03.06.19- ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைப்பு..

posted Jun 2, 2019, 6:45 PM by Habithas Nadaraja
2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைக்கப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இந்த மறுசீரமைப்பு அடுத்த மாதம் 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான சுற்றறிக்கைகள் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறியினால் நேற்று அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் மாகாண பிரதம செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அதற்கு முன்னர் ஓய்வூதியம் பெறும் அனைத்து அரச ஊழியர்களின் ஓய்வூதியச் சம்பளம் 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ம் திகதி அன்று அரச நிர்வாக சுற்றுநிருபம் இலக்கம் 03-2016, இரண்டு உப ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட 2017 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தின் அடிப்படையில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செயலாளர் மேலும் கூறினார்;..

இம்முறை வரவு செலவுத் திட்ட ஆவணத்தை சமர்ப்பித்து நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிடுகையில், 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதிக்கு முன்னரும், பின்னரும், ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் மத்தியில் ஓய்வூதிய சம்பள முரண்பாடு இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கமைய ஓய்வூதிய சம்பள திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இவ்வருடம் ஜுலை மாதம் 1ம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சர் இதன் போது முன்மொழிந்தார். ஓய்வூதிய சம்பள முரண்பாடுகளை சரிசெய்வதற்கான திருத்தத்திற்காக இந்த வருடத்தில் 120 கோடி ரூபா மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ஓய்வுபெறும் 5 இலட்சத்து 86 ஆயிரம் பேர் நன்மையடையவுள்ளனர்

கீழ்மட்டத்தில் உள்ள அரச ஊழியர்களின் ஓய்வூதியம் ஆகக்குறைந்த வகையில் மாதமொன்றுக்கு 1600 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். தரம் ஒன்று ஆசிரியர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு குறைந்தத மாதமொன்றுக்கு 4 ஆயிரத்து 600 ரூபாவால் அதிகரிக்கும். அமைச்சின் செயலாளர்களின் இந்த மாத அதிகரிப்பு 12 ஆயிரம் ரூபாவாகும். இந்த கணக்கு மதிப்பீடு 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்ற மற்றும் 25 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ள ஓய்வூதியக்காரர்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் வரவு செலவுத்திட்ட உரையின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments