13.03.18- பெண்களுக்கு தேவை சம அந்தஸ்தல்ல பொருத்தமான அந்தஸ்தாகும் - சமுர்த்திப் சமூக அபிவிருத்திப் பணிப்பாளர் சஞ்ஜீவனி..

posted Mar 12, 2019, 6:19 PM by Habithas Nadaraja
பெண்களுக்கு தேவை சம அந்தஸ்தல்ல பொருத்தமான அந்தஸ்தாகும் என சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பணிப்பாளர் ஐ.டி.என்.சஞ்ஜீவனி தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிராம மட்டத்தில் சமுர்த்தி மற்றும் சமூக நல செயற்பாடுகளில் சிறந்து  விளங்கிய மகளிருக்கு 'தைரியத்தாய்' விருது  வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு (08) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக  சமுர்த்தி தலைமையக சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்யின் வழிகாட்டலில் சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா தலைமையில் இடம்பெற்ற   இந்நிகழ்வுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவின் பதில் பணிப்பாளர் ஐ.டி.என்.சஞ்ஜீவனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

இன்று பெண்கள் விண்வெளியில் கால் பதித்தது தொடக்கம் அரச தொழில்துறை வரை முன்னேறியுள்ளனர். எமது நாட்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவோரில் 65 வீதமானவர்கள் பெண்களாவர். இவ்வாறு பெண்கள் ஆண்களுக்கு நிகராக முன்னேறியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இருந்தும் பெண்களுக்கு தேவை சம அந்தஸ்தல்ல பொருத்தமான அந்தஸ்தாகும்.

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் தங்களது குடும்ப வருமானத்தை பொறுப்படுத்தாது சமூகத்தின் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவர்களது பிள்ளைகளை படிக்க வைத்து உயரிய பதவிக்கு கொண்டு வந்த எத்தனையோ தாய்மார்கள் எமது நாட்டிலுள்ளனர். அவ்வாறு இப்பிராந்தியத்திலுள்ள தாய்மார்கள் தெரிவு செய்யப்பட்டு இன்று இந்த மகளிர் தின நிகழ்வில் கௌரவிக்கப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் பெண்களின் தாழ்வுமனப்பான்மை உடைத்தறியப்பட்டு வாழ்வில் முன்னேற வழியேற்படும்.

சமுர்த்தித் திட்டம் வெறும் முத்திரை மானியம் மட்டும் வழங்கும் திட்டமல்ல, மாறாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் குடும்ப வருமானத்தை அதிகரிக்க வைத்து அக்குடும்பத்தினை காலா காலம் நிவாரணம்  பெறும் குடும்பமாக வைத்திறாமல் பலப்படுத்துவதே சமுர்த்தித் திணைக்களத்தின் செயற்பாடாகும். இதனடிப்படையில் இவ்வருடம் 50 ஆயிரம் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வங்கி, நிதிப் பிரிவின் வட-கிழக்கு இணைப்பு அதிகாரி ஐ.அலியார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய பிரதி அதிபர் நஸ்லின் றிப்கா அன்சார், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எம்.அப்துல் கபூர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தனது பிள்ளைகளை கஷ்டத்தின் மத்தியிலும் கல்வியில் உயரிய இடத்திற்கு கொண்டுவந்த மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக பிரிவு மட்டத்தில் தங்களை ஆளுமையுள்ளவர்களாக மாற்றி சமுர்த்தி சிறுகுழு, சமுர்த்தி சங்கங்க செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய பெண்கள் 16 பேருக்கும், சமுர்த்தி திட்டத்தினை கிராம மட்டத்தில் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியதுடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பெண் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 8 பேருக்கும் 'தைரியத்தாய்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பெண் சுயதொழில் முயற்சியாளர் 5 பேருக்கு கடன் வழங்கல் மற்றும் பெண் அதிஷ்டசாலி ஒருவருக்கு 2 லட்சம் ரூபா வீட்டு லொத்தர் காசோலை வழங்கல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கும் நினைப்வுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

(றியாத் ஏ. மஜீத்)




Comments