30.06.20- ஆற்றுவாய் வெட்டப்படுவது தொடர்பில் மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்த தெளிவுபடுத்தல்..

posted Jun 29, 2020, 6:13 PM by Habithas Nadaraja
அம்பாறை மாவட்ட கரைவாகு வட்டைநெல்வயல் கண்டங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை வடிந்தோடச்செய்வதற்கு மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பில் கூட்டமொன்று  (28.06.2020) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீஸ்வரன் , மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீன்பிடி திணைக்களம் , அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள் , நன்னீர் மீனவ சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த விசேட கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.சி.எம்.சியாட் கருத்து வெளியிடுகையில் தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சியான சூழலில் ஒன்பது பிரதேச செயலகப்பிரிவுகளில் வரட்சி நிலவுவதால் வவுசர்கள் மூலம் 32 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டுவருவதாகவும் இன்றைய சூழ்நிலையில் முகத்துவார ஆற்றுவாய் வெட்டப்பட்டால்14 பிரதேச செயலக பிரிவுகளிலும் பாரிய குடிநீர் பிரச்சினை ஏற்படுமென்று குறிப்பிட்டார்.

மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் எஸ்.ராஜகோபாலசிங்கம் கருத்து வெளியிடுகையில் மட்டக்களப்பு வாவியின் நீர்மட்டம் தற்போது 0 2 அடி மாத்திரமே உயர்ந்திருப்பதால் இன்னும் 6 அடி நீர் உயர்ந்தால் மட்டுமே நீர்மட்டம் சமநிலைக்கு வரும். இந்நிலையில் ஆற்றுவாயை வெட்டினால் கடலுக்குள் நீர் செல்லுமா என்பது கேள்விக்குறியாகும். அதுமாத்திரமின்றி வயல் நீர் வந்தால் உரம் கிருமிநாசினி கலந்த நீர் உட்புகுந்து மட்டக்களப்பு வாவியின் சுற்றாடல் பெரிதும் பாதிக்கப்பட்டு மீனினங்கள் அருக கூடிய சந்தர்ப்பம் ஏற்படுவதுடன் கூடியளவு கடல்நீர் வாவிக்குள் வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனக்குறிப்பிட்டார்.

இதுதவிர மீன்பிடி திணைக்கள அதிகாரிகளும் மீனவர் சங்க பிரதிநிதிகளும் கருத்து வெளியிடுகையில் ஆற்றுவாய் முன்கூட்டியே வெட்டப்பட்டால் மட்டக்களப்பு வாவியை நம்பி மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் 15 ஆயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட சந்தர்ப்பம் ஏற்படுமென்று தெரிவித்தனர். இத்துடன் இந்த விசேட கூட்டத்தில் மாவட்டத்தின் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள் பலரும் ஆற்றுவாய் முன்கூட்டியே திறப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படுமென்று இங்கு விவரமாக எடுத்துக்கூறினர்.

முகத்துவாரம் ஆற்றுவாயை வெட்டுவதற்கு அங்கீகாரமும் ஆலோசனையும் வழங்கும் துறைசார்ந்த அதிகாரிகளினால் முன்வைக்கப்ட்டு இச்சந்தர்ப்பத்தில் வெட்ட முடியாதென தீர்மானம் எடுக்கப்பட்டபோதிலும் இனம்தெரியாதவர்கள் குறித்த ஆற்றுவாயை சட்டவிரோதமாக வெட்டிவிட முயற்சிகளை எடுத்தவேளை பிரதேச மீனவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசாரால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


Comments