08.10.18- பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள் இடம்பெறுவதில்லை..

posted Oct 7, 2018, 6:40 PM by Habithas Nadaraja
பல்கலைக் கழகத்தில் நாம் எவ்வளவு கற்றாலும் அங்கு கற்கின்ற அந்த பாடத்திட்டத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள் அதில் இடம்பெறுவதில்லை. இந்தப் பாரம்பரிய வைத்திய முறைகள் கிழக்கு மாகாணத்தில் அழிந்து செல்லக்கூடியதாக உள்ளது. அதனை ஊக்குவித்து பாதுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

 முதலாவது சர்வதேச சுதேச வைத்திய மாநாடும், அதன் கண்காட்சியின் கடந்த 4, 5, 6 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்றது. அதன் இறுதிநாள் நிகழ்வு  (06.08/.2018) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தில் பாரம்பரிய வைத்திய முறைகள் மங்கிய நிலைமையில் சென்று கொண்டிருக்கின்றது. ஏனைய மாகாணங்களில் இந்த வைத்திய சிகிச்சைகள் மிகச் சிறப்பான முறையில் இயங்கிக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவும் இருகின்றது. இந்த பாரம்பரிய வைத்தியத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் உள்ள எமது மக்களும், வைத்தியர்களும் பாரம்பரிய வைத்திய சிகிச்சை முறையை அறிந்துகொண்டு அதன் மூலம் சிறந்த பயன்களைப் பெறவேண்டும்.

 பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய வைத்திய முறையை செய்து வருகின்ற பாரம்பரிய  வைத்தியர்களின் வைத்தியத் துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும், அந்த வைத்திய முறைகளை அழிய விடக்கூடாது என்ற நோக்கில் பாரம்பரிய வைத்தியர்களுக்கு சகல வழிவகைகளையும் செய்து கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித் சேனராத்தன மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகல்லாகமவும் வேண்டிக்கொண்டுள்ளனர்.

 அதற்கமைவாக, இந்தியா தழிழ் நாட்டிலுள்ள மிகப் பிரசித்தி பெற்ற வர்மக்கலை வைத்தியர்கள், அக்குப்பஞ்சர் வைத்தியர்கள் மற்றும் பாரம்பரிய வைத்தியர்களை இந்த முதலாவது சர்வதேச சுதேச மாநாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம். அவர்கள் மூலம் எமது பாரம்பரிய வைத்திர்கள் இந்த வைத்திய சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டு எமது மக்களுக்கு மிகச் சிறந்த சேவையினை வழங்கவேண்டும் என்பதே எமது இலக்காகும்.

இவ்வாறான சர்வேத மாநாட்டுடன் கூடிய வைத்தியக் கண்காட்சியினை 3 வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்த சர்வதேச மாநாட்டுக்கு இந்தியா தழிழ் நாட்டிலிருந்து வருகை தந்த மிகச் சிறப்பு தேர்ச்சிபெற்ற பாரம்பரிய வர்மக் கலை வைத்தியர் வி.பிச்சைமணி, அக்குப்பஞ்சர் வைத்தியத்துறையில் சிறப்பு தேர்ச்சிபெற்ற வைத்தியர்களான என்.சரவணமுத்து மற்றும் என்.ஐயப்பன் ஆகியோர்களுக்கு கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


பைஷல் இஸ்மாயில்
Comments