ஐஸ் பெட்டியில் வைத்து இந்த தேசம் பாதுகாக்க வேண்டும்.

அரச பக்கத்தை சார்ந்த இன்னொரு முன்னாள் எம்பியான உதய கம்மன்பில இன்னொரு  காரணம் கண்டு பிடித்து சொல்கிறார். அதாவது, “பாராளுமன்ற சபையில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த கூடாது. அது சமூக இடைவெளி விதியை மீறும்”. என்கிறார். இவரது மூளையையும் ஐஸ் பெட்டியில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும்.

அருகருகாக அமராமல், எம்பீக்கள் வீடுகளில் இருந்தபடி, தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக பாராளுமன்ற அமர்வு நடத்தப்படலாம். உலகின் வேறுபல நாடுகளில் இத்தகைய காணொளி அமர்வுகள் இன்று நடத்தப்படுகின்றன. இலங்கையில் அனைத்து மக்களும் இன்று வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள். எனவே இந்த காணொளி பாராளுமன்ற அமர்வை  அனைத்து மக்களும் பார்த்து கேட்க முடியும். இதனால், இன்றைய தேசிய நெருக்கடி தொடர்பில் நாட்டில் பொதுஜன அபிப்பிராயம் உருவாகும். அரசியல் பேதங்களுக்கு அப்பால், இதுதான் இன்றைய தேவை.


06.04.20- சுவிஸ் சூரிச் 'அன்பேசிவம்' அமைப்பின் உலருணவு விநியோகம்..

posted Apr 5, 2020, 6:14 PM by Habithas Nadaraja   [ updated Apr 5, 2020, 6:18 PM ]

சுவிஸ்  சூரிச் சிவனாலயத்தின் 'அன்பேசிவம் ' அமைப்பின் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அன்பேசிவம் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் 04.04.2020 வளத்தாப்பிட்டி மற்றும் பளவெளி கிராம மக்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பளவெளி ஆதிசிவனாலயத்திலும் வளத்தாப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்திலும்நடைபெற்ற விசேடபூஜையின்பின்னர் ஆலயத்தலைவர்களான எஸ்.துரைசிங்கம் வி.ஜெயச்சந்திரன் எஸ்.வடிவேல் மற்றும்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர்
சோ.  தினேஸ்குமார் உள்ளிட்டோர் நிவாரணப்பொதியை வழங்கிவைத்தனர்.

பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.ரவி பொதுச்சுகாதாரபரிசோதகர் பி.இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் 200பொதிகள் மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

காரைதீவு  நிருபர்
04.04.20-ஜனாதிபதியின் விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு..

posted Apr 3, 2020, 8:42 PM by Habithas Nadaraja   [ updated Apr 3, 2020, 8:46 PM ]

கொரோனா வைரசு தொற்றை தடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மத்தியில் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டுவருகிறது.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள செயலணி குறித்து வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில, கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழித்துக்கட்டும்போது அதிக நெருக்கடியான நிலையில் உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அப்பிரதேசங்களுக்கு கிராமியப் பிரதேச மற்றும் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் உணவு விநியோகம் உடனடியாக நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் வாழ்க்கையை உரியவாறு நடாத்திச் செல்வதற்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதை வழிநடத்துதல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்வதற்காக இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி திரு. பசில் ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் வட மாகாண ஆளுநர், திருமதி. பி. எஸ். எம். சார்ள்ஸ் மேல் மாகாண ஆளுநர், திரு ஏ. ஜே. எம். முசம்மில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதி லெப்டினெல் ஜெனரல் சவேந்திர டி சில்வா பதில் பொலிஸ் மா அதிபர் அடங்களாக 40 பேர் இந்த செயலணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த செயலணி தொடர்பான முழுவிபரத்தையும் பின்வரும் வர்த்தமானி Link மூலம் அறிந்துகொள்ள முடியும்.04.04.20- ஆயுர்வேத திணைக்களத்தினால் புதிய மருந்துவகை அறிமுகம்..

posted Apr 3, 2020, 8:25 PM by Habithas Nadaraja

நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் கிருமிநாசினிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஆயுர்வேதத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறான மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகளை மாகாண ஆயுர்வேதத் திணைக்களங்களூடாக வீடுகளுக்கே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய, ஆயுர்வேத உற்பத்திகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பில், ஆயுர்வேத மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான பரிந்துரைக்கு சுகாதார அமைச்சினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினால் ஆயுர்வேத முறையிலான மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வேப்பிலை மற்றும் தேசிக்காய் இலைகளை பயன்படுத்தி புகை விசுறுமாறும் இந்த விசேட குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேவேளை, கொத்தமல்லி, இஞ்சி உள்ளிட்ட மூலிகைகள் அடங்கிய கசாயத்தை பருகுவதற்கும் ஆயுர்வேதத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இவை நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிக பலன்களை தரும் என ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் சத்துர குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த மூலிகைகள் அடங்கிய பக்கெட்களை ஆயுர்வேதத் திணைக்களம் தற்போது தயாரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


