28.06.19- அமைச்சர் மனோகணேசன் அவர்களினால் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு..

posted Jun 27, 2019, 5:35 PM by Habithas Nadaraja   [ updated Jun 27, 2019, 6:18 PM ]
கதிர்காமம் ஆடிவேல் விழாவையொட்டிய இவ்வருடத்திற்கான காட்டுப்பாதை உகந்தமலை முருகனாலயத்தில் விஷேட பூசை வழிபாடுகளின் பின் நேற்றைய தினம்(27.06.2019) திறந்து வைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு,அரசகரும மொழிகள்,சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மாண்புமிகு மனோகணேசன் , பாரரளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேலும் அம்பாறை மாவட்ட பாரரளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அம்பாறை அரசஅதிபர் டி.எம்.எல்.திசாநாயக்க மொனராகல அரசஅதிபர் திருமதி பத்மகுலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

இம்முறை ஆடிவேல்விழா எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று உகந்தமலை முருகனாயல ஆடிவேல்விழாவும் இக் காலத்தில் நடைபெறும்.

கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை நேற்றைய தினம் 27.06.2019 ஆம் திகதி காலை திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 13 தினங்கள் திறந்திருக்கும் இக் காட்டுப் பாதையானது 09.07.2019 ஆம் திகதி மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது என அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் வே.ஜெகதீசன் தெரிவித்தார்.

இதற்கமைய 13 தினங்கள் மாத்திரம் காட்டுப்பாதையூடாக அடியவர்கள் பாதயாத்திரை மேற்கொள்ள முடியும்.

தற்போது வடக்கு கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் உகந்தமலை முருகனாலயத்தை வந்தடைந்துள்ளனர். மேலும் பல அடியார்கள் அம்பாறை மாவட்டத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

முதற்கட்ட பாதயாத்திரைக் குழுவினர் அனைவரும் நேற்று 26 ஆம் திகதி உகந்தை மலை முருகன் ஆலயத்தை வந்தடைந்ததாக ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.

இம்முறை காட்டுப்பாதையூடாக பயணிக்கும் பக்தர்களின் நலன்கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளும் காடுகளில் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கை யில் படையினர் மற்றும் பிரதேச சபைகள் ஈடுபட்டுள்ளன .

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையானது தினமும் 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது. அடியார்களின் பாதுகாப்பு கருதி காடுகளுக்குள் தனியாக உட்பிரவேசிப்பதற்கு இம்முறை அனுமதிக்கப்படமாட்டார்கள். குழுக்களாகவே காட்டுக்குள் செல்ல அனுதிக்கப்படுவார்கள்.

அனைவரும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையினை எடுத்துவரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments