19.05.20- அனுஸ்காந்திற்கு தேவை அனுதாபமா ஆதரவா..

posted May 18, 2020, 6:37 PM by Habithas Nadaraja
வாழவேண்டிய வயதில் சமுகத்தோடு சகபாடிகளோடு இணைந்து வாழ பழக முடியாவிட்டால் அவன் ஒரு துரதிஸ்டசாலி எனலாம். ஏன் முடியாது? என நீங்கள் வினவலாம்.

ஆம் ஒரு சிறுவன் தனது வலது பக்க கன்னத்தின் மேலாகஅதீத தசைவளர்ச்சி காரணமாக ஒரு கண்ணை இழந்துள்ளான். அதுமட்டுமல்ல அது வலதுபக்க மூக்கு துவாரத்தையும் வாயையும் படிப்படியாக மூடிக்கொண்டுவருகிறது.

அனுஸ்காந்த் ஆலையடிவேம்பு பனங்காட்டைச்சேர்ந்த ஒரு 12வயதுச் சிறுவன். அவன் ஒரு வகையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான்.
அவனுக்கு இன்று தேவை அனுதாபமா? ஆதரவா? என்று கேட்டால் ஆதரவுதான் தேவை என்று அடித்துச்சொல்லலாம். ஏனெனில் அவர்களது நிலைமை அப்படி.

அவனை மீட்டெடுக்க இச்சிறுகட்டுரை உதவலாம் என்ற நோக்கில் வரையப்படுகிறது.

அவனது வரலாறு

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பழம்பெரும் பனங்காடு என்ற கிராமம்தான் அவன்பிறந்த கிராமம்.
பனங்காடு வைத்தியசாலை வீதியிலுள்ள தனது வீட்டில்   2008.08.23 ஆம் திகதி பிறந்தான். தந்தை பெயர் டேவிட் சிவானந்தராஜா தாயார்பெயர் உதயன் சுமதி. இவர்களுக்கு 3பிள்ளைகள். .

அனுஸ்காந்த் குடும்பத்தின் மூத்தபிள்ளை. பனங்காட்டிலுள்ள பாடசாலையில் பயின்றுவந்த நேரம் இவ்வியாதி அவனைப்பீடிக்க ஆரம்பித்தது.

அதாவது வலது பக்க கண்ணுக்கு கீழுள்ள கன்னப்பகுதியில் ஒருவித அதீத சதை வளர்ச்சி தென்பட்டது. பெற்றோர் தமது மூத்தஆண் பிள்ளைக்கு இவ்வாறு நேர்ந்துவிட்டதே என்றெண்ணி கவலையுற்று இருக்கின்ற பணத்தை வைத்தும் கடன்பட்டும் போகாத ஆஸ்பத்திரி இல்லை காட்டாத வைத்தியர் இல்லை.

காலம் செல்லச்செல்ல அழகான முகத்தின் வலது பக்கத்தை இந்தத்தசை பூரணமாக ஆக்கிரமித்துவிட்டது. முகம் சற்று விகாரமானது. பாடசாலைக்குச்செல்வதை தாழ்வுமனப்பான்மை காரணமாக தவிர்த்துக்கொண்டான். சகபாடிகளுடனும் ஆடிப்பாடி விளையாடி மகிழ்வதை குறைத்துக்கொண்டான்.

சந்தித்த சந்தர்ப்பம்.

சிறுவனையும் அவனது பெற்றோரான சிவானந்தராஜா சுமதி ஆகியோரையும்  அண்மையில் (ஏப்ரல்22) பனங்காடு நாககாளி அம்மன் ஆலய வளாகத்தில் கொரோனா உலருணவு விநியோகத்திற்குச்சென்ற நாம் சந்திக்கநேரிட்டது.

சிறுவனைக்கண்டதும் எம்முள் ஓர் அனுதாப உணர்வு. அவனும் நிவாரணம் பெற வந்திருந்தான். கூடவே பெற்றோரும்.
அவர்களை அழைத்து தகவல்களைப் பெறுமாறு என்னுடன் வந்த சமுகசெயற்பாட்டாளர்களான தவிசாளர் கி.ஜெயசிறில் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் வேண்டிக்கொண்டனர். ஏதாவது உதவியை பெற்றுக்கொடுக்கலாமென்ற நோக்கில் அவனையும் பெற்றாரையும்  அழைத்து அன்புடன் விசாரித்து தகவல்களைப்பெற்றோம்.

பெற்றோர் கருத்து:

குடும்பத்தில் மூத்தமகனான அவனை பாராட்டி சீராட்டி வளர்த்தோம். நாம் ஏழைகள். காலப்போக்கில் இவ்வியாதி பீடித்தது. நாம் காட்டாத டொக்டர் இல்லை.மட்டக்களப்பு கொழும்பு குருநாகல் கண்டி அம்பாறை போன்ற வைத்தியசாலைகளுக்கு கொண்டுசென்றுகாட்டினோம். இறுதியாக இங்கு அவரை குணப்படுத்தமுடியாது இந்தியா கொண்டுசென்றால் காப்பாற்றலாம். 3லட்சருபா செலவாகும் என்றார்கள். அதாவது எமது இலங்கை பணத்தின்படி 10லட்சருபா செலவாகும். எம்மைப்பொறுத்தவரை அன்றாட சாப்பாட்டிற்கே திண்டாடுகிறோம். என்றனர்.

உதவுங்கள்.

பரோபகாரிகள் நல்லுள்ளங்கள் இச்சிறுவனுக்கு உதவமுடியும். பெற்றோரது தொலைபேசி இலக்கங்கள் வருமாறு
தகப்பன் டேவிட் சிவானந்தராஜா (793223935)  TP No. 0773566171
தாய் உதயன் சுமதி (887712271)

தனக்கு சமூகத்தின் மத்தியில் வாழ வெட்கமாகவும் பயமாகவும் உணர்கின்றேன் நான் குணமடைய உதவிக்கரம் நீட்டுங்கள்  என்று பாதிக்கப்பட்ட சிறுவன் சிவானந்தராஜா அனுஷ்காந்த் தனது ஆதங்கத்தை  இவ்வாறு வெளிப்படுத்தினார்.

எனவே இச்சிறுவனுக்கு அனுதாபம் தெரிவிப்பதைவிடுத்து ஆதரவு தெரிவித்து அவனது வாழ்வில் ஒளியேற்றுங்கள்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு


Comments