த.தே.கூ-ஸ்ரீல.மு.கா பேசி கல்முனைப்பிரச்சினை ஒருபோதும் தீராது! கல்முனைப்பிரச்சினையை தீர்க்க வெறுமனே த.தே.கூட்டமைப்பை நம்பியிராது கல்முனைதமிழ்ச்சமுகம் தாமாக முன்வரவேண்டும் கிழக்கு தமிழர் கூட்டமைப்புத்தலைவர் கோபாலகிருஸ்ணன் காட்டம்.. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேசி கல்முனைப்பிரச்சனைக்கு ஒருநாளும் தீர்வுகாணமாட்டாது.கல்முனை வடக்கு பிரதேசசெயலக விவகாரம் தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை நம்பியிருக்காமல் கல்முனைவாழ்தமிழ்ச்சமுகம் பிரச்சனையை தாங்களே கையிலெடுக்கவேண்டும். இவ்வாறு சமகாலகல்முனை நிலைவரம் தொடர்பாக கிழக்கு தமிழர் கூட்டமைப்புத்தலைவர் செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: சேலையில் முள்ளுப்பட்டாலும் முள்ளு சேலையில் பட்டாலும் சேதம் சேலைக்குத்தான். அதுபோல சம்பந்தர் ஹக்கீமுடன் கதைத்தாலும் ஹக்கீம் சம்பந்தருடன் கதைத்தாலும் நட்டம் தமிழ்மக்களுக்குத்தூய என்பதை தமிழ்மக்கள் மறந்துவிடக்கூடாது. இது கடந்த 70வருடகால தமிழ்த்தேசிய அரசியல் வரலாற்றிலிருந்து கிழக்குதமிழ்மக்கள் பட்ட அனுபவத்தில் கற்றுக்கொண்டவை. இன்று கல்முனையிலிருந்து மக்களுக்கு எதுவுமே தெரிவிக்காமல் கொழும்புசென்று மாநகரசபை தமிழ் உறுப்பினர்கள் நால்வர்கொண்ட குழுவினர் கல்முனை தமிழ்மக்களின் இதயத்தை விற்றுவிட ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்கு எத்துணை கையூட்டல்கள் வழங்கப்பட்டனவோ தெரியாது இத்தகைய விட்டுக்கொடுப்பைச்செய்ய இவர்களுக்கு அதிகாரம்கொடுத்தது யார்? கொழும்பில்வைத்து த.தே.கூட்டமைப்பினரால் இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்களா? மக்களிடம் இதுபற்றி எதுவுமே சொல்லாமல் மக்களுக்கான தீர்வை முன்வைக்க இவர்கள் யார்? இருபக்கமும் சேதாரமில்லாமல் தீர்வுகாணும்போது இருசாராரும் விட்டுக்கொடுக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு காலாகாலமாக தொடர்ந்து விட்டுக்கொடுத்துவந்த அதே தமிழ்ச்சமுகம்தான் இன்றும் எங்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும். ஆனால் முஸ்லிம்களாகிய நாங்கள் ஒரு போதும் ஒரு அங்குலமும் விட்டுத்தரமாட்டோம் என்று சொல்வது எவ்வகையில் நியாயம்? கடந்த 30வருடகாலமாக பல போராட்டங்களை நடாத்திய கல்முனைவாழ் தமிழ்மக்கள் பிரதேசசெயலகத்தைதரமுயர்த்த அண்மையில் உயிரை துச்சமென மதித்து சாகும்வரை உண்ணாவிரத்தத்தை மேற்கொண்டனர். எதற்காக? ஒரு கணக்காளரைப் பெறுவதற்கா? இல்லை தரமுயர்த்த. கல்முனைக்கு வந்து உறுதியளித்துச்சென்ற சம்பந்தனுக்கு இது தெரியாதா? கணக்காளரை யார் கேட்டது? சரி. கடைசி அதுகூட இல்லை என்ற கையறுநிலைக்குச்சென்றுள்ளது த.தே.கூட்டமைப்பின் அரசியல். அவர்கள் தேர்தலுக்கான அரசியலை செய்வதற்கு கல்முனைவிவகாரத்தை துரும்பாக பயன்படுத்துக்கின்றனரே தவிர மக்களின்பாலுள்ள நலன்களுக்காக அல்ல. இன்று கணக்காளரின் கதையை யாரும் பேசுவதில்லை. அதேபோல நாளை கல்முனைத்தமிழர்பற்றி யாரும் பேசமாட்டார்கள்.எனவேதான் சொல்கிறேன் த.தே.கூட்டமைப்பை நம்பமுடியாது என்று, அவர்கள் எதிராய்வரும் தேர்தலுக்காக வழமையான அரசியல்சித்துக்காட்ட தங்களைத்தயார்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். எனவே இருக்கின்ற 29 கிராமசேவையாளர் பிரிவுகளுடன் இருக்கின்ற சமகால எல்லைகளுடன் வடக்குபிரதேசசெயலகம் வர்த்தமானி அறிவிப்புச்செய்யப்பட்டு தரமுயர்த்தப்படவேண்டும். 30வருடகாலப்போராட்டத்திற்கு உரிய நியாயமான தீர்வுவேண்டும். அரைகுறையானதீர்வு வேண்டாம். நகரத்தை விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதில்லை. உரியதீர்வு இன்றேல் போராட்டம் தொடரும். தேர்தலில் பார்ப்போம் என்றார். (காரைதீவு நிருபர்) |
பிறசெய்திகள் >