27.11.19- எமது ஜனாதிபதியின் அமோகவெற்றிக்கு சாணக்கியத்தலைவனும் சத்தியநாயகனும்தான் காரணம்..

posted Nov 26, 2019, 5:30 PM by Habithas Nadaraja
எமது ஜனாதிபதியின் அமோகவெற்றிக்கு சாணக்கியத்தலைவனும் சத்தியநாயகனும்தான் காரணம்
அவர்களுக்கும் மக்களுக்கும் நன்றிகள் சம்மாந்துறைத்தொகுதி  பொதுபெரமுன ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளர் முஸம்மில்..

புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் எமது தலைவர் கோட்டபாய ராஜபக்சவின் அமோகவெற்றிக்கு முஸ்லிம்களின் சாணக்கியத்தலைவனும் சத்தியநாயகனும்தான் காரணம். கூடவே த.தே.கூட்டமைப்பும். எனவே அவர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கும் நன்றிகள்.

இவ்வாறு பொதுஜனபெரமுனை  ஜனாதிபதிதேர்தலின் கோட்டாபய ராஜபக்சவின் சம்மாந்துறைத்தொகுதி இணைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளருமான வை.எம். முஸம்மில் தனது வாழ்த்துச்செய்தியில் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த முஸ்லிம் தலைமைகள் வடக்குகிழக்கில் தேர்தல் காலத்தில் கக்கிய இனவாதமும் வியூகமும் பெரும்பான்மை சிங்களமக்களை வெறித்தனத்துடன் வாக்களிக்கவைத்தது.

வடக்கு கிழக்கில் இவர்கள் பேசியபேச்சுக்கள் மொழிபெயர்க்கப்பட்டு சிங்களமத்தியில் வழங்கப்பட்டதன் காரணமாக அவர்கள் ஒருபோதுமில்லாதவாறு அதிகப்படியான வாக்குகளை அள்ளிவீசினார்கள்.

சுயமாக முஸ்லிம்களை வாக்களிக்கவிட்டிருந்தால் இன்று ஜனாதிபதியின் வெற்றியின்பங்காளராக முஸ்லிம்சமுகம் விளங்கியிருக்கும்.

தங்களின் போலியான வரப்பிரசாதங்களுக்காக தங்களை நம்பிய முஸ்லிம் சமுகத்தை காட்டியும் கூட்டியும் கொடுத்துள்ளீர்கள். இனியாவது வியூகம் வகுக்கும்போது மக்கள் பாதிப்படையாவண்ணம் செயற்படுங்கள்.
மேலும் மேலும்மக்களிடம் வந்து பொய்யை மெய்யாக்கி புழுகுமூட்டைகளுடன் வருவார்கள். ஏனெனில் அடுத்தடுத்து தேர்தல்கள் வருகின்றன.

இலங்கை சுதந்திரம் கிடைத்த காலம்தொடக்கம் முஸ்லிம்கள் சுயகௌரவத்துடன் நாடெங்கிலும் வாழ்ந்துவந்தனர். ஏன் பன்சலயில்கூட பொருளாளராக முஸ்லிம்கள் இருந்துள்ளனர்.அப்படிப்பட்ட முஸ்லிம்களை தங்களின் சுயலாபத்திற்காக நடுத்தெருவில் கொண்டுவந்து விட்டுள்ளீர்கள்.இன்று பின்கதவால் அமைச்சுப்பதவி கேட்டு கொழும்புக்கு ஓடுகிறீர்கள்.

வடக்கு கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம்தமிழ் மக்கள் போட் சுமார் 3வீத வாக்குகள் இன்று இரண்டாம் கட்ட எண்ணுதல் இல்லாமல் கோட்டபாய வெற்றியீட்ட காரணமாயிற்று. அதுமட்டுமல்ல வடக்குகிழக்கு தமிழ்மக்களையும் காப்பாற்றியுள்ளது.

இதவரைக்கும் தென்கிழக்கு அலகு கரையோர அலகு கறங்காவட்டை வட்டமடு என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி கண்டது என்ன? ஏதாவது ஒன்றைத்தானும் செய்யமுடிந்ததா? இல்லை.தமிழ்த்தலைமைகளும் அப்படியே. கடல்கடந்த தமிழ்மக்கள் சுகபோகமாக வாழ்வதற்கு இப்பிரச்சினையை பூதாகரமாக்கிவருகிறார்கள். அதற்கு இங்குள்ள தலைமைகள் துணைபொகின்றன. ஆனால் அப்பாவித்தமிழ்மக்கள் உரிமையின்றி அபிவிருத்தியின்றி ஏனைய சமுகத்திடம் கையேந்திநிற்கின்றன.

எனவே இந்த இழிநிலையை தவிர்க்கவேண்டுமானால் வரும் அரசில் பங்காளராகி அமைச்சுப்பொறுப்புகளை ஏற்று தங்கள் மக்களுக்கு சேவையாற்றமுன்வாருங்கள்.

அதைவிடுத்து வெறும் அரசியலுக்காக மக்களை பகடைக்காயாக்காதீர்கள்.

உங்களின் புத்தியற்றவேலையால் இன்று தனிச்சிங்கள வாக்குகளால் நாட்டில் ஆட்சிபீடமேறமுடியும் என்ற உபாயத்தை அவர்கள் கற்றுக்கொள்ள நீங்கள் வழிசமைத்திருக்கிறீர்கள்.இனியாவது தங்களுக்கான சுயநலஅரசியலைவிட்டுவிட்டு மக்களுக்காக அரசியல் செய்யுங்கள்.

எனவே புதியதொரு அரசியல்கலாசாரத்தை ஏற்படுத்தி நாட்டைக்கட்டியெழுப்ப சகல ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராகுங்கள்.

காரைதீவு  நிருபர்


Comments