20.10.19- சிறு தோட்ட உடமையாளர்களாக தோட்ட தொழிலாளர்கள் மாறவேண்டும் என்ற எம் இலக்கை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்.

posted Oct 19, 2019, 7:08 PM by Habithas Nadaraja
சிறு தோட்ட உடமையாளர்களாக தோட்ட தொழிலாளர்கள் மாறவேண்டும் என்ற எம் இலக்கை சஜித் ஏற்றுக்கொண்டுள்ளார்
அமைச்சர் மனோ கணேசன்

 பெருந்தோட்டதுறை மறுசீரமைக்கப்பட்டு, தோட்ட தொழிலாளர்கள், சிறு தோட்ட உடைமையாளராக மாற்றப்படுவார்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர் தொடர்பாக விசேட ஜனாதிபதி செயலணி (Special Presidential Task Force on Plantation Community) உருவாக்கப்படும் என்ற இரண்டு பிரதான யோசனைகளை எங்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளமை இந்நாட்டு தோட்ட தொழிலாளர் வாழ்வில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த அடித்தளம் இட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.   

 இரத்தினபுரி, ருவன்வெல்ல பிரதேசங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியால், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மனோ மேலும் கூறியுள்ளதாவது,

இரத்தினபுரியில் இன்று பெருந்தொகையாக கூடியுள்ள உங்கள் முன் சஜித் பிரேமதாச இந்த உறுதிமொழிகளை வழங்குகிறார். இது தூரநோக்குடன் தொழிலாளர்களின் வாழ்வை அடியோடு மாற்றி இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக உங்களை மாற்றும் நோக்கங்களை கொண்டவையாகும். ஆரம்பத்தில் இருந்து தொடரும் தொழிலாளர்கள் என்ற அடையாளம் மாறி புதிய கிராமத்தவர் என்ற அடையாளம் உருவாகும்.

 எமது அரசாங்கத்தின் அடுத்த கட்டம் நவம்பர் பதினெட்டாம் திகதி ஜனாதிபதி சஜித் தலைமையில் ஆரம்பமாகும். அதையடுத்து, இந்த உறுதிமொழிகள் நடைமுறையாகும். அதை நாம் கண்காணித்து நடைமுறையாக்குவோம்.  தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாதனை பட்டியலில் இவையும் அடங்கும்.

 அத்துடன் இன்னொரு காரியமும் இங்கே நடக்கின்றது. நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே இரத்தினபுரி, கேகாலை மாவட்ட  கூட்டங்களுக்கு வழமையாக, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பெரும்பான்மை கட்சி அமைப்பாளர்களால், நமது மக்கள் "கூட்டம் காட்ட" மாத்திரம் அழைத்து வரப்படுகிறார்கள். அதை மாற்றி இம்மாவட்ட தமிழ் மக்களை நாம் இன்று அரங்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம். தேர்தல்களில் தமது வாக்கை அள்ளி அளித்தாலும், தேசிய அரங்கில் இருந்து, ஒளித்து வைக்கப்பட்டிருந்த, இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழ் வாக்காளர்களை இப்போது வெளிச்சத்துக்கு நாம் கொண்டு வந்துள்ளோம்.

எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவை அழைத்து வந்து, அவரை இம்மாவட்ட தமிழ் மக்களை நேரடியாக சந்திக்க செய்து, உங்கள் வெற்றியில் "நாங்களும் பங்காளிகள்" என இம்மாவட்ட தமிழ் மக்களின் இருப்பை சஜித்துக்கு உணர்த்தியுள்ளோம்.

இது எங்கள் அரசாங்கமானாலும், அதற்குள் எங்கள் பலத்தை காட்ட வேண்டும் என்பது எமது நிரந்தரமான கொள்கை. இந்த கொள்கையே இன்று இந்த கூட்டங்களை நடத்த ஏதுவாக அமைந்தது. நுவரேலியா மாவட்டத்தில் எங்கள் கூட்டணியின் வழமையான பிரமாண்டமான கூட்டம் 10ம் திகதி தலவாக்கொல்லையில் நடைபெறும். இதைத்தவிர, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு, கண்டி ஆகிய இடங்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் விசேட கூட்டங்களில் சஜித் பிரேமதாச கலந்துக்கொள்கிறார்.  இதன்மூலம் சஜித் பிரேமதாச, நமது மக்களின் இருப்பை  உணர்கிறார். அவரது வெற்றியில் எமது பங்கை புரிந்துக்கொள்கிறார். எமது பிரச்சினைகளில் பேசவும், தீர்வுகளை முன் வைக்கவும் வேண்டிய நிலைமையை முகம் கொடுக்கிறார். அதுவே இன்ற இங்கே நிகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும்.Comments