05.08.18- வைத்திய நிபுணர்கள் இடமாற்றம்..

posted Aug 4, 2018, 7:07 PM by Habithas Nadaraja
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அருஞ்சேவையாற்றிய இரு வைத்தியநிபுணர்கள் இடமாற்றத்தில் செல்ல பதிலுக்கு இரு வைத்தியநிபுணர்கள்வருகைதந்துள்ளனர்.

ஏலவே சேவையாற்றிய இருவரை வழியனுப்பும் வைபவமும் புதியவர்களை வரவேற்றும் நிகழ்வும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

சத்திரசிகிச்சை நிபுணராக கடந்த 4ஆண்டுகாலம் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சிறந்த சேவையாற்றிய வைத்தியகலாநிதி டாக்டர் த.நிமலரஞ்சன் இடமாற்றலாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்கிறார். அவரது இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சேவையாற்றிய சத்திரசிகிச்சைநிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் எஸ்.சிறிநீதன் இடமாற்றலாகி கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

அதேபோன்று சிறுபிள்ளைவைத்திய நிபுணராக கடந்த 2ஆண்டுகாலம் கல்முனை ஆதாரவைத்தியசாலையில்  சேவையாற்றிய வைத்தியகலாநிதி டாக்டர்.எம்.ஜ.றிபாயா இடமாற்றலாகி பொலன்னறுவை  பொது வைத்தியசாலைக்குச் செல்கிறார். அவரது இடத்திற்கு நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சேவையாற்றிய சிறுபிள்ளைவைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி டாக்டர் டி.எம்.பி. சமன்குமார இடமாற்றலாகி கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

இடமாற்றலாகிச்சென்ற வைத்தியநிபுணர்கள் இருவரையும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் நன்றிகூறிப் பாராட்டி வழியனுப்பிவைத்தார். அதேபோன்று இடமாற்றம்பெற்று வருகைதந்த இரு புது வைத்தியநிபுணர்களையும் அன்புடன் அவர் வரவேற்றார்.

இங்கு வெகுவிரைவில் காது மூக்கு தொண்டை நோய் வைத்தியநிபுணர் ஒருவர் நீண்டகாலவரலாற்றின் பின்னர் கல்முனை ஆதாரவைத்தியசாலைக்கு நியமிக்கப்படவிருக்கிறார்.

 (காரைதீவு  நிருபர்)


Comments