11.10.17- பொறியியலாளராக வந்து நாட்டிற்குச் சேவையாற்றுவதே இலட்சியம்..

posted Oct 10, 2017, 6:19 PM by Habithas Nadaraja   [ updated Oct 10, 2017, 6:33 PM ]
பொறியியலாளராகவந்து நாட்டிற்குச்சேவையாற்றுவதே இலட்சியம்!
அம்பாறைமாவட்ட 2ஆம்நிலை சாதனைமாணவி ஜிவானுஜா கூறுகிறார்!

பொறியியலாளராகவந்து நான் பிறந்த இலங்கைத்திருநாட்டிற்கு குறிப்பாக எனது மண்ணுக்குச் சேவையாற்றுவதே எனது இலட்சியமாகும்.
இவ்வாறு புலமைப்பரிசில் பரீட்சைப்பெறுபேறுகளினடிப்படையில் (தமிழ்மொழிமூலத்தில்) 187 புள்ளிகள் பெற்று அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் நிலையினைப்  பெற்றுச் சாதனை படைத்தமாணவி செல்வி சுதர்சன் ஜிவானுஜா கூறினார்.

பஸ்போக்குவரத்தோ ரியுசன் வசதியோ மேலதிக சொகுசுகளோ இல்லாத மிகவும் பின்தங்கிய பிரதேசமான மல்வத்தை புதுநகரில் இச்சாதனை படைக்கப்பட்டிருக்கின்றது.

இவர் புதுநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் பயில்பவர். இந்தவருடம் கோட்ட மட்ட வலயமட்ட ஆங்கிலதினப்போட்டியில்  முதலிடம் பெற்றுச்சாதனை படைத்தவர்.

கல்முனைக்கல்வி மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை வலயத்தின் சம்மாந்துறைக்கோட்டத்திலுள்ள பின்தங்கிய மல்வத்தை புதுநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைஇரண்டு புதிய வரலாற்றுச்சாதனைகளைப் படைத்துள்ளது.

ஒன்று இந்தப்பாடசாலை மாணவி சுதர்சன் ஜிவானுஜா 187 புள்ளிகளுடன் அம்பாறை மாவட்டத்தில் 2ஆம் நிலையைப்பெற்றவராவார். இரண்டாவது சாதனை என்னவெனில் முதற்றடவையாக இப்பாடசாலையில் 11 மாணவர் சித்திபெற்றமையாகும்.

குறிப்பிடத்தக்க எவ்வித வசதிகளுமற்ற புதுநகரில் சாதாரணகுடும்பச்சூழலைக்கொண்ட ஜிவானுஜாவின் தந்தையார் சுதர்சன் சம்மாந்துறை நீர்ப்பாசனத்திணைக்களத்தில் பிக்அப் சாரதியாவார். குடும்பத்தில் மூத்தபிள்ளை இவர். இவருக்கு அடுத்ததாக இரண்டரை வயதில் மற்றுமொரு குழந்தை உள்ளது.
  
சாதனை மாணவி ஜிவானுஜா கருத்துரைக்கையில்;

நான் இந்தப்பரீட்சையில் நல்லபுள்ளியைப்பெறுவேன் என்ற நம்பிக்கை நிறையஇருந்தது. ஆனால் மாவட்டத்தில் இரண்டாம் நிலைக்குவருவேன் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. 
முதலில் என்னைப்படைத்த இறைவனுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் நன்றியைக்கூறுகின்றேன்.
 
எனது சாதனையை அறிந்தவுடன் எம்மைத்தேடி வந்து பாராட்டிய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி உதவிக்கல்விப்பணிப்பாளர்களான வி.ரி.சகாதேவராஜா எ.கபூர் பா.மே .திட்டஇணைப்பாளர் அச்சிமொகமட் ஆகியோரை எனதுவாழ்வில் மறக்கமுடியாது. மகிழ்ச்சியாகவிருந்தது.

காலையில் 5மணிக்கு துயிலெழுந்து படிப்பேன்.இரவில் 10மணிவரை படிப்பேன். பள்ளியில்மட்டுமே படிப்பு. என்னை நெறிப்படுத்திய அதிபர் சுந்தரநாதன் சேர் நன்கு பயிற்சியளித்துக்கற்பித்த விமலகீதன் சேர் ஆகியோரை வாழ்நாளில் மறக்கமுடியாது என்றார்.

(காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா)Comments