04.02.21- இலங்கை தேசம் சுதந்திரம் பெற்று இன்று 73 ஆண்டுகள்..

posted Feb 3, 2021, 8:30 PM by Habithas Nadaraja
நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கை தேசம் சுதந்திரம் பெற்று இன்று 73 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

சுபீட்சமான எதிர்காலம் - சௌபாக்கியமான தாய் நாடு என்ற தொனிப்பொருளில் எளிமையாகவும். பெருமிதத்தோடும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின விழா இடம்பெறும். சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளை அனுசரித்து விழாவை நடத்தப் போவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதில் தொற்று பரவலைத் தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.

இம்முறை படைவீரர்கள், பொலிசார் அடங்கலாக சுமார் ஆறாயிரம் பேர் சுதந்திர தின அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்கள் பயோ-பபிள் என்ற உயிரியல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய ஒத்திகைகளில் ஈடுபட்டார்கள். இந்த ஏற்பாடு இன்றும் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

சமய நிகழ்ச்சிகள்

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக சர்வமத பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பௌத்த சமய நிகழ்வு நாராஹென்பிட்ட அபயாராம விஹாரையில் காலை 6.30ற்கு ஆரம்பமாகும்.  இந்து சமய நிகழ்வுகள் பம்பலபிட்டி புதிய கதிரேசன் கோவிலில் இடம்பெறவுள்ளன.

இஸ்லாம் சமய நிகழ்வுகள் பம்பலபிட்டி நிமல் றோட், மஜ்மஉல் ஹைரா ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெறவிருக்கிறது. பொரளை அனைத்துப் புனிதர்கள் தேவாலயத்தில் கத்தோலிக்க சமய நிகழ்ச்சிகளும், வெள்ளவத்தை மெதடிஸ்த தேவாலயத்தில் கிறிஸ்தவ சமய நிகழ்வுகளும் ஏற்பாடாகியுள்ளன.

பிரதமர் வாழ்த்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார். நாடு பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்வது முக்கியமானது. இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்த்து, சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதற்கு வலுவான பங்களிப்பு கிடைப்பதாக பிரதமர் கூறினார். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், தேசியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருளாதாரக் கொள்கையின் ஊடாக தாய்நாட்டை அபிவிருத்தி நோக்கி செலுத்தும் பாதையில் பிரவேசித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எத்தகைய சவால்கள் வந்தாலும், தாய்நாட்டிற்கு துரோகம் இழைக்கப் போவதில்லையென பிரதம மந்திரி மேலும் கூறினார். பகையாளிகளைத் தோற்கடித்தமை போன்று, கொவிட்-19 பெருந்தொற்றையும் கட்டுப்படுத்த ஒரே தேசத்தவர்கள் என்ற ரீதியில் சகலரும் நிமிர்ந்தெழ வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சபாநாயகரின் செய்தி

பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவும் சுதந்திர தின வாழ்;த்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார். நாடு அபிவிருத்தி நோக்கி செல்கிறது. இந்நிலையில், சர்வதேச சமூகம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களைப் புறந்தள்ள சகலரும் ஐக்கியப்பட வேண்டும் என சபாநாயகர் கேட்டுள்ளார். கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து நாட்டைப் பாதுகாக்க அளப்பரிய அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் ஜனாதிபதி, பிரதமர், சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்புப் படைகளின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார். அந்நிய சக்திகள் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படக்கூடிய அழுத்தங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வென்றெடுத்த சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் கூறியுள்ளார்.

சமயத் தலைவர்கள் வாழ்த்து

கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், சகலரும் ஒரே தேசத்தவர்களாக, தேசத்தின் சுபீட்சமும், மக்களின் ஆரோக்கியமும், சகவாழ்வும் கருதி பாடுபடுவது அவசியம் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் கூறியுள்ளார்.

தன்னிறைவின் மூலம் பொருளாதார சுதந்திரத்தைப் பெறுகையில் மாத்திரமே நாட்டுக்கு பூரண சுதந்திரம் கிடைப்பதாக ராமஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய மக்குளாவே விமல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் பேரருட்திரு மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வாழ்த்துச் செய்தியில், கடந்த ஏழு தசாப்த காலத்தில் இலங்கை கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாதையில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு, முன்னோக்கிச் செல்வதற்கு பொருத்தமானவற்றைத் தீர்மானிப்பது மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை இஸ்லாமிய கல்விமான் பேரவை விடுத்த வாழ்த்துச் செய்தியில், சுதந்திரத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்க வேண்டுமாயின் சகல பிரஜைகளும் ஒன்றாக அபிவிருத்தியில் பங்களிக்க வேண்டுமென கூறியுள்ளது.

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின பிரதான விழா இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதில் தொற்று பரவலைத் தடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி கூறினார்.
Comments