10.10.19- கிழக்கில் சம்மாந்துறை வலயம் முதலிடத்தில்..

posted Oct 9, 2019, 6:18 PM by Habithas Nadaraja
கிழக்கில் சம்மாந்துறை வலயம் முதலிடத்தில்..கந்தளாய்வலயம் 2ஆம்இடம்  மூதூர்வலயம் 3ஆம் இடம்.
கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் மன்சூர் தகவல்..


வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கிலுள்ள 17கல்வி வலயங்களில் சம்மாந்துறைவலயம் அதிகூடிய 109வீத அதிகரிப்பைக்காட்டி முதலிடத்தில் உள்ளது.

கிழக்குமாகாணத்தில் கடந்தாண்டு பெற்ற பெறுபேற்றின்படி 2565மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றிருந்தனர். இவ்வாண்டு 3716மாணவர்கள் பெற்றுள்ளனர். 1151மாணவர்களால் அத்தொகை அதிகரித்துள்ளது. அதாவது கிழக்கு மாகாணம் கடந்தாண்டைவிட 55.51வீத வளர்ச்சியை அதிகரிப்பைக் காட்டுகிறது.

இத்தகவலை கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் உறுதிப்படுத்தினார்.

சம்மாந்துறை வலயம் கடந்தாண்டு 97மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றிருந்தனர். இம்முறை அத்தொகை 203ஆக உயர்ந்துள்ளது. அதாவது 109வீதத்தால் அதிகரித்துள்ளது.

மாகாணகல்விப்பணிப்பாளர் மன்சூர் முதலிடம்பெற்ற சம்மாந்துறைவலயத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் தலைமையிலான குழுவினர் மகிழ்ச்சியிலுள்ளனர்.

கிழக்குமாகாணம்.

கிழக்குமாகாணம் கடந்தாண்டு பெற்ற பெறுபேற்றுடன் இந்தாண்டு கிடைத்த பெறுபேற்றை ஒப்பிட்டு மாகாணகல்வித்திணைக்களம் மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி சம்மாந்துறைவலயம் முதலிடத்திலும் கந்தளாய் வலயம்இரண்டாமிடத்திலும் மூதூர் வலயம் மூன்றாமிடத்திலும் வந்துள்ளது. இவ்விருவலயங்களும் 107வீத அதிகரிப்பைக்காட்டியிருந்தன.

நான்காமிடத்தை மட்டக்களப்பு மேற்குவலயமும் ஜந்தாமிடத்தை மகாஓயா வலயமும் ஆறாமிடத்தை திருகோணமலை வடக்குவலயமும் ஏழாமிடத்தை கல்குடா வலயமும் எட்டாமிடத்தை பட்டிருப்புவலயமும் ஒன்பதாமிடத்தை மட்டு.மத்தி வலயமும் பத்தாமிடத்தை அம்பாறை வலயமும் பெற்றுள்ளன.

கிழக்கில் மிகவும் பின்தங்கிய ஆசிரியர்பற்றாக்குறை பெரிதும் நிலவுகின்ற மட்டு.மேற்குவலயம் 81.40வீத அதிகரிப்பையும் கல்குடா வலயம் 60.40வீத அதிகரிப்பையும் காட்டுகிறது.

அடுத்துவரும் ஏழு இடங்களையும் முறையே தெஹியத்தக்கண்டிய திருக்கோவில்கல்முனை கிண்ணியா திருகோணமலை மட்டக்களப்பு அக்கரைப்பற்று ஆகிய வலயங்கள் பெற்றுள்ளன.

கிழக்கில் பலகோணங்களிலும் வளம்குறைந்த பின்தங்கிய எனக்கருதப்படும் வலயங்கள் முன்னணியிலும் வளம்கூடிய வலயங்கள் பின்னணியிலிருப்பதையும் காணக்கூடியதாயுள்ளது.

(காரைதீவு நிருபர்)

Comments