10.09.18- கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் இருவாரகாலம் கோமாவில்..

posted Sep 9, 2018, 6:17 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள்  பணிப்பாளர் இருவாரகாலம் கோமாவில்!
மூளைநாடி வெடிப்பு ஹெலியில் கொழும்பு விரைவு பரவலாக பிரார்த்தனைகள்..
 
கிழக்குமாகாண சுகாதார திணைக்களத்தின் மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் அம்பாறை பொதுவைத்தியசாலைப் பணிப்பாளருமான வைத்தியகலாநிதி டொக்டர் லங்காதிலக ஜயசிங்க(வயது51)  கடந்த இருவாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிதீவீரசிகிச்சைப்பிரிவில் கோமா நிலையிலுள்ளார்.

அம்பாறையிலிருக்கும்போது ஒவ்வாமையினால் திடீரென ஏற்பட்ட உயர்இரத்தஅழுத்தம் காரணமாக மூளைநாடி வெடித்துள்ளது. 

அம்பாறை பொதுவைத்தியசாலையில் அவரது சுயமுயற்சியின்பேரில் அவுஸ்திரேலிய உதவியுடன் பெறப்பட்ட சீற்றி ஸ்கனிங் இயந்திரம் இயங்கமறுத்ததன்காணரமாக உடனடியாக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

தெற்காசியாவில் அம்பாறை பொது வைத்தியசாலையை முதல்தர வைத்தியசாலையாக பரிணமிக்கவைத்ததுடன் பலதடவைகள் தேசியஉற்பத்தித்திறன் விருதையும் பெறுவதற்கு ஆணிவேராகத் திகழ்ந்த டாக்டர் லங்காஜயசிங்காவை விசேட ஹெலிகொப்டர் விமானத்தில் கொழும்புக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு வைத்தியநிபுணர்களின் நேரடிக்கண்காணிப்பின்கீழ் அதிதீவிரசிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். உடல்நிலையில் பெருமாற்றம் ஏற்படவில்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல்நலம் குணமாகிவேண்டி கிழக்கில் பரவலாக பிரார்தனைகளும் விசேட பூஜைகளும் இடம்பெற்றுவருகின்றன. ஆங்காங்கே உடல்நலம்வேண்டி பதாதைகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.

ஒருகாலகட்டத்தில் கல்முனை ஆதாரவைத்தியசாலையின்வைத்திய அத்தியட்சகராக சீரிய சேவையாற்றியிருந்தார். இவ்வவைத்தியசாலையின் பாரியய அபிவிருத்திக்கான திறவுகோலாக இவர் விளங்கியிருந்தார். வைத்தியசாலையின்முன்பிருந்த பாரிய ஆலமரத்தை வெட்டி வெளிச்சமிட்டபெருமையும் இவரையே சாரும்.

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வளர்ச்சிக்கு மிக்க பக்க பலமாக பல ஆபத்தான வேளைகளிலும் கூட  உதவி நல்கியும் சில காலம் வைத்தியஅத்தியட்சகராகவும் கடமை புரிந்துள்ளதையும் கருத்திற் கொண்டு வைத்தியஅத்தியட்சகர்  வைத்திய கலாநிதி 
இரா முரளீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில்  கல்முனைஆதாரவைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலயத்தில் 'உடல் நலம் வேண்டி' விஷேட பிரார்த்தனையும் வழிபாடும் இடம்பெற்றது.

இவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக¸ வைத்திய அத்தியட்சகராக¸ பணிப்பாளராக ஏறக்குறைய பதினெட்டு வருடங்கள் தொடர்ச்சியாக கடமையாற்றியுள்ளார். எமது நாட்டில் இருந்த இருக்கின்ற சிறந்த சுகாதார துறை நிருவாக அதிகாரிகள் சிலருள் இவரும் ஒருவராகும்.

1952 இல் மத்திய மருந்தகமாக ஆரம்பிக்கப்பட்ட அம்பாரை பொது வைத்தியசாலை 2001 ம் ஆண்டில் இருந்த நிலையிலிருந்து தனது தனித்திறமை விடாமுயற்சிகளாலும் தியாகத்தாலும் அக்காலகட்டத்தில் சுகாதார அமைச்சராக இருந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாரத்ன அவர்களது பக்கபலத்துடனும் மிக மிக உயர் நிலைக்கு கொண்டவந்துள்ளார் என்றால் மறுப்பதற்கு இடமில்லை.

தான் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக பொறுப்பேற்று நிருவகித்த சில மாதங்களுக்குள்ளாகவே வைத்தியசாலையின் தோற்றத்தினையும் அபிவிருத்தியினையும் உயர்த்த பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவியுள்ளதாகவும் அறியக்கிடைத்தது.

அவரது நிருவாகத்திறமையும் செயற்றிறனும் தியாகமும் ஈடு இணையற்றவை. இவற்றை அம்பாறை மக்களும் அம்பாரை வைத்தியசாலையினால் பயன்பெற்றவர்களும் மறக்கப்போவதில்லை.

அவர் நலம்பெற வேண்டும் என பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள்¸ உத்தியோகத்தர் ஊழியர் அனைவரும் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரும் இறைவனை வேண்டி நிற்கின்றனர்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையிலும் விசேட பூஜையும் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

(காரைதீவு  நிருபர்)Comments