07.12.17- மாணவர்களின் செயற்பாடுகளுக்கு பெற்றோர்களின் பங்கு மிக அவசியமானது..

posted Dec 6, 2017, 5:18 PM by Habithas Nadaraja
மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்குள் இருக்கின்ற திறமைகளை நீங்கள் யாருமே கண்டுகொள்வதில்லை. அந்தத் திறமைகளை நாமே தேடி அறிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மாணவர்களும் தேடல் உள்ளவர்களாக இருப்போமானால் எமது எதிர்காலம் சிறந்ததாக அமையும் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியால 2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” விருதும், பரிசளிப்பு விழாவும் (05) வித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்றைய கல்வி உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு, அதற்கேற்ப அதி நவீன முறையில் கல்விக்கூடங்களும் உருவாகி வருகின்றன. கல்வித் துறையிலும் போதனா முறையிலும் பல்வேறு புதிய நவீன உத்திகள் முறைகள் கையாளப்படுகின்றன. இருந்தபோதும் ஆசிரியரின் பங்கும் இன்னும் குறிப்பிட்டு கூறுகின்ற அளவில் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது.

மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை கொண்டவர்களாக ஆசிரிய சமூகம் காணப்படுகின்றன. இதற்கு ஒத்தாசையாக பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினால் தான் அவர்களின் எதிர்கால முன்னெற்றத்துக்கு வழி வகுக்க முடியும். அவ்வாறில்லாமல் ஆசிரியர்கள் மட்டும்தான் எம் பிள்ளைகளுக்கு கற்பித்துக்கொடுக்கவேண்டும் அவர்கள்தான் அதற்குரியவர்கள் என்று பெற்றோர்கள் இருந்து விட்டால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஒரு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லாது என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும்.

தலைசிறந்த மாணவனை உருவாக்குவதற்கும் ஆசிரியர்கள் தங்களது பொன்னான காலத்தையும், நேரத்தையும் மாணவர்களுக்காக அர்ப்பணிக்கிறார்கள். மாணவர்களின் பிரச்சினைகளைத் தெளிவுடன் சிந்தித்து, அவர்களின் கவனத்தைப் படிப்பின் மீது செலுத்துவதற்கு அரும் பாடுபடுகின்றார்கள். 

கல்வி அறிவைத் தவிர்த்து மாணவர்களுக்கு பொது அறிவையும் சமுதாய சிந்தனையையும் உட்புகுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் உலக விஷயங்களையும் அறிந்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பல விடயங்களை கற்பித்துக் கொடுக்கின்ற எமது ஆசிரிய சமூதாயத்துக்கு ஒத்தாசையாக பெற்றோர்களும் மாணவர்களும் இருந்தால்தான் எமது பிள்ளைகளுக்குள் இருக்கின்ற திறமைகளை நாம் வெளிக்கொண்டு வந்து அவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு வழிவகுக்கின்ற அதேவேளை பெற்றோர்களாகிய எமது கணவையும் நிறைவு முடியும் என்றார்.

பைஷல் இஸ்மாயில், ஏறாவூர் ஏ.ஜீ.எம்.இர்பான் 


Comments