04.04.20-உயர்தரப் பரீட்சை நடை பெறவுள்ள தினத்தில் எந்தவித மாற்றமுமில்லை..

posted Apr 3, 2020, 8:12 PM by Habithas Nadaraja   [ updated Apr 3, 2020, 9:14 PM ]

க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதினத்தில எந்தவிதமாற்றமும் மேற்கொள்ளப்பட்வில்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  (01.04.2020) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சற்திப்பில் அமைச்சர மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த பரீட்சை ஒத்திவைக்கப்படும் என ஒரு சில சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.கடந்த வருடம் (2019) இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.


01.04.20-ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர், க பொ சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்..

posted Mar 31, 2020, 6:12 PM by Habithas Nadaraja

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை, பெறுபேறுகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கெகண்டுள்ளது.தற்சமயம் விடைத்தாள்களை மதிப்பிடும்  பணிகள்  நிறைவடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

கணனி மயப்படுத்துவதற்காக அதிகாரிகளை கொண்டு வருவதில் சிரமம் காணப்படுகிறது. எனினும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


30.03.20- ஏப்ரல் 2, 3 ஆந் திகதிகளில் ஓய்வூதியக் காரர்களுக்கான ஓய்வுதிய கொடுப்பனவுகள்..

posted Mar 29, 2020, 4:54 PM by Habithas Nadaraja   [ updated Mar 29, 2020, 4:54 PM ]

ஓய்வூதியக்காரர்களுக்கான ஓய்வுதிய கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம் 2, 3 ஆந் திகதிகளில் செலுத்தப்படவிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி விசேட செயலணிக்கூட்டத்தில் இன்று  தீர்மானிக்கபபட்டுள்ளது

அதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

 (2020.03.29) இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி விசேட செயலணிக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஓய்வூதியத்தைச் செலுத்துதல்

1. ஏப்ரல் மாதம் 2, 3 ஆந் திகதிகளில் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் செலுத்தப்படும்.

2. இந்த இரண்டு தினங்களினுள் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இருப்பின், ஏப்ரல் 6 ஆந் திகதி கொடுப்பனவுகளை       நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

3. ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளும் 02 வழிமுறைகள் காணப்படுகின்றன.

I. அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக
II. அந்தந்த வங்கிகள் ஊடாக

4. அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளும்  ஓய்வு பெற்றோரின் வீடுகளுக்கு அல்லது கிராம அலுவலர் பிரிவுக்கு அஞ்சல் திணைக்களம் ஊடாக ஓய்வூதியம் கொண்டுவந்து ஒப்படைக்கப்படும்.

5. அந்தந்த வங்கிகள் ஊடாக ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்வோரின் பணம் ஏற்புடைய வங்கிக் கணக்குகளுக்கு ஏப்ரல் 2,3 ஆகிய                  திகதிகளில் வரவு வைக்கப்படும்.

6. வங்கிக் கணக்குகளில் காணப்படும் பணத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் ஓய்வுபெற்றோருக்கு ஊரடங்குச் சட்டம் காரணமாக ஏற்படும் போக்குவரத்துச் சிரமத்தைத் தவிர்ப்பதற்கான முறைமையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தேவையுடைய ஓய்வு பெற்றோர் தாம் வதியும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கிராம உத்தியோகத்தர் மூலம் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இந்த ஓய்வூதிய உரித்தாளிகள் அரசாங்கத்தினால் அருகிலுள்ள வங்கிக்கு ஏப்ரல் 2,3 ஆந் திகதிகளில் அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் அந்த வங்கிகள் மூலம் அவர்களது ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இதற்கு முப்படையினர் மற்றும் பொலிசார் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதுடன், இதற்கு ஏற்புடைய கிராம உத்தியோகத்தர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.

7. அந்தந்த நகரங்களில் காணப்படும் அனைத்து வங்கிகளும் குறைந்தபட்சம் ஒரு கிளையினையாவது இந்நாட்களில் திறந்து வைத்திருக்க அரச மற்றும் தனியார் வங்கியாளர்கள் இணங்கியுள்ளனர் என்பதையும் அறியத் தருகிறோம்.
1-10 of 2049