04.12.17- டெங்கு நுளம்புப் பெருகக் கூடிய இடங்கள், வெள்ள நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்களை கட்டுப்படுத்தும் பணிகள்..

posted Dec 4, 2017, 10:09 AM by Habithas Nadaraja
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் டெங்கு நுளம்புப் பெருகக் கூடிய இடங்கள் மற்றும் வெள்ள நீர் தேங்கி நிற்கக் கூடிய இடங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவற்கான துரித நடவடிக்கைகள் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 
கடந்த ஒரு வாரகாலமாக ஏறாவூர் நகர சபையின் கீழுள்ள ஏ.கே.எம்.வீதி, ஆர்.சி.வீதி, முனயளவு வீதி, லெப்பை வீதி, பரிகாரியார் வீதி, பழைய சந்தை வீதி, பெரிய பாலத்தடி வடிகான், 10 ஆம் நம்பர் பால வடிகான், பொதுச் சந்தை போன்ற பல இடங்களுக்கு நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டபோது, குறித்த பிரதேசத்திலுள்ள பொதுமக்களினால் பல குறைபாடுகள் முன்வைக்கப்பட்டது. 

அதற்கமைவாக,  குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட சகல குறைபாடுகளையும் துப்பரவு செய்யும் பணி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுச் சந்தைக்கான கம்பி வேலி, மணல் நிரப்பும் பணி, மின் குமிழ் பொறுத்தும் பணிகள் போன்றவைகளுடன் இன்னும் பல வீதிகளும், வடிகான்களும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அத்துடன் பொது நூலகத்துக்கான விஜயத்தின்போது, மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பொது நூலகத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை அவர்களின் பரீட்சைக் காலம் முடியும் வரை திறந்து வைக்குமாறும், இதற்கான கடமைகளை சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

பைஷல் இஸ்மாயில் 

Comments