01.11.18- இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் ஏழு பதக்கங்களைப்பெற்று தமிழ்மாணவன் வினோஜ்குமார் வியத்தகுசாதனை..

posted Oct 31, 2018, 6:47 PM by Habithas Nadaraja
இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் ஏழு பதக்கங்களைப்பெற்று தமிழ்மாணவன் வினோஜ்குமார் வியத்தகுசாதனை! 
4லட்சத்து 40ஆயிரம் ருபா பணப்பரிசு..

இலங்கை புத்தாக்குனர் வரலாற்றில் முதற்தடவையாக ஏழு பதக்கங்களைப் பெற்ற சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தைச்சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக தமிழ்மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் வியத்தகு வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முதல் இறுதியாக 2012ஆம் ஆண்டில் கனிந்துநாணயக்கார என்ற கண்டுபிடிப்பாளர் 5பதக்கங்களைப்பெற்று தனியொருவர் பெற்ற உச்சக்கட்டச்சாதனை படைத்திருந்தார். 2தங்கம் 1வெள்ளி 2வெண்கலம் என 5பதக்கங்களைப்பெற்றிருந்தார்.

இச்சாதனையை முறியடித்து இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் 3தங்கம் 1வெள்ளி 3வெண்கலம் என்று 7பதக்கங்களையும் அதற்கான பரிசாக 4லட்சத்து 40ஆயிரம் ருபா பணத்தையும் பெற்றுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி இலங்கை ஆய்வாளர்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு பி.எம்.ஜ.சி.எச்சில் நடைபெற்ற 3வது தேசிய புத்தாக்குனர் தின விருதுவழங்கும்விழாவில் அதிகூடிய 7பதக்கங்களைப் பெற்ற சோ.வினோஜ்குமார் பலராலும் பாராட்டப்பட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வி;ஞ்ஞான தொழினுட்ப ஆராய்ச்சி திறன்அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் சரத்அமுனுகம இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன இலங்கை புத்தாக்கனர் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி மகேஷ்எதிரிசிங்க அமைச்சின்செயலாளர் திருமதி வசந்தாபெரேரா ஆகியோர் முன்னிலையில் இப்பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அவர் பல்கலைக்கழகமட்ட போட்டியில் வழங்கப்பட்ட முதல் 9தங்கப்பதக்கங்களில் 3தங்கப்பதக்கங்களைத் தனதாக்கி சுவீகரித்துள்ளார். அத்துடன் 1 வெள்ளி 3வெண்கலப்பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார்.

பாடசாலை மட்டம் பல்கலைக்கழக மட்டம் திறந்த மட்டம் என 3மட்டங்களில் இப்போட்டி இடம்பெறுவது வழக்கம். மொத்தமாக தங்கம் வெள்ளி வெண்கலம்என 3மட்டங்களில் 76பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பல்வேறு மதிப்பீடுகளை பேராசிரியர்களால் பார்வைக்குட்;படுத்தப்பட்டு 85புள்ளிகளுக்கு மேல் பெற்ற கண்டுபிடிப்புகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படுவதுவழக்கம். அந்தவகையில் பாடசாலை மட்டத்தில் 6தங்கப்பதக்கங்களும்  பல்கலைக்கழக மட்டத்தில் 9தங்கப்பதக்கங்களும் திறந்த மட்டத்தில் 11தங்கப்பதக்கங்களும் இம்முறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கப்பதக்கமொன்றிற்கு 1லட்சருபாவும் வெள்ளிப்பதக்கத்திற்கு 50ஆயிரம் ருபாவும் வெண்கலப்பதக்கத்திற்கு 30ஆயிரம் ருபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டுவருகின்றது. 

சம்மாந்துறை கோரக்கர்கிராமத்தைச்சேர்ந்த இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் இதுவரை 86கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். இவற்றில் 38கண்டுபிடிப்புகள் தேசியமட்டத்தில் விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது. 03 கண்டுபிடிப்புகள் சர்வதேசவிருதுகளைப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


(காரைதீவு நிருபர்)
Comments