27.06.22- கிழக்கில் அரைகுறையாக இயங்கிய பாடசாலைகள்..

posted Jun 26, 2022, 6:35 PM by Habithas Nadaraja
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வார காலமாக பாடசாலைகள் திறக்கப்பட்ட போதிலும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வரவு குறைவாக இருந்த காரணத்தினால் அரைகுறையாக இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

 நாட்டில் தலைநகரம் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் பாடசாலைகள் மூடப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டு இருந்தன.இருந்த பொழுதிலும் பெட்ரோல் டீசல் எரிபொருள் பிரச்சனை காரணமாக அதிகமான ஆசிரியர்கள் பாடசாலைக்கு வரவில்லை. மாணவர்களின் வரவும் குறைவாகவே இருந்தது.

 மேலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணி இடம் பெறுவதால் அவர்களின் வரவும் இல்லாமல் இருந்தது.

 மொத்தத்தில் ஆசிரிய மாணவர்கள் குறைவு காரணமாக பாடசாலைகள் சீராக இயங்க வில்லை.
 பாடசாலைக்கு வருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வி கல்லூரி பயிலுனர்களைக் கொண்டு பாடங்களை நடத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.

கல்முனையிலுள்ள பிரபல கல்லூரியில் 168 ஆசிரியருக்குப் பதிலாக வெறும் அறுபத்தி ஐந்து ஆசிரிய சமூகம் அளித்தனர் .50 வீதமான மாணவர்களே சமூகம் அளித்தனர் என்று அதிபர் கவலையுடன் குறிப்பிடுகின்றார்.

பஸ் ஓடாமல் விட்டால் நாங்களும் வரமாட்டோம் என்று வந்த ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் எவ்வாறு பாடசாலை நடாத்துவது? என்று அதிபர் அலுத்துக் கொண்டார்.

பெரும்பாலான கிராம பாடசாலைகள் ஓரளவு இயங்கினாலும் நகர் பாடசாலைகள் இயங்குவதில் சிக்கல் தோன்றி வருவதாக தெரிகிறது.

இன்று  முதல் பாடசாலைகள் மேலும் ஸ்தம்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது .அதிபர் ஆசிரியர்களுக்கு என பிரத்தியேகமாக இன்னும் பெட்ரோல் டீசல் விநியோகம் இடம்பெறவில்லை.

 இதனால் பாடசாலைகளை தொடர்ந்து நடத்த முடியாத ஒரு சூழல் கல்வித் திணைக்களத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது.
மேலும் எரிபொருள் பிரச்சனை காரணமாக அதிபர் ஆசிரியர்கள் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
நாட்டில் நிலவும் மிகவும் மோசமான எரிபொருள் நெருக்கடியினால் பாடசாலைக்கு செல்வதற்கும் தரிசனம் செய்வதற்கும் இயலாத துர்ப்பாக்கிய நிலை தோன்றி வருவதாக கல்வி சமுகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

பாடசாலை தரிசனம் செய்ய முடியாதிருப்பதாக கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் திண்டாடுகின்றார்கள்.

 மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்று வருகிறார்கள். பலர் மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக துவிச்சக்கரவண்டியை பயன்படுத்துகிறார்கள் இருந்தபோதிலும். தூர பாடசாலைகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கின்றது.

 அம்பாறை மாவட்டத்தில் ஒரு சிறிய எரிபொருள் நிலையத்திலேயே மட்டுப் படுத்தப்பட்ட அளவில் பெட்ரோல் வழங்கப்படுகிறது. 

அதற்காக ஐந்து மணி நேரம் ஐந்து கிலோமீட்டர் வரிசையில் நின்று ஆக 500 ரூபாய்க்கு மாத்திரம் பெட்ரோல் வழங்கப்படுகிறது.

 இந்த ஒரு லிட்டர் பெட்ரோலில் பாடசாலைக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

 இதனால் பாடசாலைக்கு செல்ல முடியாத பாடசாலையை தரிசனம் செய்ய முடியாத துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டிருப்பதாக அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் மனக்கவலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

இதேவேளை சில கல்வி அதிகாரிகள் ஏனையோரை வாரத்தில் 4 தினங்கள் கட்டாயம் பாடசாலை தரிசனம் செய்ய வேண்டும் என்று மனிதாபிமான மற்ற முறையில் பணித்து வருவதாக புகார் தெரிவிக்கபடுகிறது.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்
Comments