04.02.19- 71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது..

posted Feb 3, 2019, 7:34 PM by Habithas Nadaraja

71 ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

அரச, தனியார் நிறுவனங்களிலும், நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களிலும், வீடுகளிலும், தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. சகல வாகனங்களிலும் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. இம்முறையும் மத அனுட்டானங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றுவருகின்றன.

 பௌத்த அனுட்டானம் கொள்ளுப்பிட்டி தர்மகீர்த்திராம விஹாரையிலும், இந்து சமய அனுட்டானம் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளை ஆலயத்திலும், இஸ்லாமிய மத அனுட்டானம் கொழும்பு 7 ஜாவத்தை ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலிலும், கத்தோலிக்க தேவ ஆராதனை கொம்பனித்தெரு பரிசுத்த ஜெபமாலை மாதா தேவாலயத்திலும், கிறிஸ்தவ ஆராதனை, கொழும்பு 6 மாயா வீதியிலுள்ள பிரெஸ்பிரேரியன் தேவாலயத்திலும் நடைபெறும். தேச பிதா டி.எஸ்;.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவமும் நாளை காலை 7.30 இற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும்.

 காலிமுகத்திடலில் நடைபெறும் தேசிய சுதந்திர தின பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலி தம்பதியர் விசேட அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரும், ஜனாதிபதியும் மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்றதன் பின்னர், 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் ஆரம்பமாகும். தேசிய சுதந்திர தினத்தையொட்டி விசேட வாகனப் போக்குவரத்து ஒழுங்குகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


Comments